Thursday, July 14, 2016

பீம வேதம் (பன்னிரு படைக்களம் -88




இந்து மதத்தில் வேதங்கள் எவையும் இறைவன் கற்பாறையில் எழுதி மனிதனுக்கு கற்பிக்கப்பட்ட கட்டளைகள் இல்லை,  பிரத்யேகமாக ஒருவரின் வாயிலாக இறக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டதில்லை.  வேதம் என்பது விண்ணில் பரவியிருந்தது, அதை முனிவர்கள் கண்டு எழுதினர் எனச்சொல்வது மரபு. அதாவது வேதக்கருத்துக்கள் ஒருவர் வாயிலாக வந்தாலும் அதற்கு அவர் உரிமையானவர் அல்ல. உண்மைகள் என்றுமிருப்பவை. அதை  ஒருவர் அறிந்து கூறுவதாலேயே அந்த உண்மை அவருடைய உண்மையென ஆகிவிடாது. அதே நேரத்தில் அந்த உயர்ந்த உண்மைகள எல்லோராலும் அறிந்து சொல்லிவிடமுடியாது. அதற்கான நுண்ணுணர்வு மிக்க கூர்மையான சித்தம் ஒருவருக்கு இருக்க வேண்டும். அப்படியே நுண்புலம் இருந்தாலும் அதை கிரகித்துக்கொள்ளும் தருணம் வாய்க்கவேண்டும். சிலசமயம் வெறும் தருணம் மட்டுமே  வேதம் வெளிப்படுவதற்கு போதுமானதாக அமைந்துவிடுவதுண்டு. தன்னில் தானே திளைத்திருக்கும் ஏகாந்தம், மனதிலே குறைகளே தோன்றாத முழுமையான நிறைவு, சிந்தை ஒருங்கி ஒன்றையே சிந்த்தித்து இருத்தல் போன்ற தருணங்களில் உயரிய கருத்துக்கள் வெளிப்படக்கூடும். அதே நேரத்தில், கோபத்திலோ துயரத்திலோ அதிமகிழ்விலோ தன்னை மறந்து தன் அகங்காரத்தின் பிடியிலிருந்து விடுபட்டு தன்னை பிரபஞ்சத்தின் ஒரு துளியென உணர்ந்து ஒன்றியிருக்கையிலும் உயர் வேதம் கண்டறியப்ப்ட்டு வெளிப்படக்கூடும்.
     பீமன் சூது களத்தில் பணயமாக வைத்து தோற்கடிப்பட்டு அடிமையென நிற்கிறன். அவன் மனைவி அரசவையின் நடுவில் பெரும் அவமதிப்புக்காளாகிறாள். அதை எதிர்த்து எழ முடியாமல், ஒரு வார்த்தை பேசமுடியாதவனாக அமர்ந்திருக்கிறான். அவனுக்கு வாழ்வில் இதைவிட துயர் மிகுந்த ஒரு தருணம் வரமுடியாது. அவன் தன் தனிப்பட்ட இழிவை இழப்பை விடுத்து அதை சமூக அவலமென பொதுமைப்படுத்தி அதன்காரணமாக அவன்கொள்ளும் பெருஞ்சீற்றத்தில், அவனிலிருந்து வெளிபடுகிறது உயர்பெரும் வேதம்.  பீமன் உரைப்பது உலக உயிர்க்குலம் மொத்தத்திற்குமான ஒன்றாக அமைகிறது.  
    கதியற்று இரந்து நிற்கும் ஒருவனுக்கு தருவதுக்கு ஏதுமற்ற சமூக விதி எப்படி அறமென ஆகும் என அறை கூவுகிறான்.
   உங்களில் எளியோருக்கு அளிக்க உங்களிடம் ஒன்றுமில்லையா? உங்கள் முன் விழிநீருடன் நின்றிருப்பவர்களுக்குச் சொல்ல அறம் ஒன்றும் இல்லையா?  
