Thursday, August 29, 2019

புதுவை வெண்முரசு கூடுகை அனுபவம்அன்புள்ள ஆசிரியருக்கு..     

எத்தனையோ தயக்கத்துடனும் அச்சத்துடனும்தான் புதுவை வெண்முரசு கூடுகைக்கு வந்தேன். பலமுறை வர எண்ணி தயங்கி பின் அதனைக் கைவிட்டு, இப்போதுதான் என்னை நானே உடைத்துக் கொண்டு வந்திருக்கிறேன்.

ஐந்து மணிக்கே முகவரியைத் தேடி வீட்டைக் கண்டுபிடித்து உறுதி செய்துகொண்டேன்.  அப்போதிருந்து மனம் படபடக்கத் துவங்கிவிட்டது. ஆறுமணிவரை அதே தெருவில் சுற்றிக் கொண்டேயிருந்தேன். என் தகுதி நானறிவேன் என்பதால் அப்போதுகூட திரும்பிவிடவே எண்ணினேன்.  இருந்தும் ஏதோவொன்றால் திரும்ப இயலாமல் அங்கேயே நின்றிருந்தேன். ஆறுமணிவரை அந்த வீட்டிற்கு யாரும் வருகிறார்களா என்று கவனித்துக்கொண்டேயிருந்தேன்.
யாரும் உள்ளே போனமாதிரி தெரியவில்லை. ஒருவேளை கூட்டம் நடந்துகொண்டிருக்கிறதோ என்ற ஐயம் வர, தயங்கித் தயங்கி உள்ளே வந்தேன். கீழ்தளத்தில் எதிர்பட்ட பெண்மணியிடம் தயங்கித் தயங்கி விசயத்தை உளறினேன். "அப்டி எதுவும் எனக்குத் தெரியல, எதுக்கும் மேல போய் பாருங்க" னு சொன்னாங்க.

மெதுவாக படிகளில் ஊர்ந்து உள்ளே எட்டிப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் ஐயா அவர்கள் கூப்பிய கரங்களோடு  "உள்ளே வாங்க, உட்காருங்க" எனச் சொல்ல. என்னை அறியாமலே கைகூப்பினேன். என் கால்கள் ஆடிக்கொண்டிருந்தது. அப்போதும் தோன்றிய எண்ணம் தெரியாமல் வந்துவிட்டதாகச் சொல்லிவிட்டு திரும்பிவிடலாம் என்பதுதான். இருப்பினும் சித்தம் உறைய ஒரு இருக்கையில் அமர்ந்துவிட்டேன். எதிரே நிலைக்கண்ணாடியில் பார்த்தபோதுதான் வியர்வையில் சட்டை நனைந்திருப்பதை உணர்ந்தேன். அதைக் கண்டுவிட்ட ஐயா அவர்கள் இரண்டு மின்விசிறிகளையும் போட்டுவிட்டார். என் பதட்டத்தை உணர்ந்தவர்போல ஒன்றிரண்டு வார்த்தை பேசிவிட்டு என்னை தனியாக விட்டுவிட்டார். 

எதையோ எதையோ எண்ணி இயல்பாக இருக்க முயன்றேன். ஆனாலும் படபடப்பு குறையவில்லை. பிறகு ஒவ்வொருவராக வந்து பேசத்துவங்கியதும்தான் கொஞ்சம் நிலமை சீரானது. ஒவ்வொருவரும் அறிமுகம் செய்துகொண்டு பேச, ஒவ்வொருவரின் பேச்சிலும் இணக்கத்தை உணர்ந்தேன். என்றாலும் மணிமாறன் அண்ணனை பார்த்ததும்தான் எங்கோ தூரதேசத்தில் பக்கத்துவீட்டு பையனைப் பார்த்ததுபோன்று ஒரு பாதுகாப்பு உணர்வை அடைந்தேன்.  பார்த்ததுமே சிலரை பிடித்துப்போய்விடுகிறது.

 இது எனக்கு முதல் கூட்டம் என்பதாலும் இத்தகைய எந்த வாசக வட்டடத்திலும் கலந்துகொண்டதில்லை என்பதாலும் 'கல்லாதவரும் நணிநல்லர்' என்ற பாங்கில் மறந்துகூட வாய்திறக்கக்கூடாதென எனக்கு நானே கடுமையான உத்தரவிட்டிருந்தேன். ஆனால் அனைவரும் பேச ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே இங்கு என் உள்ளத்தில் தோன்றும் எதைவேண்டுமானாலும் சொல்லலாமென்ற எண்ணம் வந்துவிட்டது. அத்தனை இயல்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். 

ஆனால் வெண்முரசு பற்றி பேசத்துவங்கியதுமே ஒவ்வொருவருக்குள்ளிருந்தும் அதுவரை இல்லாத ஒருவர் எழுந்துவருவதைக் கண்டேன். அந்த திகைப்பிலிருந்து கூட்டம் முடியும்வரை என்னால் வெளிவரவே இயலவில்லை. ஒவ்வொருவரும் தான் அறிந்தவற்றை, உணர்ந்தவற்றை  விளக்கும்போது ஒவ்வொரு சொல்லுக்கும் நான் என் அறியாமையையே உணர்ந்துகொண்டிருந்தேன். அதுவரை நான் அறிந்த அனைத்தும் என் கண்முன்னே உடைந்துசிதற திகைப்பும் நடுக்கமும் கொண்டேன். ஒவ்வொரு கணமும் கற்றுக்கொண்டிருந்தேன். 

 உள்ளுக்குள் நாம் எத்தகைய இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம் என்ற வியப்பும், இப்போதாகிலும் வந்து சேர்ந்தோமே என்ற ஆறுதலும் கூடவே இருந்தது. முதல் சந்திப்பிலேயே என்னை உளறவைத்து அதனை அனைவரும் வியந்து பாராட்டியதை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கூட்டம் முடிந்தபின் அனைவரிடமும் அப்படியொரு தோழமையை உணர்ந்தேன்.  


                              லெமூரியன்.