Tuesday, July 19, 2016

செம்மொழிநடையில் நகைச்சுவை



எதிர்பார்த்திராத ஒன்று வெண்முரசு – வில் எதுவென்றால் அது அதன் கடின நடைத் தமிழில் இயல்பாக வந்தமையும் நகைச்சுவை. முயன்று செய்யும் நகைச்சுவையால் சிரிப்பை வரவழைக்க முடியாது. வேறு யார் வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம்தான்,, ஆனால் அது வேலைக்காக வேண்டுமே! செந்தமிழில் கல்கியின் நகைச்சுவைக்குப் பிறகு வெகுநாள் கழித்து இப்போதுதான் சிரிக்க முடிந்தது.காந்தளூர் வசந்தகுமாரனில் மறைந்த சுஜாதா செய்திருந்தார். அதுமாதிரியான ஒரு முயற்சி கிட்டத்தட்ட நடவாத காரியம் என்றே இருந்தேன்.பம்மல் K சம்பந்தம் திரைப்படத்தில் கமல் சென்னைத் தமிழில் பேசி காமெடி பண்ணி இருப்பார். அது எளிதே,, ஆனால் சிரிப்பை வரவழைக்கும் அதே இயல்பான சென்னைத் தமிழில் தன் தாத்தாவிடம் குமுறும் இடத்தில கலங்க வைத்து இருப்பார். செய்ய இயலாத கடினமான விஷயத்தை எளிதாக செய்பவர்களை வித்தை தெரிந்தவர் என்பார்கள். தாங்கள் மொழியில் வித்தை செய்கிறீர்கள். வெண்முரசுவை எதிர்காலத்தில் மொழி பெயர்க்க நேர்ந்தால் வெய்யோனின் அவை நிகழ்வுகள் பகுதி அவர்களுக்குக் கடினமாக இருக்கும். மொழி பெயர்த்தால் கூட  இதே அங்கதத்தை கொண்டு வருவது மிகச் சிரமம்...என் தமிழ் வாங்கி வந்த வரம்!

முன்னரே இதனைப் பதிவிட நினைத்து இருந்தேன். மெல்ல மெல்ல மென்னகை பரவச் செய்து, போகப் போக அவையின் சூதரின் அரசுசூழ்கை(!)யும், சிவதர் மற்றும் ஹரிதர் அவர்களை நாசூக்காகக் கையாள்வதும் பெருஞ்சிரிப்பை வரவழைத்தது. வர்ணாசிரம தர்மத்தில் சூதர்களுக்கு இந்த நிலை கூட அன்றளவில் அளிக்கப் பட்டிருக்குமா என்ற சந்தேகம் இருந்தாலும், அரசு சூழ்தலில் அவர்களின் போதாமையை சாடுதல் இல்லாமல் சொல்லி இருப்பது நன்று. மிகவும் சாதுர்யமான எழுத்தமைதி. இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவார் போல, கர்ணன் கையால் ஜயத்ரதன் பிள்ளைக்கு உணவூட்டக் கோருவதில் தொடங்கி களை கட்டுகிறது அவை நிகழ்வு. சிவதரின் எதிர்வினையான அந்த மாறாத முகச்சித்திரம் மனதுள் முழுமையாகத் தோன்றி மிகவும் புன்னகைக்க வைத்தது. பிறகு யாரிடம் சொல்லி, எப்படி நகைத்து வெடித்திருப்பார். ‘சூதர் குடிமூப்பின் படி வெளியே செல்ல ஹரிதர் சிரிக்காமல் எப்படிச் சொல்லி இருப்பார் என பிறகு சிரிப்பை அடக்க இயலவேயில்லை!

ஹரிதர் வேதமுணர்ந்தோர் முதலில் வெளியே செல்லலாம் என்றால் எந்த அந்தணரும் வெளியேறமாட்டார்என்றார். சிவதர் சிரிக்கிறார். ஆனால் இது அந்தணரின் தன்னடக்கத்தைக் காட்டுவது போல் அல்லவோ அமைந்து இருக்கிறது.எனக்கும்(!) இதன் பொருள் புரிய அறிவு போதவில்லை!

நட்புடன்,
இராஜேஷ்கண்ணன்.இரா