அவனின் வார்த்தைகள் சட்டங்கள் விதிமுறைகளுக்கு பின்னால பாதுகாப்பாக நின்றுகொண்டு சுகித்துக்கொண்டிருப்பவரை பிடித்து வெளியில் இழுத்து கூண்டிலேற்றுகிறது. அவர்கள் சட்டங்களை இயற்றி பாதுகாக்கும் குலகுருக்கள், ஆசான்கள், பேரமைச்சர்கள், தளபதிகள்.  தாங்கள் போற்றும் சமூக விதிகளின் கீழே சிக்கி துயருறுபவர்களை காணாது கண்களைத் திருப்பிக்கொண்டவர்கள்.  
   மனிதகுலம் தன்னை மற்ற விலங்கினத்தில் மாறுபடுத்திக்கொள்வது எளியோரை கைவிடாமல் அவர்களையும் காத்து நல்வாழ்வு கொடுக்கும் விதத்தில் தன்சமூகத்தை அமைத்துக்கொண்டிருத்தலால்தான்.  வல்லவன்தான் வாழ்வான் என்றால் அதற்கு இந்தச்  சமூக அமைப்புகள், அரச முறைகள், சட்ட விதிகள் எதுவுமே தேவையில்லை. இவை அனைத்தும் இருந்தும் ஒரு எளியவன் துன்புறுத்தப்பட்டால் அவை வீண் என ஆகிறது.
    மற்ற விலங்கினங்களைவிட மனித இனத்தில்  பெண் பலவீனமாக இருக்கிறாள்.  மானுடப் பெண்கள் தன் குழவிகளை நீண்டகாலம் போற்றி பாதுகாத்து உணவூட்டி வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள். அவள் முனைப்பு முழுதும் அவள் அதில் செலவிடுவதால் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் பொறுப்பை ஆடவரிடம் கொடுத்திருக்கிறாள். ஒரு பெண்ணை பாதுகாக்கவேண்டியது ஆணின், சமூகத்தின் தலையாயக்கடமை. ஒரு அரசன் அந்த சமூகக் கடமை நிறைவேற்றப்படுகிறதா என கண்காணிக்கும் கடமைகொண்டவன். ஆனால் இங்கே ஒரு அரசனின் கண்ணெதிரே அவன் ஆணையின்படி ஒரு பெண்ணிற்கு அநீதி இழைக்கப்படுகிறது. பீமன் அதை இடித்துரைக்கிறான். 
“அரியணை அமர்ந்த சிறுமதியனே, உன் அவைக்கு வந்த ஒற்றை ஒருபெண்ணின் மதிப்பைக் காக்க உன்னால் முடியாதென்றால் உன் கோலுக்கு என்ன பொருள்? அதற்கும் இடுகாடு காப்பவனின் தடிக்கும் என்ன வேறுபாடு?” என்றான்.
     உலகில் உள்ள அனைத்து நூல்களும் அறத்தை மனிதனுக்கு உணர்த்தும்பொருட்டே. அது வெறும் நீதி நெறிப் புத்தகங்களாக இருக்கலாம். புராணக் கதைகளாக இருக்கலாம். கவிதையாக அல்லது புத்திலக்கிய வகைகளாக இருக்கலாம். வெளிப்படையாக தெரியாவிட்டாலும் படிப்பவர் சிந்தையில் ஆழ்மனதில்,  அற உணர்வை தூண்டாத நூல் ஒரு நூலே அல்ல. அதைப்போல் ஏதேனும் அறத்தை வெளிப்படையாகவோ குறியீடாகவோ கொண்டு  காண்பவர், கேட்பவர் உள்ளத்தில்  சேர்க்காத எந்தக் கலையும் ஒரு கலையல்ல. அதே நேரத்தில் இதையெல்லாம் கற்று பயின்று அறங்களை உணர்ந்த ஒருவன் அந்த அறத்தை தன் வாழ்வில் கடைபிடிக்காமல் போனானென்றால் அதனால் பயன் என்ன. ஆயிரம் நெறி நூல்களை இலக்கியங்களைப் படித்தாலும் அறத்திற்கு மாறாக,  சக மனிதனின்மீது வன்மத்தை உமிழ்பவன், தாழ்வென நடத்துபவன் அடந்த பயன் ஏதுமில்லையல்லவா?  பீமன் கடுமையான வார்த்தைகளில் கூறினாலும் அது உயர்ந்த உண்மை அல்லவா?
