Monday, August 12, 2019

உருமாற்றம்




அன்புள்ள ஜெ

நலம்தானே? நீண்ட இடைவேளைக்குப்பின் வெண்முரசு பற்றி எழுதுகிறேன். வெண்முரசௌ நடுவே வாசிக்க விட்டுப்போய்விட்டது. ஒரு வேலைமாற்றம். சமீபத்தில் ஒரு சின்ன விபத்து ஒருமாதம் ஓய்விலிருந்தேன். முழுமூச்சாக நான்கு நாவல்களைக் கடந்து சமகாலத்துக்கு வந்துவிட்டேன்.

துரியோதனனின் சாவு நிகழும் காட்சியைத்தான் வாசித்துக்கொண்டிருந்தேன். இதுவரை வந்த காட்சிகள் ஒவ்வொன்றாக கண்ணிலே வந்தன. அவனுடைய பிறக்கு. அன்னையை பிளந்துகொண்டு அவன் வெளிவந்தது. அவனை கண் தெரியாதவர் பார்த்தது என்று ஒரு மித்திக்கல் தளம். இன்னொரு பக்கம் அவனுடைய ஈகோ பீமனால் புண்படுவதில் தொடங்கி இன்னொரு தளம். இரு கதைகளும் பின்னிக்கொண்டே வந்தன. அவன் ஒருபக்கம் மித் ஆகவும் இன்னொரு பக்கம் ரியல் ஆகவும் இருந்தான். கலியின் அவதாரமாகவும் அன்பான அண்ணனாகவும் அரசனாகவும் தெரிந்தான்.

இந்தக் கதாபாத்திரம் போல வெண்முரசில் இப்படி தொடர்ச்சியாக உருமாறிக்கொண்டே இருந்த கதாபாத்திரம் பிற இல்லை. ஆனால் இந்தக்கதாபாத்திரத்தின் அடிப்படையான ஒரு குணாதிசயம் மாறுபடவே இல்லை. அது அஸ்தினபுரி தன்னுடையது என்னும் எண்ணம். அதைத்தவிர எல்லாவற்றையும் அவன் விட்டுக்கொடுக்கிறான். எல்லாவற்றையும் புரிந்துகொள்கிறான். அந்த எல்லையை மட்டும் கடக்கவே முடியவில்லை. அதுதான் அவனை கடைசியில் வீழ்த்துகிறது. அவன் மறையும்போது இருக்கும் அந்த கம்பீரம் மனசிலேயே நிற்கிறது

ஜெயக்குமார் சி