Monday, July 7, 2014

வெண்முரசு நூல்கள்

வெண்முரசு – நூல் இரண்டு தொடங்கியதற்கு வாழ்த்துக்கள். தாங்கள் எழுதத் தொடங்கியபோது ஒரு ஆண்டுக்கு ஒரு புத்தகம் வீதம் வரும் என்று அறிவித்ததாக ஞாபகம். தற்பொழுது முதற்கனல் மட்டும் பதிப்பாக வெளிவருவதை ஒரு புத்தகத்தின் Volume – 1 என்று எடுத்துக் கொள்வதா அல்லது இதை தனி புத்தகமாக எடுத்துக் கொள்ளலாமா?
அவ்வாறிருப்பின் மொத்தம் எத்தனை புத்தகங்கள்? தனியாக வாங்குவதா அல்லது ஒரு ஆண்டின் தொகுப்புகளை மொத்தமாக வாங்குவதா என்பதை பொருளாதார ரீதியில் முடிவு செய்வதற்கு தங்களின் பதில் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
நன்றி
வினோத் குமார்
அன்புள்ள வினோத்குமார்,
எழுதத்தொடங்கும்போது நான் இந்நாவலின் பக்க அளவு பற்றி எண்ணவில்லை. இப்போது பார்க்கையில் வருடத்துக்கு 300 அத்தியாயங்கள், அதாவது 3000 பக்கங்கள் வருகின்றன. ஆகவே ஒரே நூலாக இருக்கமுடியாது.
ஒரு தொடரின் தனித்தனி வால்யூம்கள் அல்ல இவை. ஒவ்வொன்றும் தனித்தனியான வடிவமும் உள்ளடக்கமும் கொண்ட நாவல்கள்.
வருடம் 3 நாவல்கள் வரை வரக்கூடும். அடுத்த நாவல் மழைப்பாடல் ஜூனில் முடியலாம். ஆகஸ்டில் நூலாகும். அதற்கடுத்த நாவல் டிசம்பரில்.
ஒருவருடம் வரும் மூன்று நாவல்களையும் சேர்த்தும் வாங்கலாம், தனித்தனியாகவும் வாங்கலாம். வரிசையாக வாசித்தாகவேண்டிய தேவையும் இல்லை. பிடித்தமானதை வாங்கலாம்.
ஜெ