 சொல்லாய்ந்து பொருளாய்ந்து அவன் கற்ற நெறிநூல்கள் அளித்தது இதுதானா? இருளில் விளக்கும், போரில் வாளும், தனிமையில் காவலும் என்றாகவில்லை என்றால் கற்றவற்றுக்கு என்ன பொருள்? அது உணவென உட்புகுந்து வெளியேறாது தங்கிய மலம் அன்றி வேறென்ன?”
  
 ஆனால் மற்றவர்களையெல்லாம் விடுவோம் தான் கற்ற கல்வியின் படி வாழ முயலும் தருமனுக்கு என்னவாயிற்று?  அவன் சூதாடுவதைக்கூட ஒருவகையில்  பொறுத்துக்கொள்ளலாம். அவன் செல்வம் படைகள் நாடு போன்றவற்றை இழப்பதைக்கூட  ஊழின் காரணம் என சொல்லிக்க்கொள்ளலாம். ஆனால் அவன் எப்படி அவன் தம்பியரை மனைவியை பணயமென வைத்து ஆடினான். எப்படி அவர்களை அவன் தன் உடமையெனக் கருதினான்?
       ஆனால் மனித சமூகத்தில் ஒருவரின்  மனைவி, தன்பராமரிப்பின் கீழ் உள்ள சகோதரர் போன்றஉறவினர்கள்,  பணியாட்கள் ஆகியவர்கள் அவருக்கு பணிந்து நடப்பதும், அவர் ஆணையை ஏற்று நடப்பதென்பதும் எங்கும் எப்போதும் உள்ளதுதானே. அதன் காரணமாக ஒரு தலைவனுக்கு தன் கீழ் இருப்பவரின் மேல் உரிமை இருப்பதாக அல்லவா தோன்றுகிறது.  ஆனால் அது உரிமையல்ல பொறுப்பு அல்லது கடமை எனக் கூறவேண்டும்.   ஒரு தலைவனுக்கு அவன் தலைமையின் கீழிருக்கும் ஒருவருக்கு இடையே ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கிறது. தலைவனுக்கு வேண்டிய பணிகளை ஆற்றுவது ஒருவர் கடமையென்றும், அவரின் நலனைக்காத்தல் அந்த தலைவரின் கடமையென்றும் அதில் இருக்கிறது.  அதன் காரணமாக அவர் அந்த தலைவனுக்கு உடமையென ஆவதில்லை. இதுதான் மனிதர் கூடிவாழ பல்வேறு அடுக்குகளாக சமூகம் அமைந்து உயர்ந்திட  ஏற்படுத்தப்பட்டிருக்கும்   அமைப்புமுறை.  ஆனால் தமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பினை ஒரு உரிமைஎனக் கொண்டு தன் கீழுள்ளவர்களை உடமைப்பொருளென காண்பது அறமீறல் ஆகும். தருமன் தன் தம்பியர் மற்றும் மனைவி ஆகியோர் தனது மேல் தான் கொண்டிருக்கும் பொறுப்பினை அவர்கள் மேல் உரிமையென கருதுகிறான். இந்த விஷயத்தில் பழைய வேதங்களும் நீதி நூல்களும் பொறுப்பின் காரணமாக தலைவனுக்கு உரிமை இருக்கிறது என்று கூறி வருகின்றன.    சில  தலைவர்கள் அதைப் பின்பற்றலாம். அறத்தின் வழியில் அனுதினமும் அகலாமல் செல்வதை நோக்கமாக கொண்ட தருமன்   சூது போதையின் காரணமாகவே தான் அவர்கள் மேல் இருக்கும் கடமையை உரிமையெனக் கொண்டு அவர்களை உடமைப் பொருளென சூதில் பணயம் வைத்து பெரும்பிழை செய்கிறான். 
