Saturday, July 23, 2016

எதிர் எதிர்



அன்புள்ள ஜெ வணக்கம்.

உத்தாலகர் ஸ்வேதகேது மனங்கள் திரும்பி நின்று எதிர் எதிராக பார்க்கும் பார்வை அழகு. அற்புதம். உடம்பு மட்டும் அல்ல அறிவும் எதிர் எதிர் நின்று கைக்கோர்த்து மல்யுத்தம் செய்யும் என்பதற்கு முதல் சான்று. மெய்மையில் இருந்து மெய்மை காய்த்து கனிகிறது. 

பெண்ணை பிரபஞ்சம் முழுவதற்குமான பொதுவான ஒருபொருளாக உத்தாலகர் பார்க்கிறார். இதுவரை உலகம் அப்படித்தான் பார்க்கிறது. அப்படித்தான் பார்க்கவேண்டும் என்று அவருக்கு கற்பிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் பெண் உடலாகவோ மனமாகவோ அறிவாகவோ பார்க்கப்படாமல் கருப்பையாக படைப்பின் மூலமாக மட்டும் வைக்கப்படுகிறது. இது ஒரு உண்மை. இந்த உண்மையின் வழி உலகம் இயங்குகின்றது. இயற்கையில் உள்ள அனைத்து பெண்மையும் இந்தவழியில் நிற்கிறது களிறும் மந்தியும் காளையும் அப்படித்தான் பெண்ணைப்பார்க்கிறது. அதனால் உத்தாலகர்வரை காலம் பெண்ணை அப்படிப்பார்த்தால்போதும். படைப்பு நடந்தால்போதும் மெய்மை தேடி அடையக்கூடியது அல்ல தானகவே கனியக்கூடியது. அவ்வளவுதான் அது பெண்ணுக்கு ஒரு தேவை இல்லாத ஒன்று

பெண்ணை கருப்பையாக மட்டும் பார்த்தால்போதுமா? அவள் ஒரு பொதுப்பொருள் மட்டும்தானா? ஸ்வேதகேது கேட்கிறார். விலங்கிற்கு இது பொதுவாக இருக்கலாம் மானிடபெண்ணுக்கும் இதுததான் நீதியா? கற்கவும் கற்பிக்கவும், அறியவும் அறிவிக்கவும் தெளியவும் தெளிவிக்கவும் ஆணுக்கு முடியும் என்றால் பெண்ணுக்கு ஏன் முடியாது? என்ற உள்ளொரிர் வினா ஸ்வேதகேது இடம் தோன்றி இருக்கவேண்டும். தேடுபவன் தேடுவதையாவது கண்டடைவான் என்பதை அறிந்து இருக்கும் ஸ்வேதகேது. பெண்ணை படைப்பின் வழியில் வரும் கருப்பையில் இருந்து உயர்த்திப்பார்க்கிறார். 

கணவனாகிய உத்தாலகரை சுடாத கண்ணீர் மகனாகிய ஸ்வேதகேதுவை சுடுகிறது. ஏன் ஸ்வேதகேதுவை மட்டும் உத்தாலகர் மனைவி கண்ணீா சுடுகிறது?. உத்தாலகர் காலம்வரை ஆண் என்பவன் ஒரு தனிமனிதன் அல்ல, ஆண் என்பவன் ஒரு பெரும் கூட்டம். அவன் தனியாக இருந்தாலும் முழு ஆணகூட்டமாகவே சிந்திக்கிறான். பெண்ணை அன்ணை என்றோ மனைவி என்றோ மகள் என்றோ நோக்கா பொது ஆண்நோக்கம் அது.  அது ஒரு தொல்வேதம். அங்கிருந்து தனிமனிதனாக தனி ஆணாக ஸ்வேதகேது சிந்திக்கிறான். முதன் முதலில் ஆண்கூட்டமாக நின்றுப்பார்க்காமல் பெண்ணை அன்னை என்று தன்னை மகன் என்றுப்பார்க்கிறான். இது ஒரு புதியப்பார்வை. அது அங்கு ஒரு தொல்வேதத்தை முறியடித்து புதுவேதத்தை வரவழைக்கிறது. பெண்னை அன்னை என்று மனைவி என்று மகள் என்றுப்பார்ப்பது தனிமனிதப்பார்வை. தனிமனிதப்பார்வையில் பெண்ணின் கண்ணீருக்கு அர்த்தம் தெரிகின்றது. அவளின் பாசம் காதல் அன்பு புரிகின்றது.

ஸ்வேதகேது கும்பிடத்தகுந்தவர். பெண்ணை ஆணுக்கு சரிநிகராக வைத்தவர்.

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.