Friday, July 15, 2016

மொழியாடல்



ஜெ,

இயல்பாகவே நீலத்திலேதான் சென்று சேர்கிறது மனம். ஒருநாவலை இப்படி தினமும் இரண்டுவருடங்களாக வாசிப்பதென்பது சாதாரண விஷயம் அல்ல. என் வாழ்க்கையிலே இப்படி வாசிப்பேன் என எவரேனும் சொல்லியிருந்தால் நம்பியிருக்கவே மாட்டேன். ஆனால் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

இடைவெளியில் அப்படியே மூடு கீழே இறங்கிவிடுகிறது. தினமும் காலை எழுததும் ஒன்றுமே செய்வதற்கு இல்லை என்பதைப்போல ஒரு பெரிய சோர்வு. என்னசெய்வதென்றே தெரியாமல் இருப்பேன். ஆகவே மீண்டும் வாசிப்பேன். மீண்டும் வாசிக்கப்போனால் ராண்டமாக ஒரு அத்தியாயத்தை எடுத்து வாசிப்பதே வழக்கம். ஆனால் அப்படி வாசிக்கும்போது எப்போதும் கையில் சிக்குவது நீலம்தான்

நீலம் மொழி அற்புதமானது. மொழி ஒரு கனவு போல ஆகும் அனுபவம் அது. மொழியைகொண்டு சொல்வது அல்ல. மொழியையே சொல்வது. மண்ணிலே எல்லாம் சென்று மட்கிச்சேர்வதுமாதிரி மொழியிலே எல்லாம் சென்று சேர்கிறது என்று கல்லூரிப்பாடத்திலே படித்திருக்கிறேன். ஆழ்வார்களும் ஜெயதேவரும் மொழியிலே இருக்கிறார்கள். மொழியை மட்டுமே கையாண்டால்போதும் அவர்கள் மீண்டு எழுந்துவந்துவிடுவார்கள்

நீலத்தை ஒரு மொழியனுபவ்ம் என்று சொல்லமுடியாது. அது மொழியில் நிகழும் தியானம்

சத்யநாராயணன்