Thursday, August 8, 2019

பதுமை.


    
  
கோயில்கள் கட்டும்போது அதன் கோபுரங்களில் சுதைச்  சிற்பங்களை செய்து வைப்பதை சிறு வயதில் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். முதலில் ஒரு செங்கல்  கட்டுமானம்தான் இருக்கும். அந்தக்  கட்டுமானத்தை மட்டும் வைத்து அது தெய்வச் சிலையா,   தொழும் அடியவர் சிலையா அல்லது அசுர சிலையா என்பத நாம் அறிய முடியாது. அதன் பின்னர் அதன் மேல் சுண்ணக் கலவை சேர்க்கப்பட்டு முழுமையடையும்போதுதான் நமக்கு என்னவென்று விளங்கும்.    இப்படி அந்தக் செங்கல் கட்டுமானத்தை தெய்வ உருவென அடியவர் சிலையென அல்லது அசுர சிலையென மாற்றுவது அதன் பின்னர்தான் நிகழ்கிறது.
   

நாம்  காதல்  துணையும் நண்பணும் எதிரியும்  தனக்கென ஏற்கெனவே பிறந்து தன் பொருட்டு உயிர்கொண்டு வந்தவர்களாக நினைத்துக்கொள்கிறோம். ஆனால் வெறும் மனிதரென இருக்கும் நபரை நம்முடைய காதல் துணையென, நட்பென அல்லது எதிரியென உருக்கொடுத்து புனைந்து கொள்வது பெரும்பாலும் நாம் தான்.  எதிரிலிருப்பவரிடமிருந்து தற்செயல் நிகழ்வாக நடைபெற்றதில்  எற்பட்ட இன்பம்,  நன்மை அல்லது  தீமையின்   காரணமாக அந்த எதிரிலிருப்பவரை செதுக்கியும் சேர்த்தும்,  அணிகளை ஆடைகளை ஆயுதங்களை  பூட்டியும்  ஒரு காதல் துணையென,  நண்பரென ,  எதிரியென நாமே உருவாக்க்கிக் கொள்கிறோம் என்றுதான் சொல்லவேண்டும்.  

  
 ஒரு பெண்ணைப்பார்க்கும் ஒருவன் அவளுடைய அழகு  பேச்சு  அல்லது பாவனையால் கவரப்பட்டு ஈர்க்கப்படுகிறான். பின்னர் அவளை காதலியென அவன் மனம் வரித்துக்கொள்கிறது. அதன் பின்னர் முன்னர் காணாத அவளுடைய சிறப்புகளை  கண்டு அல்லது உருவகித்துக்கொள்கிறான். இப்போது அவன் அவளைக் காண்பது அவன் உருவாக்கிய காதலி என்ற பதுமையை. அந்தப் பதுமை அந்தப் பெண்ணை அடிப்படையாகக் கொண்டு அவள் மேல் கட்டமைக்கப்பட்டது.  மேலும் அவளை ஈர்க்கும்படி நடந்துகொள்வதன் மூலம் அவளை அவன் காதலுக்கு இணங்கவைக்கப்ப பார்க்கிறான். அவள் காட்டும்  இணக்கத்தை தன் மேல் அவள் கொண்ட ஆழ்ந்த காதல் என்று உருவகித்துக்கொள்கிறான்.  இதைப்போன்று அந்தப் பெண்ணும் அவனை அடித்தளமாக வைத்து  தன் மனதிற்குகந்த காதலன் என்ற பதுமையை புனைந்துகொள்கிறாள். உண்மையில் அவன் நேசிப்பதும் அவள் நேசிப்பதும் அவரவர் மற்றவர்கள்மேல் சேர்த்தும்,  கழித்தும், புனைந்து  உருவாக்கி அமைத்த பதுமைகளையே.  இதைப்போன்று நண்பர் என்பவரும் நம் அருகாமை வட்டத்தில் இருக்கும் ஒருவரின் மேல் நாம் புனைந்துகொள்ளும் ஒரு பதுமைதான்.  அதை இனியவை பேசியும் இயன்ற உதவியைச் செய்தும் நம்பால் இணக்கம் கொள்ளச் செய்து உருவாக்கி வைத்துக்கொண்டிருக்கிறோம்.  இத்தகைய பதுமைகளில்  நாம் செய்து வைத்திருக்கும்  கட்டுமானம் பின்னாட்களில் சலிப்பினால், சுயநலத்தினால் சிதைந்து,   புனைந்து வைத்த உருவெல்லாம் அழிந்து வெறும் அடிப்படைக் கட்டுமானம் மட்டுமே  தெரிகையில் சிலபேர்களுடைய  காதல் நட்பு ஆகியவை முறிந்து விடுகின்றன. அப்போது  தாம் ஏமாற்றப்பட்டதாக அவர் உணர்கிறார்.    அவரை  ஏமாற்றியது முதன்மையாக அவரே தான் என்பதை அவர் மனம் ஏற்றுக்கொள்வதில்லை.

         
நம் எதிரிகளும் நாம் உருவாக்கிக்கொண்ட பதுமைகளே.  ஒரு நபர்  அறிந்தோ அறியாமலோ நமக்குச் செய்த தவறைப் பொறுக்க மாட்டாமல் அவர்மேல்  வஞ்சம் கொள்கையில் நாம் ஒரு எதிரியென்ற பதுமையை அவரை அடிப்படையாகக்கொண்டு உருவாக்க ஆரம்பிக்கிறோம். நம்  மேல் அவர்  செய்த மற்றும்  செய்யக்கூடிய தீமைகளையெல்லாம் கற்பித்து சேர்த்து அந்தப் பதுமை உருக்கொள்கிறது.  அவரின் நாமறிந்த நற்குணங்கள் நமக்கு முன்னர் செய்த உதவிகள், நம்முடன் துணை நின்று செய்த செயல்கள் அனைத்தும் இந்த உருவாக்கத்தின் அடியில் மறைந்து போகிறது. இப்போது வஞ்சம் தீராது நிற்கும் பகையென ஆயுதங்கள் தாங்கி அது எழுந்து நிற்கிறது.  அது நாம் உருவாக்கிய பதுமை என்பதால் நம் குறைகளை  அறிந்த ஒன்றென தோன்றி நம் மனதில் அச்சத்தையும் கோபத்தையும் அதிகரித்தவண்ணம் இருக்கிறது.    இது  அப்பதுமையை மேலும் வலுவும் திறனும்  கொண்டதாக  ஆக்குகிறது.  
    துரியோதனன் பீமனைப்போல ஒரு தானியங்கிப்  பதுமையை செய்து வைத்திருக்கிறான் என்று வெண்முரசு சொல்கிறது. ஆனால் அது துரியோதனன் செய்து வைத்திருக்கும் இரண்டாவது பதுமை. முதல் பதுமை பீமனை உள்வைத்து அவன் உருவாக்கி வைத்திருக்கும் பதுமை.  துரியோதனன் யவனச் சிற்பியின் உதவிகொண்டு உருவாக்கிய பதுமை இதன் நகலே. முதன் முதல் பீமன் சிறுவனாக கானகத்திலிருந்து வந்த போது தனக்கிணையான உடல்கொண்டவன் என்ற சிறு பகையை துரியோதனன் மனதில் தோற்றுவிக்கிறது. ஏனென்றால் துரியோதனன் நூற்றுவரில் மூத்தவன். அவனைவிட திறனிலோ சிறப்பிலோ உயர்வாக அல்லது இணையாக எந்தச் சிறுவனையும் பார்க்காதவன். இப்போது பீமன் தனக்கு இணையென வந்துவிட்டானோ என்று கருதும் அவன் உள்ளம் அந்தப் பகையை தோற்றுவிக்கிறது.   பிறகு நடந்த மற்போரில்  பீமனை வென்றபோது அவன் மேல் கொண்ட பகை விலகிவிடுகிறது.  அப்போது அவன் பீமனை தன் உயிர் நண்பன் எனக் கொள்கிறான். அப்போது  துரியோதனன்  பீமன் மேல் வனைந்துகொள்வது நண்பனென்ற பதுமையை.  ஆனால் கரடியின் பிடியிலிருந்து தன்னை விடுவிக்க முடியாமல் தவிக்கும்போது பீமனின் உதவிகொண்டு தப்பிக்க வேண்டியதாகிவிடுகிறது.  அது துரியோதனனின் அகந்தையைச் சேதப்படுத்தி கோபத்தை உருவாக்குகிறது. 


அந்தக் கோபம் தணிக்க முடியாமலாகி வஞ்சமென ஆகிறது. அப்போது நண்பனென தான் புனைந்து வைத்திருந்த பதுமை உடைந்து சிதறிவிட இப்போது  எதிரி  என்ற பதுமை பீமனை உள் வைத்து உருவாக்கப்படுகிறது.  அவன் பீமனுக்கு இழைக்கும் தீங்குகளிலிருந்து அவன் மறுபடி மறுபடி தப்பித்து வருவது மேலும் மேலும் வஞ்சத்தை அதிகரிக்கிறது.  துரியோதனனுக்கு  எதிரியென பீமன் என்ற பதுமை இப்படி  உருவாகி வருகிறது.  முழுக்க முழுக்க இதில் பீமனின் தரப்பிலிருந்து எந்த காரணமுமில்லை என்பதை நாம் காண்கிறோம்.   பீமனின் அண்ணன் தருமன் என்பதாலேயே அவன் நாட்டை துரியோதனன் கைப்பற்ற நினைக்கிறான், பீமனின் மனைவியாக இருக்கிறாள் என்ற காரணத்தினாலேயே திரௌபதியை அவை நடுவில் அவமதிக்கிறான். பீமனை வெல்வதொன்றே துரியோதனனின் ஆழ்மன விருப்பாக இருந்து குருஷேத்திரப் போர் வரை அவனை இழுத்து வருகிறது. 
    

