Saturday, August 31, 2019

பெருந்தந்தை





அன்புள்ள ஜெ,

துரியோதனனின் குணச்சித்திரம் மெல்லமெல்ல வெண்முரசிலே உருவாகி வருகிறது. நாவல் முழுக்க வந்துகொண்டே இருக்கும் பல்வேறு பெருந்தந்தையரின் சில அம்சங்கள் அவனிடம் கூடியிருக்கின்றன. ஒன்று அவனிடமிருக்கும் யயாதி. இன்னொன்று தீர்க்கதமஸ். அவன் அவர்களைப்போல பெண்மேல் காமம் கொள்ளவில்லை. இதை வியாசர் மிகத்தெளிவாகவே பிரித்துக்காட்டியிருக்கிறார். அவனுக்கு திரௌபதிமேல் ஆசை இல்லை. எந்தப்பெண்ணையும் கவர நினைக்கவில்லை. அவனுடைய ஆசை மண்மீது மட்டுமே. அந்த ஆசை குருட்டுத்தனமானது. பெருந்தந்தையர் எல்லாமே அவனைப்போலத்தான் இருக்கிறார்கள். திருதராஷ்டிரர் கூட அப்படித்தான் இருக்கிறார்.

அவனுடைய பெருந்தந்தை என்ற குணச்சித்திரம் இந்தியாவில் மிகப்பரவலாக இருப்பது. அதாவது மகாபாரதத்தின் வியாசர் எழுதியதைக் கடந்த வடிவங்கள் இந்தியாவில் உண்டு. துரியோதனனை மண்ணில் மிகப்பெரிய வடிவமாக அமைத்து வழிபடும் இருபதுக்கும் மேற்பட்ட இடங்கள் இந்தியாவிலுண்டு. அவர்கள் அவனை தந்தை என்றுதான் வழிபடுகிறார்கள். துர்மதியன் என்று ஒதுக்குவதில்லை. ஒரு கிளாஸிக் ஒரே நாட்டுக்கு இரண்டு அர்த்தங்களை அளிப்பதை மகாபாரதத்தை வாசித்தால்தான் உணரமுடியும். நீங்கள் இந்த துரியோதனனை ஃபோக் மரபிலிருந்து எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்.

சாரங்கன்