Thursday, July 14, 2016

கனவில்

 
 
அன்புள்ள எழுத்தாளருக்கு,

நேற்றிரவு உறங்கும் முன் இந்திரநீலம் படித்தேன். பாமாயணம். 

யாதவர்களிடம் கிருஷ்ணன் வருதல், பாமா துவாரகை பயணம், திரும்பல், கடம்பமரத்தினடி தவம், ஜாம்பவர், கண்ணனுடன் கன்னிக்கு மணம்.

அவ்வளவு தான். தூங்கி விட்டேன்.

கனவில், திரெளபதி. முழு நிர்வாணமாய்ப் பேருடல் ஒன்றின் தோள் மேல் அமர்ந்து பாடிக் கொண்டு செல்கிறாள். நான் பார்ப்பது அவளுடைய பின்புறம். கொஞ்ச நேரத்தில் படை படையாக மக்கள் அந்தப் பேருடலைத் தொடர்கிறார்கள். அந்த பெரும் வரிசை நாகம் போல் வளைந்து வளைந்து சென்று கொண்டிருக்கின்றது. 

பார்த்துக் கொண்டிருக்கும் நான் கத்துகிறேன். 'அவள் உங்களை மரணக்குழிக்குக் கூட்டிச் செல்கிறாள்..' ஒருவரும் கேட்கவில்லை. பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் அனைவரும் மகிழ்ச்சியாகப் பின் செல்கிறார்கள்.

காட்சி மாறுகிறது.

ஐவரும் நூற்றுவரும் நடந்து வருகிறார்கள் எங்கள் ஊர்த் தெருவில். தருமர் வழக்கம் போலின்றி மிகத் தீவிரமான முகத்தில் ஏதோ வஞ்சம் முணுமுணுத்துக் கொண்டு வருகிறார். தெரு திரும்புகையில் ஒரு தள்ளுவண்டியில் மீன் துண்டுகளும் ஆட்டுத் துண்டுகளும் விற்கிறார்கள். முன்னாடி வரும் நான் ஓர் இலையில் அதை வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்த்தால் மொத்தக் கூட்டமும் ஆடுகளாக மாறி நடந்து வருகின்றது. என்னால் அவற்றின் துண்டு துண்டான உடல்களைப் பார்க்க முடிகின்றது.

அந்த நொடியில் ஒரு சோகப் பாடல் ஒலிக்கின்றது. பெரும் துயரத்தில் ஊறிய சொற்கள். முழுப்பாட்டும் முடிந்தபின் விழித்துக் கொண்டேன். நெஞ்சில் அந்த கனம் அப்படியே இருந்தது.

நன்றிகள்.

அன்புடன்,
இரா.வசந்த குமார்.