ஜெ அவர்களுக்கு,
முதலில் உங்கள் மகாபாரதம் ஒட்டிய படைப்புகளுக்கு என் வாழ்த்துக்கள்.
இது போல பலர் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுடையது இதில் சற்று மாறுபட்ட முயற்சி என்பதில் ஐயமில்லை.
உங்கள் மகாபாரத நாவல்களில் இருக்கும் விபரங்கள், மொழி வளன் மற்றவர்களில் சிறிதும் கிடையாது என்பதிலும் நான் உடன்படுகிறேன்.
என்
பிரச்சினை என்னவென்றால், இதில் ஒரு படைப்பாளிக்கு சவால் விடும்
கற்பனைத்திறன் பெரிதாக என்னவிருக்கிறது. மகாபாராதம் பற்றி பலர்
எழுதியிருப்பதைப் படித்து அதைச் சற்று விவரமாக உருமாற்றிக் கொடுத்தால்
போதுமே. நான் கற்பனை திறன் என்று கூறுவது சம்பவங்களை உருவாக்குவதும் அதை
ஒன்றாகக் கோர்ப்பதும் பற்றியது.
எல்லாப்
படைப்புக்கும் ஒரு inspiration வேண்டும் என்பது உண்மையே. ஆனால் அதன் மூலம்
தங்கள் வாழ்வில் நடுக்கும் சம்பவங்களைக் கொண்டோ அல்லது ஒரு non fiction
கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகுவது ஒரு கதை சொல்லிக்கு சவால் விடுவது
என்பது என் கருத்து. இன்னொரு fiction அடைப்படையாகக் கொண்டு எழுதும்
நாவல்கள் ஏனோ என்னைக் கவர்வதில்லை.
இது பற்றி உங்கள் கருத்துக்களைக் கூறவும்.
- சத்திஷ்
அன்புள்ள சதீஷ்
‘ஏனோ’ என்று சொல்லும்போது அதனுடன் விவாதிக்கமுடியாது. ஏன் என்று சொன்னால்தான் விவாதிக்கமுடியும் இல்லையா?
ஏற்கனவே விரிவாக எழுதிவிட்டேன். உலக அளவில் எழுதப்பட்டுள்ள பெரும்படைப்புகள் பெரும்பாலானவை ஏற்கனவெ எழுந்தப்பட்ட படைப்புகளின் மறுஆக்கங்களோ, வரலாற்று மறு ஆக்கங்களோ தான். சிலப்பதிகாரமோ கம்பராமாயணமோ கூட. ஷேக்ஸ்பியர் நாடகங்களோ தல்ஸ்தொயின் போரும் அமைதியும் போன்ற படைப்புகளோகூட
பொதுவாக செவ்வியல்படைப்பு என்பது ‘புதியதாக’ அமையாது. அது அதுவரைச் சொல்லப்பட்டு வந்த பலவற்றின் பெருந்தொகுப்பாகவும் மறு ஆக்கமாகவும்தான் அமையும். காவிய இலக்கணம் என்பது ‘நாடறிந்த பழங்கதையைச்’ சொல்வது என்றே முன்னர் வகுக்கப்பட்டுள்ளது
அத்தனை நூல்களையும் ஒட்டுமொத்தமாக ‘ஏனோ’ பிடிக்கவில்லை என ஒருவர் சொல்வாரென்றால் அது அவரது சொந்த தேர்வு, அவ்வளவுதான்.
பழையகதையை திருப்பிச் சொல்வது அல்ல இது. ஏனென்றால் கதை என்பது முக்கியம் அல்ல. பழங்கதையின் கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் எல்லாம் குறியீடுகளாக, உருவகங்களாக மாறியுள்ளன. அவற்றைக்கொண்டு சமகாலப் பண்பாட்டையும் வாழ்க்கையையும் மறுவரையறைசெய்யவே பேரிலக்கியங்கள் முயல்கின்றன
வெண்முரசு பேசுவது சமகால வாழ்க்கையை என அறிந்தவர்களே அதன் வாசகர்கள்
ஜெ