Thursday, July 14, 2016

செவிலியர்



ஜெ

இந்திரநீலம்தான் மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதை வாசிக்க ஒரு தமிழ்ப் பாரம்பரிய மனநிலையின் தொடர்ச்சி இல்லாமல் முடியாது என இப்போது தோன்றுகிறது. என் நண்பர் ஒருவரிடம் அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அவருக்கு இந்திரநீலத்தில் செவிலியரின் இடம் பிடிபடவே இல்லை. வேலைக்காரிகள் என்ற அளவிலேயே புரிந்துகொண்டிருந்தார். செவிலியர்கள் கொள்ளும் உணர்வு எழுச்சிகள் அவருக்குப் பிடிபடவே இல்லை. அவை கொஞ்சம் மிகை என்றுகூட சொன்னார். அவர் சைவர். அவரிடம் நான் அந்த அழகியல் முழுக்க திருவாய்மொழிகளில் இருந்து எடுக்கப்பட்டது என்று சொன்னேன்.



எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியைநான் கண்டபின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனிவாய் ஒன்றி னோடும் செல்கின்றது என்நெஞ்சமே.




என்று செவிலியை தன் ஆல்டர் ஈகோவாக நினைத்து தலைவி பாடுகிறாள். செவிலியர் காதல்கொள்கிறார்கள். அதேசமயம் அன்னையாகவும் இருக்கிறார்கல். அந்த மயக்கம் அழகாக வந்த ஓர் இடம் உள்ளது இந்திரநீலத்தில். கண்ணன் காதலனாக வந்து மகனாக மாறி அழைத்துச்செல்கிறான் செவிலியை. இந்த அழகியல் தமிழ் வைணவத்தில் இருந்து எழுந்துவந்தது

சுவாமி