சிந்துகுமார்: “வெண்முரசு” நாவலை இணையத்தில் பத்து ஆண்டுகள் எழுத திட்டமிட்டிருப்பதாக அறிவித்திருக்கிறீர்கள். அதென்ன பத்தாண்டு கணக்கு?
பதில்: பத்தாண்டு என்பது ஒரு உத்தேசக்கணக்குதான். நான் எடுத்துக்கொண்டிருக்கும் பணி மிகப்பெரியது.
மகாபாரதம் மிகமிகப்பெரிய கதை. துணைக்கதைகளுடன் ஒட்டுமொத்தமாக அதை எழுதுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. முழுமையாக எழுதினால் அதில் பண்டைய இந்தியாவின் ஒட்டுமொத்தவரலாறும் அரசியலும் பேசப்படும். ஆச்சரியமென்னவென்றால் அதுவும் இன்றைய அரசியலும் வேறுவேறல்ல.
மனிதவாழ்க்கையின் அனைத்து இக்கட்டுகளும் துயரங்களும் கொண்டாட்டங்களும் அந்தக்கதையில் சித்தரிக்கப்பட்டுவிடும். அத்துடன் இந்து மெய்ஞானத்தின் ஒட்டுமொத்தமும் அதில் இருக்கும். இந்தியப்பண்பாட்டின் அனைத்து அடிப்படைகளும் அதில் விவரிக்கப்படும். அதாவது அது நாவல் மட்டும் அல்ல, ஒரு கலைக்களஞ்சியமும்கூட.
நான் திட்டமிட்டு இருப்பதை எழுதிமுடித்தால் அது மிகப்பெரிய 20 நாவல்கள். அல்லது அதற்கும் மேல். உலகமொழிகளில் எழுதப்பட்ட மிகப்பெரியநாவலும் அதுவாகவே இருக்கும்.
சிந்துகுமார்: வெண்முரசு நாவலுக்கான உந்து சக்தி எது? இதற்கான அடிப்படை நூல்களாக நீங்கள் பயன்படுத்தும் நூல்கள்?
பதில்: என் இளமைக்காலம் முதலே மகாபாரதம் என்னுடன் இருந்துவருகிறது. என் அம்மா இளவயதில் மகாபாரதத்தின் மலையாள வடிவத்தை மூன்றுமுறை முழுமையாகவே வீட்டில் வாசித்திருக்கிறார். நான் கேட்டிருக்கிறேன்.
என் ஆசிரியராக நான் எண்ணும் பி.கெ.பாலகிருஷ்ணன் 1982-இல் எழுதிய ‘இனி நான் உறங்கலாமா’ என்னும் மகாபாரத நாவல் என்னை மிகவும் கவர்ந்தது. மகாபாரத நாவல் ஒன்றை எழுதவேண்டுமென்ற கனவு அன்று என்னுள் எழுந்தது. அவரது ஆலோசனைப்படி கொடுங்கல்லூர் குஞ்ஞ்குட்டந்தம்புரானின் மகாபாரத செய்யுள் வடிவ முழுமொழியாக்கத்தையும் வித்வான் பிரகாசத்தின் உரைநடை வடிவ மொழியாக்கத்தையும் வாசித்தேன். கிசாரி மோகன் கங்குலியின் ஆங்கிலமொழியாக்கத்தையும் பயன்படுத்துகிறேன்.
இதில் எல்லா புராணங்களில் இருந்தும் கதைகளை எடுத்துக்கொள்கிறேன். வெட்டம் மாணியின் புராணக் கலைக்களஞ்சியமும் மோனியர் வில்லியம்ஸின் சம்ஸ்கிருத அகராதியும் முக்கியமான வழிகாட்டிநூல்கள்.
சிந்துகுமார்: இரண்டு மாதங்களை நெருங்கும் இவ்வேளையில் நாவலுக்கான எதிர்பார்ப்பு வாசகர்களிடையே எப்படி உள்ளது?
பதில்: மகாபாரதம் எப்போதுமே இலக்கியங்களில் ‘சூப்பர்ஸ்டார்’ தான். இணையத்தில் தினம் ஐம்பதாயிரம்பேர் இதை வாசிக்கிறார்கள். அது தமிழிலக்கிய வரலாற்றில் இதுவரை நிகழாத ஒரு அற்புதம்.
சிந்துகுமார்: வாக்கியங்கள் கொஞ்சம் கடினமான சொற்களால் எழுதப்பட்டிருக்கிறது என்றும் கொஞ்சம் எளிமையாக இருந்தால் இன்னும் எளிதாக படித்துவிடலாம் என்ற எண்ணம் சாமன்ய வாசகர்களுக்கு இருக்கிறதே…
பதில்: எந்தநாவலும் அதற்கான ஒரு மொழிநடையை கொண்டிருக்கும். அதை வாசகர்களுக்காகவோ பிறருக்காகவோ மாற்றமுடியாது. மகாபாரதம் நம் பண்பாட்டின் சாராம்சம். அதில் தத்துவமும் மெய்ஞானமும் அறவியலும் மனித உணர்ச்சிகளும் செறிந்துள்ளன. அதை பொழுதுபோக்கு எழுத்துபோல கொடுக்கமுடியாது. வரிவரியாகக் கூர்ந்து வாசிக்கும் வாசகர்களே அதை வாசிக்கமுடியும். வாசகர்கள் கொஞ்சம் முயற்சி எடுத்துக்கொண்டேயாகவேண்டும்.
