[ஆலந்தூர் திரௌபதி அம்மன்]திரௌபதியை கொற்றவையாக அறிதல் வெண்முரசு காட்டும் புதுக்கோணமா? இல்லை. அது பாரம்பரியமாக இருந்துவருவது என்றே கருதுகிறேன்.
பல்வேறு தெய்வத் திருவுருக்கள் நிறைந்தது இந்துமதம். அத்தெய்வங்கள் ஒன்றுக்கொண்று உறவுகளால் தொடர்புபடுத்தி பார்க்கும் மரபு உள்ளது. பிரம்மத்திலிருந்து மூன்று தெய்வங்கள் தோன்றும்போது அவர்களுடன் முத்தேவியரும் தோன்றினர். சிவன் - கலைமகள் , திருமால்-பார்வதி, பிரம்மன்-திருமகள் என இரட்டையர்களாக தோன்றினார்கள். ஆகவே அவர்கள் ஒருவருக்கொருவர் சகோதர முறையிலானவர்களாக கருதப்படுகிறார்கள். அதனால் பார்வதி திருமாலின் சகோதரி என ஆகிறார். எனவே விஷ்ணுவும் பார்வதியின் தோன்றலான துர்க்கை இப்படி நெருக்கமான தத்துவத்தால் பிணக்கப்பட்டிருக்கிறார்கள். மகாபாரத்தில் விஷ்ணுவை நாம் கிருஷ்ணனாக உணர்கையில் துர்க்கையை திரௌபதியாக அறிவது பொருத்தமான ஒன்றென ஆகிறது. இது எந்த அளவுக்கு சரியெனப் பார்க்கலாம்.
சில தெய்வ தத்துவங்களை வேத நூல்களில் பழம் இலக்கியங்களிலிருந்து அறிந்து கொள்ள முடியும். அதைப்போன்று தொன்றுதொட்டு நடந்து வரும் நாட்டார் கலைகள் ஊர்த்தெய்வ வழிபாட்டு முறைகள் வழியாக நாம் தெய்வத் தத்துவங்களை நாம் அறிந்துகொள்ளலாம். ஒரு கோயிலில் பெண்தெய்வம் முதன்மைத்தெய்வமாக வீற்றிருக்கும் என்றால் அது பெரும்பாலும் மாரியம்மன் காளி போன்ற கொற்றவை அம்சம் கொண்ட தெய்வங்கள்தான். அதேபோல் திரௌபதியம்மன் எழுந்தருளும் கோயில்களில் அவரே முதன்மைத் தெய்வமாக கருவறையில் வீறிருப்பார். கொற்றவை அம்ச தெய்வங்களைப்போல் திரௌபதியம்மன் சிலை தனித்து ஊர்வலம் வரும். அதைப்போல் தீமிதி உடுக்கையுடன் பாடல் போன்ற அனைத்து வழிபாட்டு முறைகளும் ஒன்று போல் இருக்கும்.
தெருக்கூத்துகளில் அசுரர்களை கொல்வதற்காக இறுதியில் காளி வேடம் வரும். தீபந்தங்களோடு ஆக்ரோஷமாக ஆடி அசுரவதம் நிகழும். அதே போல் மகாபாரதக் கிளைக்கதைகளாக அசுரர்வதம் கதைகள் தெருக்கூத்தாக நடத்தப்படுவதைப் பார்த்திருக்கிறேன். அதில் வீரப்பாஞ்சாலி என அசுரனை காளியம்மனின் அதே உடையலங்காரத்தோடு வந்து அசுரனை வதம் செய்வது திரௌபதி அன்னைதான். சாதாரணமாக பாண்டவரின் மனைவியாக வருபவர் அசுரனை அழிக்க வீரபாஞ்சாலியாக உருமாறி வருவார், ஆகவே இந்துக்களின் ஆழ்மனதில் திரௌபதி என்பது கொற்றவையின் அம்சம் என்றே பதிந்து உள்ளது.
திரௌபதி என்பதல்ல அநீதியை எதிர்த்து நிற்கும் பெண் ஆளுமைகள் எல்லாம் கொற்றவையின் அம்சமாக பார்ப்பது நம் மரபு. கண்ணகியையும் கொற்றவையின் அம்சமாகவே பார்க்கப்படுவதை வழிபடப்படுவதை நாம் அறிவோம்.
வெண்முரசில் திரௌபதி தன் ஆளுமையிலிருந்து இறங்குவதை என்றும் நாம் காண்பதில்லை. சிறுமகளாக இருக்கையிலும் ஐவரை மணந்து வாழ்கையிலும் அவள் பெருமை நிலைத்து நிற்கிறது. அவள் எந்த சூழலிலும் தன் நிலையிலிருந்து என்றும் கீழிறங்குவதில்லை கிருஷ்ணனாவது தன் காதலியர்முன் தலைவணங்கி நிற்கிறான். ஆனால் திரௌபதி என்றும் தன் கம்பீரத்தை கைவிடுவதில்லை. இறுதியில் அஸ்தினாபுர அவையில் அவள் இழிவினை எதிர்கொள்ளும்போதுகூட தன் பேராளுமை குறைவுபடாமல்தான் பேசுகிறாள். தனக்கு கொடுமை நிகழ்ந்துவிட்டது என கொதித்து தன் வாயால் வஞ்சினம் உரைப்பதாக இல்லை. அந்த வஞ்சினம் மாயையால் கூறப்படுகிறது என்பது வெண்முரசு. திரௌபதியை மூல மகாபாரத்தைவிட மிகவும் உயரத்தில் வைத்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. வெண்முரசின் திரௌபதி மேலும் அதிகமாக கொற்றவையின் அம்சமென ஒளிர்ந்து நிற்கிறாள்.
தண்டபாணி துரைவேல்