ஜெ
வெண்முரசு
நாவல்களில் உள்ள வீரயுகம் பற்றி ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். நான் அன்றைக்குள்ள
போர்முறை சாகசம் எல்லாவற்றையும் ஒரு சரித்திரமாகவும் நடந்த சம்பவங்களாகவும் பேசினேன்.
அவர்
யூதர். பாகன் மித்துக்களைப்பற்றி நிறைய ஆராய்ச்சி செய்தவர். அனிமேஷனில் பெரிய நிபுணர்.
அவர் ஒரு விஷயம் சொன்னார். சுவாரசியமாக இருந்தது. அதாவது வீரயுகத்தில் நிகழ்ந்த போர்களும்
போட்டிகளும் சூளுரைகளும் எல்லாம் அன்றைய யதார்த்தம். அவையெல்லாம் அப்படியே பதிவாகி
இலக்கியமாகிவிட்டன. ஆனால் இன்றையவாசகனுக்கு அவையெல்லாம் நேரடி அனுபவம் அல்ல. உண்மையில்
அவற்றைப்பற்றி அவன் எப்படி கற்பனைசெய்தாலும் அவை பொய்தான்.
அவையெல்லாம்
இன்று ஏன் முக்கியம் என்றால் அவை இன்றைக்குக் குறியீடுகளாக ஆகிவிட்டன என்பதனால்தான்.
அவை படிமங்களாகத்தான் இன்றைக்கு பார்க்கப்படுகின்றன. அவை ஒருவகையான கூட்டான சொப்பனங்கள்
என்று சொல்லலாம். ஹெர்குலிஸ் மெடுஸாவைக் கொன்றதும் சரி அலக்ஸாண்டர் படையெடுப்பும்சரி
ஒரே மாதிரியான ஃபேண்டஸிகள்தான்.அதாவது வரலாறும் புராணமும் ஒன்றே. அவை குறியீடுகளாக
ஆகித்தான் இன்றைக்கு பயன்படுகின்றன. அவற்றின் சாராம்சமான அர்த்தம் மட்டுமே முக்கியம்.
ஆகவேதான்
நாம் வரலாற்றையும் புராணங்களையும் விரும்பி வாசிக்கிறோம். அதாவது வெண்முரசில் வரும்
அத்தனை கதாபாத்திரங்களையும் குறியீடுகளாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். அவற்றின் அத்தனைசெயல்களையும்
நாம் குறியீடுகளாகவே பார்க்கவேண்டும். கனவுகள் மாதிரி. கனவில் எதுவும் உண்மை அல்ல.
யதார்த்தமும் இருக்காது. அவை குறியீடுகள் என்பதனால்தான் அவை முக்கியம். நாம் புராணக்கதைகளை
உண்மையில் அப்படித்தான் பார்க்கிறோம்.
அதாவது
பாஞ்சாலி துணியுரியப்பட்ட நிகழ்ச்சி ஒரு குறியீடுதான். அதை யதார்த்தமாகப்பார்த்தால்
அதிலிருந்து ஒன்றுமே கிடைக்காது. அது யதார்த்தமே அல்ல. எப்படி யதார்த்தமாகச் சொன்னாலும்
கனவுதான். யதார்த்தமாகச் சொல்வதுகூட கனவு துல்லியமாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான்.
ஆகவே யதார்த்தமாக வாசிப்பது மிகவும் தப்பு. அதை என்றைக்கோ நிகழ்ந்த உண்மை என்றே நினைக்கக்கூடாது.
இன்றைக்கு அது ஒரு குறியீடுமட்டும்தான்.
அவர்
சொன்னது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் வெண்முரசு பற்றிய என்னுடைய பலகேள்விகளுக்கு அதிலே
பதில் இருந்தது
சங்கர்நாராயணன்