நான் இந்நாவலை நல்ல தமிழில், கச்சிதமான சொல்லாட்சியுடன் எழுதவே முயல்கிறேன். ஏனென்றால் இது இந்தத் தலைமுறைக்காக மட்டும் எழுதப்படும் நாவல் அல்ல. முதற்சில அத்தியாயங்களை வாசித்த மிகச்சில வாசகர்கள் நடை கடினமானதாக இருப்பதாகச் சொன்னார்கள். அதைத் தாண்டிவந்த வாசகர்கள் இன்று இன்னொரு நடையில் இந்நாவலை எண்ணிப்பார்க்கவே முடியவில்லை என்கிறார்கள்.
சிந்துகுமார்: பிற்காலத்தில் இதை நூலாக வெளியிடும் எண்ணம் உண்டா?
பதில்:ஒவ்வொருநாவலும் எழுதிமுடிக்கப்பட்டதுமே நூலாக வெளிவரும். முதல்நாவலான முதற்கனல் வரும் மேயிலேயே கிடைக்கும். வருடம் இரண்டு அல்லது மூன்று நாவல்கள் வரக்கூடும்.
சிந்துகுமார்: இந்த நாவல் மூலமாக புதிய வாசகர்களை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா?
பதில்: ஆம், நான் எழுதும் ஒவ்வொரு படைப்பின் வழியாகவும் புதியவாசகர்கள் உள்ளே வருகிறார்கள். சமீபத்தில் அறம் சிறுகதைத் தொகுதி ஏராளமான புதியவாசகர்களைக் கொண்டுவந்தது. அதன்பின் இந்நாவல் இதுவரை எனக்கிருந்த வாசகர்கள மும்மடங்காக்கியிருக்கிறது.
சிந்துகுமார்: இந்த நாவல் மூலமாக நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
பதில்: மனிதவாழ்க்கையின் உச்சகட்டத் தருணங்கள் இரண்டு சரிகளுக்கு நடுவே நாம் திகைத்து நிற்கும்போது உருவாகக்கூடியவை. கடமைக்கும் பாசத்துக்கும், நாட்டுநலனுக்கும் வீட்டுநலனுக்கும் இடையே உருவாகும் மோதல்கள் போல. அவற்றை மகத்தான அறச்சிக்கல்கள் எனலாம். மகாபாரதம் அத்தகைய ஆயிரக்கணக்கான அறச்சிக்கல்களை முன்வைத்துப்பேசுகிறது. அச்சிக்கல்களை இன்றைய வாழ்க்கையில் வைத்து மறுபரிசீலனை செய்வதே வெண்முரசின் நோக்கம்.
ஆனால் வியாசர் எழுதியது ஒரு வீரயுக காவியம். ஆகவே அவர் மாவீரர்கள் அல்லாதவர்களை பெரிதாக பொருட்படுத்தியதில்லை. இது ஜனநாயகயுகம். ஆகவே பலவீனர்களையும் தோற்கடிக்கப்பட்டவர்களையும் கூட கருத்தில்கொண்டு நான் எழுதுகிறேன். உதாரணம் விசித்திரவீரியன். அவனுக்கு வியாசன் சில வரிகளையே அளித்திருக்கிறான். வெண்முரசில் அவன் மிகப்பெரிய கதாபாத்திரம்.
சிந்துகுமார்: இந்த நாவலில் எந்த மாதிரியான உத்திகளை பயன்படுத்தியிருக்கிறீர்கள்?
பதில்: மகாபாரதம் நவீன இந்திய இலக்கியத்தில் பல மேதைகளால் மீண்டும் மீண்டும் நாவலாக எழுதப்பட்டுள்ளது. வழக்கமாக மகாபாரதத்தில் உள்ள புராணத்தன்மையை நீக்கிவிட்டு யதார்த்தமான கதையாகச் சொல்லியிருப்பார்கள். நான் அந்த புராணத்தன்மையையும் மாயங்களையும் எல்லாம் பலவகையில் விரிவாக்கி கையாண்டு இதை எழுதியிருக்கிறேன். காரணம் இன்றைய எழுத்துமுறையில் இதற்கெல்லாம் இடமிருக்கிறது. இதை வேண்டுமென்றால் இந்திய மாஜிக்கல் ரியலிசம் என்று சொல்லலாம். நான் இதை புராணிக் ரியலிசம் என்று சொல்வேன். அதாவது புராண யதார்த்தவாதம். அதுதான் இந்நாவலின் உத்தி.