வெண்முரசில் நெஞ்சு
நெகிழ்ந்து, கண்கள் கலுழும் நிகழ்வுகள் நிறையவே வந்துள்ளன. பெரும்பாலும் கதாபாத்திரங்களின்
கண்ணீர் நம்மையும் அசைத்துவிடும். இன்று விதுரரின் கண்ணீர் அப்படிப்பட்ட ஒன்றாக
இருந்திருக்க வேண்டும். திருதாவின் இந்த மனமாற்றம் விதுரரைப் போலவே பல வெண்முரசின்
வாசகர்களுக்கும் ஏற்புடையதாக இருந்திருக்காது. பலர் இதை ஒரு வகை சடுதிமாற்றம்,
தலைகீழ்மாற்றம் என்று கூட எண்ணலாம். எனக்கும் வாசித்த உடன் அப்படித் தான்
தோன்றியது. இரண்டாம் முறை வாசித்தேன், அப்போதும் திருதாவின் இந்த மாற்றத்தை
ஏற்கவில்லை. இது முழுக்க முழுக்க சுயநலத்திற்காக மட்டுமே எடுக்கப்பட்ட முடிவு.
தான் நிம்மதியாகத் தூங்குவதற்கும், தன் மரணத்திற்குப் பிறகு தன் இளையோனை குறைந்த
பட்ச குற்றவுணர்வுடன் எதிர்கொள்வதற்கும், தன் மனைவியின் முன் மீண்டும் குழந்தையாக
மாறி அரவணைப்பை ஏற்பதற்கும், அனைத்திற்கும் மேலாக தெய்வங்களும் கைவிட்ட தன்
மைந்தனைத் தானும் கைவிடாமலிருப்பதற்கும் அவர் கண்டடைந்த வழி இது. தருமர் இதை
மனநிறைவுடன் ஏற்றுக் கொள்வார் என்பதிலும் சந்தேகமே இல்லை.
ஒரு வாசகனாக, திருதா
என்னும் மத வேழத்தின் அணைப்பை, அதன் பெருந்தன்மையை ரசித்தவனாக நான் ஏற்றுக்
கொள்கிறேனா? இது தவறு என்று விதுரர் போலே நானும் எண்ணுகிறேன். திருதா கீழ்மையின்
சேற்றுக்குழியில் விழுந்து விட்டார் என்றே எண்ணுகிறேன். ஆனால் எங்கோ என் அக
ஆழத்தில் இதைத் தவிர வேறு சிறந்த வழி அவர் முன் இல்லை என்பதையும் ஏற்றிருக்கிறேன்.
ஆம்... விதுரரின் கண்ணீர் என் கண்களில் வழியவில்லை.
நனவுள்ளத்திற்கும்,
ஆழுள்ளத்திற்கும் இடையில் தான் எத்தனை வேறுபாடுகள். எத்தனை நடிப்புகள்!! அன்பின்
ஜெ, எவ்வகையில் பார்த்தாலும் இது உங்கள் எழுத்தின் வெற்றி. இலக்கியம் என்பது நிகர்
வாழ்வு என்ற கூற்றை முழுமையாக அனுபவித்து ஏற்கிறேன். மீண்டும் மீண்டும் உங்களை
நீங்களே வென்று சென்று கொண்டிருக்கிறீர்கள். இந்த ஊக்கம் மேலும் மேலும் தொடர
இறையருளும், குருவருளும் துணை செய்ய பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்