இனிய வணக்கங்கள் ஜெயமோகன் அவர்களே
வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 40 இல் இருந்து ஒரு உரையாடல் --- “நீ ஒரு பேரழிவைப்பற்றி பேசிக்கொண்டே இருக்கிறாய் யாதவனே” என்றான் அர்ஜுனன். “அதை இங்குள்ள அத்தனை அரசு சூழ்பவர்களும் அறிவார்கள். பாரதவர்ஷம் என்னும் ஆலமரம் ஷத்ரியர்கள் என்ற பீடத்தில் வளர்ந்தது. இன்று அது அந்தப்பீடத்தை உடைத்து எறிந்தாகவேண்டியிருக்கிறது.
அந்தப் பெரும் அழிவைத் தடுக்கவே பீஷ்மரும் விதுரரும் முயல்கிறார்கள். மாறாக நான் அவ்வழிவை நிகழ்த்த எண்ணுகிறேன்” என்றான் கிருஷ்ணன்.ஆம் மாயக்கண்ணன் சகுனியின் பகடை காய்கள் வழியாக அந்த பேரழிவிற்கான சூதாட்டக்களத்தை வெற்றிகரமாக நிகழ்த்தி விட்டான் .பல லட்சம் சத்திரிய வீரர்கள் துவந்த மற்றும் சங்குல யுத்தங்கள் புரிந்து உயிர்விடும் குருஷேத்ர போருக்கான சுழி பன்னிரு படைக்களம்’ வாயிலாக போடப்பட்டது .ஆயினும் சகுனி அந்த பேரழிவை - பலரது துர் மரணங்களுக்கு காரணமாகும் மகா பாரத போரை நிகழ்த்தபோகும் பகடைக்காய்களை அனலில் இட்டு பொசுங்க செய்கிறார் .ஆம் அந்த பகடை காய்கள் செதுக்கியதன் நோக்கம் நிறைவேறி விட்டது .ஆதலால் அது அனலில் பொசுங்குவதை சகுனி வெறித்து பார்க்கிறார் .-- ‘சொல்வளர்காடு’ – 9
நீதி மன்றங்களில் மரண தண்டனை விதித்து குற்றவாளிக்கு தீர்ப்பு கூறி அதனை படித்தபின் ,அந்த தீர்ப்பில் தன் கையொப்பம் இட்டபின்பு ,நீதிபதி அந்த பேனாவின் நிப்பை மேசையில் ஓங்கி குத்தி,அதன் முனையை உடைத்து ,பேனாவை தூக்கி வீசுவது தொன்று தொட்டு வரும் நடை முறை தான் .ஒரு மனிதனின் மரணத்திற்கு காரணமான பேனாவின் ஆயுள் அந்த தீர்ப்புடன் முடிந்து விடுவது போல லட்சம் வீரர்களின் மரணத்திற்கு காரணமான பகடைக்காய்கள் ஆயுள் முடித்து வைக்கப்பட்டது சாலப்பொருத்தம். நன்றி ஜெயமோகன் அவர்களே
தி . செந்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர்