வணக்கம்
செவ்வாய் கிழமை, குரு பூர்ணிமா, வாழுங்கலை சத்சங்கிற்கு செல்ல
முடியவில்லை, மாலையிலே வீடு திரும்ப வேண்டிருந்தது. வீட்டில் பூர்ணிமா
தியானத்தை முடித்து, உங்கள் தளத்தை திறந்தால் - சொல் வளர்காடு.
தலைப்பும், முதல் அத்தியாயமும் உணர்த்திவிட்டன, இந்த நாவல் எதை பற்றி என்று, உள்ளூர ஒரு பரவசம்.
உத்தாலகர் சொல்லே என்று உரைக்குமிடத்தில்- பலவிதமான எண்ணங்கள்.
கொற்றவையில், அ இ உ என்ற அடிப்படை ஒலிகளிருந்து ஆதி மனிதன்
மேலும் சொற்களை கண்டு அவற்றின் மீது பொருளை ஏற்றி, மொழியை படைத்தான் என்று
படித்தது ஒரு பக்கம்.
இங்கே லெஸ்டர் என்ற ஊரில், விண்வெளி சுற்றுலா மையம் உள்ளது.
அங்கே பெருவெடிப்பு கோட்பாட்டை பற்றி பார்த்தது, மற்றும், ஆதியின் முதல்
ஒலியை 1964 பூமியில் முதன் முறையாக கேட்டு அதற்கு நோபல் பரிசு பெற்றவர்களை
பற்றி படித்தது ஒரு பக்கம்.
ஓம் என்ற ஆதி ஒலியை, அ, இ,ம் என்று மூன்று தனி ஒலிகளாக
தியானிக்கும் பொழுது, ஆதி ஒலியின் அதிர்வுகள் நமது மனித உடல் உணர்வதும்.
ஒளியின் வேகத்தில், நம்மை விட்டு, பிரபஞ்சத்தின் எல்லையில் அகன்று
கொண்டிருக்கும், ஆதி ஒலியின் மூலத்தையும், நம்மையும் இணைக்கும் மற்றும்
முழு பிரபஞ்சத்தையும், கண நொடியில், கடந்து செல்ல கூடிய
இம்மந்திரத்தை
நமக்கு அளித்த முன்னோர்கள் பற்றியும் ஒரு பெரு மூச்சு.
இவ்வெண்ணங்களுடன் அத்தியாத்தை முடித்தவுடன் புரிந்து விட்டது,
இது குருக்கள் வந்த வழியின் கதையென. ஒவ்வொரு குருவும் அவர்களது சமூக
காலகட்டத்திற்கூரிய வேதத்தை படைத்து, அவர்களது முதன்மை சொல் என்ற ஒன்றை
நிறுவி, அந்த முதன்மை சொற்களை, தங்களது மாணக்கர் உடைப்பதில் நிறைவு
கொள்கிறார்கள். சொல், அதன் மீது பொருள், பொருள் மீது, அறிய முடியாமை,
பொருளே கொள்ள முடியாமை என வேதம் முண்ணகர்கிறது.
தேவதச்சனை பாராட்டி பேசும் பொழுது, கவிஞர்களின் மொழி என்பது,
மொழியின் மழலையை நமக்கு உணர்த்துவது என்று பேசியிருப்பீர்கள். மொழி வளர,
வளர, ஒரு சொல்லின் அர்த்தம் மிகவும் குறுகிவிடும். ஆனால் மொழியின்
தொடக்கத்தில், சில சொற்களே பல அர்த்தங்களில் பயன் படுத்த பட்டிருக்கும்.
ஒரு குழந்தை குறைந்த சொற்களை மட்டுமே கொண்டு ஒரு முழு கதை சொல்லி நம்மை
மகிழ்வு ஊட்டுவது போல.
சொல் வளர் காடு - வேதத்தின் கவிஞனாக தருமனை சித்திருக்கும்
நாவலாக அமையும் என்று எண்ணுகிறேன். தருமனின் காலத்தில் வேதம் சொற்களின்
மேல் எடை கூடிவிட்ட ஒன்று. இருந்தாலும், அவன், அவனது கால கட்டத்தையும்,
வேதத்தின் மழலை கால கட்டத்தையும், அதற்கு இடையில் உள்ள அனைத்தையும் தன்
நியாய நெறியால் எவ்வாறு ஒருகிணைக்கிறான் என்று படிக்க ஆர்வமாக உள்ளது.
வாழ்த்துக்கள்
சதீஷ்