Monday, August 19, 2019

இடமுலை



இடமுலையை தொட்டு அதைத் திருகி ஒரு குவளை என எடுத்து அவனிடம் நீட்டினாள். என்ற வரி எனக்கு ஒரு திடுக்கிடலை அளித்தது. அச்வத்தாமன் முன் வருபவள் மூதேவி என்னும் ஜ்யேஷ்டா தேவி. ஸ்ரீதேவியின் தமக்கை. சில இடங்களில் இவளை ஏழு அன்னையரில் ஒருவராக வழிபடுகிறார்கள். இந்நாவலில் வெவ்வேறு வகையில் வந்துகொண்டே இருக்கிறாள். துச்சாதனன் சுபாகு உள்ளிட்ட பலருக்கும் அவள் காட்சி கொடுக்கிறாள். அவர்களுக்கு அமுதத்தை அளிக்கிறாள்.

அஸ்வத்தாமனை எதிர்கொள்ளும்போது அவன் அந்த வஞ்சத்தின் ஆற்றலை முழுமையாக அடையவேண்டும் என்றால் அவன் அதன்பின் மங்கலம் அழகு சுவை எல்லாவற்றையும் துறந்துவிடவேண்டும் என்று சொல்கிறாள். அதன்பின் அவள் கைநீட்டும்போது நறுமணமும் நல்ல இசையும் எல்லாம் உருவாகின்றன. அதாவது அவளே தனக்கான மங்கலங்களை உருவாக்குகிறாள் அவள் அஸ்வத்தாமனுக்கு அமுது கொடுக்கும்போது இடமுலையை திருகி எடுத்து கிண்ணமாக்கிக் கொடுக்கிறாள்

இடமுலையை திருகியவள் கண்ணகி.அவள் மதுரையை எரித்தாள். அச்வத்தாமனும் அழிவுக்காகத்தான் சென்றுகொண்டிருக்கிரான். இந்த விசித்திரமான இணைப்பு ஒற்றை வரியில் கடந்துசெல்கிறது. இதற்கு நம் மரபில் ஏதேனும் தொடர்பு உண்டா? முலைகுறைத்தல் அமங்கலமாக கருதப்படுகிறதா?

செல்வக்குமார்