Tuesday, August 20, 2019

கிருதவர்மனும் அஸ்வத்தாமனும்




அன்புள்ள ஜெ

கிருதவர்மனும் அஸ்வத்தாமனும் துரியோதனனுக்காக பழிவாங்கும்பொருட்டு அடையும் வெறியை கூர்ந்து வாசித்துக்கொண்டிருந்தேன். அதை எப்படிப் புரிந்துகொள்வது? அதற்கு பல க்ளூக்களை முன்னாடியே வெண்முரசு வழங்கியிருக்கிறது. கிருதவர்மன் பேராசைகொண்டவன். ஆணவம் நிறைந்தவன். தன்னை இளைய யாதவருக்குச் சமானமானவராக நினைப்பவன். அதேபோல அஸ்வத்தாமனின் க்ரூரமும் சொல்லப்பட்டுள்ளது. பகனின் அரசனை அவன் அழிக்கும் காட்சியில் எல்லையற்ற மூர்க்கம் வெளிப்படுகிறது.

அவர்களின் ஆணவத்தைத்தான் இங்கே பழிவாங்கும் வெறியாக மாற்றிக்கொள்கிறார்கள். பழிவாங்குவேன் என்பதை விட நான் பழிவாங்குவேன் என்பதுதான் முக்கியமானதாக உள்ளது என்றுபடுகிறது. ஆனால் க்ருபர் கொஞ்சம் ஆச்சரியம். ஆனால் மேலும் ஆச்சரியங்கள் பின்னாடி வரவிருக்கின்றன. அதை விடுவோம்.

ஆனால் க்ருபரின் பிரச்சினை என்ன? மகாபாரதத்தில் அது சொல்லப்படவில்லை. அவர் ஏன் பழிவாங்கும் வெறியை அவ்வளவு அடைந்தார்? அவர் துரியோதனனுக்கு அவ்வளவு நெருக்கமானவர் அல்ல. அவர்தான் பாண்டவர்களுக்கும் ஆசிரியர். துரோணரைத் தொடர்ந்து அவரும் துரியோதனனை ஆதரித்தார் அவ்வளவுதான். ஆனால் அவருடைய குணச்சித்திரவார்ப்பில் எங்கேயுமே இவ்வளவு மூர்க்கம் இல்லை. அதை வெண்முரசு ஒருவகையாகச் சொல்ல முயல்கிறது. உள்ளே அடக்கி அடக்கி வைத்து வாழ்ந்தவர் இப்போது கடைசியில் ஒரேயடியாக வெடிக்கிறார். அதாவது இது ஒருவகையான உளச்சிக்கலின் வெளிப்பாடு. ஆகவேதான் அதிகமாகப்பேசாதவர் பேசித்தள்ளுகிறார். அவரை வகுத்துக்கொள்ள முழுமையாகவே அவரை ஆரம்பம் முதல் வாசிக்கவேண்டும் என நினைக்கிறேன்.

அர்விந்த்