அன்புள்ள ஜெ,
வெண்முரசை ஆர்வத்துடன் வாசித்து வருகிறேன். சொல்லப்போனால் இத்தனை வேகத்துடன் நான் இதுவரை எதையுமே வாசித்ததில்லை. ஒவ்வொருநாளும் வெண்முரசை மட்டுமே நினைத்துக்கொண்டு கண்விழிக்கிறேன். பகலிலும் அதே நினைப்புதான். நாம் வாழக்கூடிய அன்றாட வாழ்க்கையில் இருந்து வெகுவாக நம்மை மேலேகொண்டுசென்றுவிடுகிறது வெண்முரசு. ஆனால் நான் சரியாகத்தான் வாசிக்கிறேனா என்ற சந்தேகமும் எனக்கு இருக்கிறது .நிறைய விஷயங்களை விட்டுவிட்டு வாசிக்கிறேனா என்ற எண்ணம் உண்டு
ஏனென்றால் நான் முன்பு உங்கள் தளத்திலே கதைகள் வரும்போது அந்தக்கதைகளைப்பற்றிய வாசகர்கள் எழுதிய கடிதங்களை வாசிக்கும்போதுதான் அடடா இவ்வளவு விஷயங்களை விட்டுவிட்டோமே என்ற எண்ணம் வரும். இப்போது இதற்கு நீங்கள் வாசகர்கள் எழுதும் கடிதங்களையே போடுவதில்லை. இது ஒரு குறையாகவே எனக்குத்தெரிகிறது.ஓர் அத்தியாயத்தை வாசித்துவிட்டு பிறகு புதிய அத்தியாயத்தை வாசிக்கும்போதுதான் கதையின் சரடு அங்கேயே இருந்துகொண்டிருப்பது தெரியவந்தது.
நீங்கள் இதைப்பற்றிய விவாதங்களையும் வெளியிடலாமென்று நினைக்கிறேன்.
காஞ்சனா மாதவன்
அன்புள்ள காஞ்சனா,
வாசகர்கடிதங்கள் வருகின்றன. அவற்றுக்கு சுருக்கமாகப் பதிலும் போட்டுக்கொண்டிருக்கிறேன். என்ன சிக்கலென்றால் வாசகர்கடிதங்கள் வாசிப்பை ஒரு வகையில் வழிநடத்திவிடுகின்றன. இப்படியெல்லாம் வாசிக்கலாமென்பது போய் இதுதான் அர்த்தம் என்று சொல்வதுபோல ஆகிவிடுகின்றன. அதைவிட நுட்பமில்லாத வாசகர்கடிதங்கள் மேலான வாசிப்பைத் தடைசெய்யவும்கூடும். ‘முதற்கனல்’ முடிந்தபிறகு குறிப்பிடத்தக்க கடிதங்களைப் பிரசுரிக்கலாமென நினைக்கிறேன்.
மீண்டும் மீண்டும் நான் கூர்ந்தவாசிப்பைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அதாவது நுட்பமாக வரிகளை வாசிப்பது ஒருபக்கம். வாசித்த அனைத்தையும் ஒட்டுமொத்தமாகப் பார்ப்பது இன்னொருபக்கம். இரண்டையும் செய்துகொண்டிருக்கும் வாசகர் கொஞ்சம் கொஞ்சமாக இதற்குள் சென்றுவிடமுடியும். கண்டிப்பாக எந்த ஒரு வாசகருக்கும் இதன் கணிசமான ஒரு பகுதி எட்டாமலும் இருக்கும். அது நவீனநாவல்களின் ஒரு இயல்பு, அது முழுமையாக தன்னை வெளிப்படுத்திக்கொள்வதில்லை.
நுண்ணிய வாசிப்பு பற்றிச் சொன்னேன். அது அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ள எல்லா வரிகளையும் வாசிப்பது மட்டும் அல்ல, வாழ்க்கையைச் சார்ந்து வினவிக்கொள்வதும்கூடத்தான். உதாரணமாக பீஷ்மர் தன்னை நிராகரித்ததனால் அம்பை வெறிகொள்கிறாள் என்பது பொதுவான ஒரு வாசிப்பு. அது மகாபாரதத்திலும் உள்ளதே. ஆனால் இந்நாவலில் நுட்பமான ஒரு புள்ளி உள்ளது. அம்பை பீஷ்மரை சாபமிடாமல் வருத்ததுடன் திரும்புகிறாள். ஆனால் அதன் பின் ஒன்று நிகழ்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் நிகழும் நுட்பமான ஓரு விளையாட்டு. அந்தப்புள்ளியில்தான் அம்பை உக்கிரமாக தாக்கப்படுகிறாள் அதுவே அவளை பேயாக்கும் வெறியாகிறது.
அதைப்புரிந்துகொள்ள ஆணும் பெண்ணும் தங்களை நோக்கித்தான் ஆராயவேண்டும், இந்நாவலைநோக்கி ஆராய்ந்தால் அது பிடிகிடைக்காது. நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் உள்ள ஒரு தருணம் அது. எங்கே நாம் புண்படுகிறோம் புண்படுத்துகிறோம் என அறிவது மானுட அகங்காரத்தையே அறிவதுதான். அதை எவ்வளவு சொன்னாலும் புரியவைக்கமுடியாது. அதை உணர்த்தவே முடியும்.
இன்னும் சில விஷயங்கள் தொன்மங்களாக உள்ளன. பாற்கடல் கடையப்படும் தொன்மக்கதை, அதில் விஷம் முந்திவந்தது, இங்கே அம்பையின் கதையுடன் இணைகிறது. விஷத்தை அமுதத்தின் சோதரி என்று சொல்லும் வரி அதை பலகோணங்களில் விளக்குகிறது. மண்ணின் காமமும் வளமும் பாதாளநாகங்களே என விளக்கும்பகுதியை பலவாறாக கற்பனைசெய்தே விரித்துக்கொள்ளமுடியும்
கடைசியாகச் சில வரிகள் அதற்கான பின்புலம் உடையவர்களுக்கு மட்டும் உரியவை ‘தானறிந்த அனைத்தையும் தன் கனவுக்குள் செலுத்தி கனவுகளை மந்திரத்துள் அடக்கி மந்திரத்தை மௌனத்தில் புதைத்து அந்த மௌனத்தை பெருவெளியில் வீசி ரம்பன் அமர்ந்திருந்தான்’ என்ற வரி தியான அனுபவம் கொண்டவர்களுக்கு புரியலாம்.
எல்லாம் வெட்டவெளிச்சமாவது ஒரு நல்ல ஆக்கமல்ல. செல்லச்செல்ல விரிந்துசெல்லும் வழிகள் கொண்டதே நல்ல ஆக்கம்.
ஜெ.