Thursday, September 1, 2016

வினாக்கள்
அன்புள்ள ஜெமோ,
 
சொல்வளர் காடு எழுப்பும் கேள்விகளும் அளிக்கும் தகவல்களும் உண்மையிலேயே
 ஒரு யக்ஞமே! வாழ்த்துக்கள்.
 
சென்ற அத்தியாயத்தின் இறுதியில்(அத்-43) எனக்கு ஒரு உறுத்தலான எண்ணம் தோன்றியது.
ஒரு பெண்ணின் வஞ்சினம், அவள் சிறுமைப்படுத்தப்பட்டாள் என்பதற்காக - அதை அறத்தின் 
 உரைகல் உராயும் கணமாகக்காலந்தோறும் இலக்கியங்களும் கதைகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் குறியீடாகவும் படிமமாகவும் மீண்டும் மீண்டும் நம் கண்முன் நிறுத்தியுள்ளனர் நம் பிரம்மாக்கள். பாரதியின் பாஞ்சாலி சபதம் படித்து நான் அடைந்த உணர்வெழுச்சிக்கு ஒரு கணம் சென்று பார்க்கிறேன். ஆனால் அதே சமயம்,  நம் கண்முன் நடக்கும்/நடந்த பல ஆயிரக்கணக்கானோர் மடிந்த வீழ்ந்த மானுடத்துயரங்களின் சுவடுகள் கூட ஆய்வு செய்தே அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. மகாபரதத்தின் நடையிலும் காண்டவ வனமும் அதன் அழித்தொழிப்பும் சலனமின்றி செய்த அர்ச்சுனனும் கண்ணனும் பாஞ்சாலிக்காகப்பொங்குவதைப்பார்க்கும்போது எனக்குச்சிறிய துணுக்குகுறல் நேர்ந்தது. குறிப்பாக கண்ணன் மதுராவில் நேர்ந்த குழவிகளின் படுகொலையை அறிந்து சீறும் இளைஞனைப்பார்த்த போது, இவன் எப்படி காண்டவ வனப்படுகொலையை ஆதரித்திருப்பான் என்று புரியவில்லை(இதுவும் லீலையோ?). 
 
 
இது நிற்க நாம் ஏன் ஒற்றைப்பெண்ணின் துயரத்தை பெரும் மானுட சோகமாகக்கொள்கிறோம்? குறிப்பாக இலக்கியங்களிலும் நாட்டார் கதைகளிலும்? அதே கதைகள் புழங்கும் இடங்களில் கூட்டம் கூட்டமாகப்படுகொலைகளும் அழித்தொழிப்புகளும் நடந்தாலும் அவற்றை மிகவும் எளிதாக வரலாற்றிலும் இலக்கியங்களிலும் கடந்து செல்கிறோம். ஏன்? இன்று சிரியாவில் ஒற்றைக்குழந்தை என்ற படிமம் சிக்கியுள்ளது. ஒரு புகைப்பட ஃப்ரேமுக்குள் அடங்குவதைத்தான் நம்மால் தர்க்க ரீதியாக எதிர்கொள்ள இயல்கிறதா? ஒரு உலகம் என்று விரிந்துபட்டாலும் நாம் தனி மனிதர்கள் தானா? 

பொதுவாகவே நான் பார்த்த இன்னொரு விஷயம்.தத்துவம் பேசும் பலரும் அதைப்புறத்தே தனியொரு தளத்தில் வைக்கிறார்கள்.நடைமுறையில் அந்தத்தத்துவம் தங்கள் வாழ்வுடனோ,அடையாளத்துடனோ கலந்துவிடாமல் சர்வஜாக்கிரதையாயிருக்கிறார்கள். அத்வைதம் பேசிக்கொண்டே என்ன ஜாதி என்று கேட்டு குறித்துக்கொள்ளும் அல்லது சதா அதை ஊகிக்க பிரம்மப்பிரயத்தனங்கள் செய்யும் பலர். இது இந்தியர்களிடையே தான் அதிகப்படியாகப்பார்க்கிறேன். இந்த இரட்டை நிலைப்பாட்டை நம் தத்துவ உசாவல் ஊக்குவிக்கிறதா? குறிப்பாக அகம் பிரம்மாஸ்மி என்று சொல்லும் யக்ஞவால்கியர் தன் அறத்துணைவியையும் அதே பிரம்மப்பிரஞ்யையுடன் அணுகவியலாத தன்மை. இதை பார்க்கும் போது வரட்டு வேதாந்தம் எனும் எள்ளல் எழுவதை எப்படிக்கடந்து செல்வது?

அன்புடன்,
ஜெய்கணேஷ்.
 
அன்புள்ள ஜெய்கணேஷ்
 
நலம்தானே
 
இந்த வினாக்களனைத்துக்கும் மகாபாரதத்தில் வலுவான இடம் உள்ளது, மகாபாரதமே அதை எழுப்பிக்கொள்கிறது. வெண்முரசில் மேலும் தீவிரமாக இவ்வினாக்கள் எழுந்து வருவதை நீங்கள் பார்க்கலாம்
 
நூலுக்கு வெளியே நின்று ஒரு விளக்கத்தை நான் அளிக்கக்கூடாது. இவற்றை நாவலுக்குள்ளேயே பேசியிருப்பேன்
 
ஜெ