      அடுத்து பீமன்  பேசுவது உயர்ந்த அத்வைதம். தத்வமசி, அஹம் பிரம்மாஸ்மி, சிவோஹம் போன்ற மகாவாக்கியங்கள் எல்லாம் மனிதருக்கும் பரப்பிரம்மத்திற்கும் உள்ள உறவை மட்டும் குறிக்கவில்லை. மனிதர்கள் விலங்குகள் என அனைத்து உயிரினங்களில் ஒன்றுக்கு ஒன்று இடையிலான உறவைப்பற்றியும் குறிக்கிறது என பீமன் கூறுகிறான்.
  “இங்குள அனைத்தும் ஒன்றே என்றறியாது எதைக் கற்றான்? அனைத்திலும் கரந்துள்ள ஒன்றே தான் என்று அறியாது எதைத் தெளிந்தான்? எனவே மண்ணில் எவ்வுயிரும் எதற்கும் அடிமையல்ல என்று உணராது எதைச் சென்றடைந்தான்? ஒவ்வொன்றின் நெறியையும், மீளும் வழியையும் வகுத்தளித்து நின்றாடுவதை நோக்கி நீயே நான் என்று சொல்லத்தெரியாதவன் அறிந்ததுதான் என்ன?”
மாயையியில் மதிமயங்கி, அகங்காரத்தினால் பிணைக்கப்பட்டு சிறைபட்டிருப்பவன், தன் விடுதலையை உணராதவன்   பிறரின் விடுதலையை அங்கீகரிப்பதில்லை அதனால்  மற்றவரை தன் அடிமையென கொள்ளவைக்கிறான். பீமன் பேருருக்கொண்டு முழக்கமிடுகிறான்.
     “மானுடர் எவருக்கும் மானுடர் உரிமையல்ல என்றறியாதவன் தன்னுள் நிறைந்துள்ள  ஒன்றின் கட்டின்மையை எப்போதேனும் உணர்ந்திருப்பானா? விடுதலை விடுதலை என ஏங்கும் அதன் குரலை ஒருகணமேனும் கேட்டிருப்பானா?”
வெண்முரசில் ஒரு அற்புதமான கருத்து ஒன்றுண்டு. ஒரு பெண் கொண்டுள்ள பெருங்கனிவே பணிவென ஆகிறது. அந்தப் பணிவின் காரணமாக அவள் ஆணின் ஆளுமைக்கு தன்னை உட்படுத்திக்கொள்கிறாள். அதனால் ஆண் தன் அறியாமையால அவளை உடமைப்பொருளென நினத்துக்கொள்கிறான். நிலத்தை உடமையென என நினக்கும் மடமையைப்போன்றதே அது.  
பெண்ணை உரிமைகொள்ள ஆணுக்கென்ன தகுதி? அறிவிலியே, அவள் கருவில் உறைகின்றது எதிர்காலம். எவரைப் பணயம் வைத்தான் இவன்? அவள் கருவில் பிருதுவும் பரதனும் யயாதியும் ராகவராமனும் மீண்டும் எழவிருக்கிறார்கள் என்றால் அவர்களும் கருவிலேயே அடிமைகள்தானா?
     பீமனிடமிருந்து இத்தகைய உயரிய சொற்கள் வருவது வியப்பளிக்கலாம். ஆனால் பீமனைப்போன்ற ஒருவனிடமிருந்துதான் இத்தகைய பேருண்மைகள் வரும்போலும். மனித கீழ்மைகள் அண்டாத பேருள்ளதிலிருந்து அல்லாமல் இவை வேறெங்கிருந்து வரும்?