Wednesday, July 20, 2016

இளைய யாதவனிபுன்னகை

 
 
அன்பின் ஜெ,

சமீப நாட்களில், இளைய யாதவனின் புன்னகை என்ற சொல் என் மீது எவ்வளவு ஆட்சி செய்கிறது என்று முழுதுணரும் ஒரு தருணம், சென்ற வாரத்தில் அமைந்தது.

புதுச்சேரியில், ஒரு விழவில் கலந்து விருந்துண்டு, மூன்று வயது மகளுடன் நானும் என் மனைவியும் திரும்பிக்கொண்டிருந்தோம். கிளம்பி சில நிமிடங்களில், எங்கிருந்து நுழைந்ததென்று தெரியாமல் ஒரு சிறு இரு சக்கர வாகனம் சில அடிகள் தூரத்தில் கண் முன்னால். எதற்கும் கணத்தின் ஒரு துளி கூட மிச்சமில்லை. பிரேக்கில் கால் அழுத்தத்தை உணர்ந்த கணம், ‘டொம்’ என்ற மோதும் சப்தம் செவிகளில். வாகனத்தின் வலதுபுறம் விழுந்த நான், தலைக்கவசம் கழண்டதை (பட்டை அறுபட்டு)   உணர்ந்து தலை நிமிர, தலை மயிரை உரசியபடி ஒரு பேருந்தின் பின் சக்கரம் என்னைக் கடப்பதை உணர்ந்தேன். எழுந்து அமர்ந்து சில நிமிடங்களில், மனைவிக்கும் மகளுக்கும் ஒரு அடியுமில்லை என்று உணர்ந்த சந்தோஷ கணங்களில், மகள் சப்தமிட்டாள், அப்பா கால்ல ரத்தம் என்று. 

சுற்றி காப்பாற்றியவர்களின் கதை சொல்லல் ஆரம்பமானது. 

அதில் இரு விஷயங்களே தேவையானது. 

1. தலைக்கவசம் இல்லையெனில், பேருந்தின் முன் சக்கரம் தலையில் ஏறியிருக்கும்.

2. முன் சென்றுகொண்டிருந்தவர், கீழே விழுந்த தொப்பியை எடுக்க உடனே பிரேக்கடித்து நிறுத்தி விட்டார். 

பிறகு வழக்கமான முதலுதவி முடித்து, இடது கால் மூட்டில் கிழிந்த இடத்தில் சில பல தையல் போட்டு வீடு திரும்பினோம். 

என் மனைவியும், விபத்து நடந்த இடத்திலிருந்த மற்றவர்களும் ஆரம்பத்தில், என்னை தேற்ற ஆரம்பித்தவர்கள், சில நிமிடங்களில் அதை கைவிட்டார்கள். ஏனென்று என் மனைவி பிறகு காரணம் சொன்னாள்,  உயிர் பொழச்சி, கால்ல  ரத்தம் வழிஞ்சிகிட்டிருக்கும்போது, ஒருத்தன் சிரிச்ச மூஞ்சோட இருந்தா எவன் கிட்ட வந்து கொஞ்சுவான்’ என்றாள்.

இன்று எட்டாவது நாள், இடது காலை அசைக்காமல், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்தபடி, தையல் பிரிக்கும் நாட்களுக்காக காத்திருக்கும் நேரத்தில்   எதையேனும் வாசிக்கலாம் என்று இரண்டு புத்தகத்தை(ங்களை) எடுத்தேன்.

ஒன்று இந்திர நீலம், மற்றது இன்று பெற்றவை.

இந்திர நீலத்தை மீள மீள வாசித்துக்கொண்டிருக்கிறேன். இப்போதைய மனநிலைக்கு அது உகந்ததாக இருக்கிரதெனக்கு. இடையிடையே வாசிக்கும், ‘இன்று பெற்றவை’யில் ஒரு பகுதி என்னை மீண்டும் பதின்ம வயதில் குழுமமாக படித்த நினைவுகளில் கொண்டு சென்று நிறுத்தியது.

அந்தக் கவிதை:- (எந்தெந்த வகையில் இது ஒரு பாலுணர்வுக்கவிதை என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்)

மெய்க்காட்சி

கண்கள் என்று ஏன் பெயர்!
தொட்டுச் சிலிர்க்க வைப்பதனாலா?
குத்தும் கூர்மையினாலா?
நாணிப் புதைந்துகொள்வதனாலா?

என் நாவின்
உரையாடலில் 
சிலிர்த்து
விழித்தெழுவதனாலா?

உணர்வுகளின் தழலில்
சுட்ட செம்புபோல்
சிவந்து ஒளிர்வதனாலா?

என் இனிய 
அதிகாலைத் துயிலில்
மெதுவாகத் தொட்டு
வருடிச் செல்வதனாலா?

என் துயரில் 
அமுதூட்டுவதனாலா?
அவை 
யான்நோக்காக்கால்
நிலம் நோக்கும்
நோக்குங்கால்
தான் நோக்கி
மெல்ல நகும்.

‘கே.எஸ்’ என்று ஒருவர் எழுதியதாக கட்டுரையில் சொல்லியிருக்கிறீர்கள். 

இருக்கும் இரண்டு கால்களில், ஒன்றை அசைக்க முடியாமல், நீட்ட வாக்கில் வைத்திருக்கும் வலியிலிருந்தும், அனைத்து அடிப்படைத் தேவைகளையும் இடது காலை நீட்டியே வைத்துக் கொண்டு செய்ய வேண்டிய கொடுமையான மனநிலையிலிருந்தும், ’இந்திரநீலம்’  காப்பாற்றிக்கொண்டிருக்கிறது.Regards,

Sivakumaran.R
​​