Tuesday, August 20, 2019

வதம்




அன்புள்ள ஜெ

நலம்தானே

வெண்முரசின் உச்சகட்டம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதன் வீச்சை உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். பல கொந்தளிப்பான தருணங்களை பேச்சிலும் சொன்னீர்கள். துரியோதனனின் இறப்புதான் வெண்முரசின் உச்சம். அப்படித்தான் இருக்க முடியும். ஏனென்றால் இந்தியா முழுக்க இந்த ‘வத’ங்கள்தான் புராணங்களின் மையமாக உள்ளன. விஷ்ணுவால் வீழ்த்தப்பட்டவர்கள் அனைவருமே சிவபக்தர்கள் என்பது ஓரு கவனிப்பிற்குரிய விஷயம். ராவணன் மட்டுமல்ல ஹிரண்யகசிபு உட்பட பலரும். இந்த நுட்பமான அம்சம் சங்கரரின் ஷன்மத சங்ரகத்திற்குப்பின்னர் மழுப்பப்பட்டது.

இந்தக்கோணத்தில்தான் பாண்டவர்களின் மகன்களைக்கொல்லப்போகும் அஸ்வத்தாமனை சிவபெருமான் நேரில் வந்து வாழ்த்தி அனுப்பும் காட்சி பொருள்கொள்கிறது. மிக எளிமையாக இதை சைவ வைணவப் பூசலாக நான் பார்க்க நினைக்கவில்லை. வெவ்வேறு பண்பாட்டுக் கலவைகளால் ஆன இந்த நாட்டின் தொன்மையான மரபைப் புரிந்துகொள்ள உதவும் குறிப்புகளகாவே இவற்றை நான் பார்க்கிறேன்.

சங்கர்