அன்புள்ள ஜெ வணக்கம்.
சொல்வளர்காடு அருமையான மாற்றத்தில் தன்னை தொடங்கிக்கொள்கின்றது. மாற்றம் மட்டுமே மாறாதிருக்கக்கூடியது.
மாறுவதால் மட்டுமே பழமை புதுமையாக நிற்கின்றது. பழமை புதுமையாக மாறுவதற்காக மட்டும்
இ்ங்கு மாற்றம் நடக்கவில்லை உண்மையின் புதுஒளிதளிர் ஒன்று கிளைப்பதற்காக மாற்றம் நிகழ்கின்றது.
பாண்டவர் நடத்திய ராஜசுயயாகத்தில் கண்ணன் குலமுதல்வானாக நிறுத்தப்படும் இடத்தில் பிறப்பால் வர்ணம் உருவாகவில்லை
அது செயலால் நிலை நிறுத்தப்படுகிறது என்று சிசுபாலனை போருக்கு அரைகூவல் விட்ட கண்ணன்
காட்டுகின்றான். இங்கு பிறப்பு வழிவந்த குலம் என்னும் பழமை செய்யும் செயல்வடிவால் மாற்றப்பட்டு புதுமைக்கொண்டு
உண்மையை உரைக்கிறது.
//அறிக,
ஷத்ரியன் என்பவன் ஷத்ரியர்களை வெல்லும் ஆற்றல் கொண்டவன். கன்றோட்டி பால்
கறந்து நெய்யெடுப்பவன் யாதவன் என்றால், உழுது அமுது விளைவிப்பவன் வேளிர்
என்றால் வெல்லற்கரிய வாளை ஏந்துபவன் ஷத்ரியன்” என்றார்.//
பாஞ்சாலி
சூதுகளத்திற்கு
இழுத்து வரப்பட்டு அடிமையென நடத்தப்படும் இடத்தில் மன்னனே இறைவன், அவன்
சொல்லே வேதம்
என பீஷ்மர் துரோணர் கிருபர் அவையோர் மற்றும் கட்டியக்கணவன் அனைவரும்
அசையமறுக்கும்
இடத்தில் பாஞ்சாலி மன்னம் மனிதனே அவன் சொல் காம குரோத மோகத்திற்கு
அப்பாற்பட்டது அல்ல
என சொல்லெடுக்கும் பாஞ்சாலி ஒரு மாற்றத்தின் முதல்அடையாளம். அன்னையர்
எல்லாம் பெண்ணென்று ஆகும் ஒருதருணத்தில் அவள் பெண்ணெல்லாம் அன்னையே என்று
காட்டி பெண்மையில் அவள் ஒரு ஒளிமணி என மின்னுகின்றாள். பெண்ணின் சொல் முன்
பழமையான அரசொன்று அசைந்து புதுயாக புரள இருக்கின்றது.
//“நான் குலமகள் அல்ல. துணைவியல்ல. மகளும் அல்ல. நான் அன்னை. என்னை தளைக்க உங்களிடம் நெறிகளில்லை.”//
இந்த
பாஞ்சாலிதான் காவிரிப்பூம்பட்டினத்தில் கண்ணகியாக பிறந்து மதுரையம்பதியில்
கொற்றவையாக நின்றாள். கண்ணகி தன்னை கோவலனின் அன்னை என்று உணரும் தருணம்
அது. இங்கு அடிமைப்பட்ட கணவர்களின் அன்னையென உணரும் தருணம்
பாஞ்சாலியுடையது.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு- என்கின்றார் வள்ளுவர்.
ஸ்வேதகேது மட்டும்தான் மெய்ப்பொருள் கண்டவானா?
உத்தாலகர் மெய்ப்பொருள் காணாதவாரா? இவன் என்ன புதுமை செய்துவிட்டான்.
வாழையடி வாழையாக
வரும் சீடர் தொடர்வரிசையில் ஸ்வேதகேது ஒரு அரசுதருவென முளைக்கின்றான். வாழை தன் அடிவாழை
வாழையில்லை என கண்டு திகைக்கும் தருணம் இது. நீயும் நானும் ஒருவனத்தில் நின்றாலும் மரமென சொல்லப்பட்டாலும்
நீயும் நானும் அறியும் உண்மை வேறு வேறு என ஸ்வேதகேது காட்டுகின்றான். ஸ்வேதகேது தந்தை
என்ற உறவையும் ஆசான் என்ற இணைப்பையும் அசைக்கும் இடத்தில் பழமையை புதுமையாக்கி மெய்மை
வேறு என்று காட்டுகின்றான்.
உத்தாலகர் தனது குருநாதர் தனது பயிர்வயலைப்பார்க்கவரும்போது
உடைப்பெடுத்த வரப்பை அடைக்க நேரமில்லை என்று தன்னையே வரப்பாக்கிக்கொண்டார். அப்படி
வரப்பாக்கியதில் தன்சீடன் உடல்கொண்ட சேற்றையே மணக்கும் சந்தனம் என்று தௌம்மியர் எண்ணுகின்றார்.
அந்த பழமை மணத்தை பழமை வரப்பை ஸ்வேதகேது உடைக்கிறான். அவன் உடைக்கும் இடத்தில் நின்று
உத்தாலகர் தனது வழிவழி குருநாதர் காலடிகளை எண்ணிப்பார்க்கின்றார். அந்த காலடிகளில்
இருந்து வந்த ஓரு புதிய காலடி ஸ்வேதகேது. அவனிடம் பழமையின் மணக்கும் மணமில்லை ஆனால்
மெய்மையின் ஒளிமணம் நிறைகிறது.
பழமையை
உடைப்பவர்கூட பழமையை உடைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் உடைக்கவில்லை காலமே
அதை செய்கின்றது என்று எண்ணுகின்றேன். காலவடிவாகி வரும் மெய்மை அதை
செய்கிறது என்று எண்ணுகின்றேன். வழிவழி செல்லும் காலடித்தடத்தில் ஏன்
ஸ்வேதகேது தனது காலடியை மாற்றி வைக்கிறான்? ஏன் அவனுக்கு மட்டும் அவன்
பிறப்பின் வழிமுறை ஒரு மனபிளவை ஏற்படுத்துகின்றது? மனம் ஒன்றின் மீது
வைக்கும் நம்பிக்கையும் நம்பிக்கை தகற்பும் வாழ்க்கை முறையை காலம் காலமாக
மாற்றிப்போடுகின்றது.
வழக்கம்போல் உங்களுக்கு கொடுக்க நன்றி மட்டும்
உள்ளது. நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்