ஜெ
பன்னிருபடைக்களத்தில் இருந்து இயல்பாகவே இந்த நாவலுக்கு வந்துவிட்டீர்கள். சொல்வளர்காட்டின் மையமே வேதச்சொல்லை விளக்கிக் கொள்ளலாமா , பொருள் மாறுபடலாமா என்பதுதான். அதற்காகத்தான் போரே நடக்கப்போகிறது. முதலிலேயே ஸ்வேதகேதுவுக்கும் தந்தைக்குமான சண்டையில் அந்த சித்திரம் வந்துவிட்டது
முக்கியமான சிலவிஷயங்கள் உண்டு. அதாவது உத்தாலகரும் அவருக்கு முன்னாலிருந்த வைதிகர்களும் தொழில்செய்து வாழ்ந்தார்கள். விவசாயம் செய்கிறார்கள். மாடுமேய்க்கிறார்கள். மகாபாரதத்தில் வரும் இந்த அழுத்தமான தகவலை எடுத்துக்கொடுத்திருக்கிறீர்கள். நான் இதை எப்படி இப்படிப்பார்க்க மறந்தேன் என்றே ஆச்சர்யமாக இருக்கிறது.
ஆருணியும் அவரது இரண்டு தோழர்களும் பற்றிய கதை மகாபாரதத்தில் உள்ளது. அவர்கள் மூவரும் மூன்று வேலைகளைச் செய்தார்கள், அந்த வேலைகளே அடிப்படையானவை எனபதை நான் கவனிக்காமல் விட்டுவிட்டேன். ஆனால் பெரிய திறப்பாக இருந்தது
அன்றைய வேதம் தொழில்செய்பவனுக்குரியவேதம். அறிஞனுக்குரியது இல்லை. தொழில்செய்பவன் தனக்கு என்னென்ன தேவை என்று கேட்டு கடவுள்களை ப்ரீதி செய்து பெற்றுக்கொள்வதற்கான வேதம். அது அறிஞர்களுக்குரிய ஞானிகளுக்குரியவேதமாக மாறும் ஒரு இடம் இது இல்லையா?
சாரங்கன்