துரியோதனன் மண்ணின் பொருட்டுத்தான் போருக்குச் சென்றான் என்றால், துரியோதனனின் பிள்ளைகள் கொல்லப்பட ஆரம்பிக்கும்போதே அவன் போரை நிறுத்தியிருக்கலாம். அல்லது  முதல்முறை தன் உடன் பிறந்தான்   போரில் கொல்லப்பட்டபோதுகூட அவன் போரை நிறுத்தியிருக்கலாம். ஏனென்றால் ஒருவன் மண்ணை விரும்புவது தன் பிள்ளைகளுக்காவும் உறவுகளுக்காகவும்தான்.  ஒவ்வொரு நாளும் தன் பிள்ளைகளை, தம்பிகளை, உறவுகளை, நண்பர்களை இழந்துகொண்டே வந்தாலும் அவனை போரை நிறுத்தவிடாமல் செய்தது  அவன் பேருரு கொடுத்து உருவாக்கி வத்திருக்கும் பீமன் என்ற பதுமையே. ஒவ்வொருநாளும் அந்தப் பதுமை வெறிக்கூத்திட்டு அவனை  போருக்கு வா வா என்று அழைத்துக்கொண்டே இருந்தது.  அது அவன் உள்ளம் முழுதும் ஆக்கிரமித்து அவன் சிந்தனை முழுதையும் ஈர்த்து இறுதிப்போர் வரை இழுத்து வந்திருக்கிறது. இடை நாட்களில் எப்போதாவது பீமன் தான் தோல்வியடைந்துவிட்டதாக  துரியோதனன் முன் தலை குனிந்து நின்றிருந்தால் அப்போதே அந்தப் பதுமை உடைந்து சிதறியிருக்கும். துரியோதனன் அஸ்தினாபுரத்தையே தருமனுக்கு தந்திருப்பான் என்று கூட தோன்றுகிறது.  ஆனால் நஞ்சூட்டப்பட்ட பீமன் இறக்கவில்லை குறைந்தபட்சம் நலக்குறைவுகொண்டிருந்தால் கூட துரியோதனனின் வஞ்சத்தை குறைத்து இருக்கும். பீமன் வாரணாவத நெருப்பில் கொல்லப்படவில்லை, மாறாக திரௌபதியின் மணவாளனாக மீண்டும் தோன்றுகிறான். சூதாட்டத்தில் அடிமையென நிற்கும்போதுகூட பீமன் பணியவில்லை, மாறாக துரியோதனனை அவன் தம்பிகளுடன் கொன்றழிப்பதாக சூளுரைக்கிறான்.  இவை ஒவ்வொன்றும் துரியோதனனின் பீமன் என்ற பதுமையை திறன்  மிக்கதாக மாற்றுகிறது.  உண்மையில் இப்போது தாம் உருவாக்கிவிட்ட அந்தப் பதுமையின் பிடியில் அகப்பட்டவனாக துரியோதனன் இருக்கிறான்.  அந்தப் பதுமையை உடைத்து அதிலிருந்து அவன் விடுபடுவது ஒன்று பீமனை வெல்கையில் அல்லது அவனுடைய இறப்பில் என ஆகிவிட்டது.    பீமனுக்கும் பீமன் மேல் துரியோதனன் கட்டமைத்திருக்கும் அவன் எதிரி  என்ற பதுமைக்கும் பெரிய வேறுபாடு உள்ளது.    தம்மை நஞ்சிட்டுக்கொல்ல முயன்றபோதும் பீமன்  துரியோதனன் மீது என தனிப்பட்டு வஞ்சம் கொள்வதில்லை. மனித இனத்தின் மீதே கசப்பு கொண்டவனாக மாறினான். தன்னை காட்டாள் அல்லது  வானரத்தின் இனம் என காட்டிக்கொள்ள விழைகிறான்.  வாரணாவத எரிப்புக்கு பிறகு  கூட அவன் அஸ்தினாபுரம் திரும்புகையில்  கௌரவர்களின் குற்றங்களை மறந்தவனாக அவர்கள் மேல் எவ்வித வஞ்சமுமற்றவனாகவே தென்படுகிறான். திரௌபதியின் சபை அவமதிப்பில் சீற்றம்  கொண்டு அனைவரையும் கொல்வேன் என்று சூளுரைத்தாலும் பின்னர் கானக வாழ்வில் அதை வஞ்சமெனக் கொண்டு உள்ளத்தில் கனன்றுகொண்டிருந்தவன் இல்லை.  
     

நாம் சிலசமயம்  எதிரி  என்ற இதைபோன்ற பதுமையை உருவாக்கி அதன்பொருட்டு நம் நேரம், பொருள், மன அமைதி, மற்றும்  நற்பண்புகளை இழந்து விடுகிறோம். அந்த இழப்பிற்கு ஈடாக நாம் பெறுவது ஒன்றுமில்லை. ஆனால் நம் அகங்காரம் அதை செய்ய விடாது.  இப்படி பதுமையின் உருவாக்கத்திற்கு  இடம் கொடுக்காமல் நாம் விழிப்போடு இருந்து   நாம் எதிரி என கருதும் நபர் நம் எதிரியல்ல, அவர் மேல் பிரதிபலிக்கும் நம் வஞ்சமே நம் எதிரி, அதை உருவாக்கி திறன்கொடுத்து வைத்திருப்பது நாம் மட்டுமே என உணர்ந்துகொள்ள வேண்டும்.   இப்படி நாம் வஞ்சத்தின் காரணமாக புனைந்து வைத்திருக்கும் அந்த எதிரி  என்ற பிம்பத்தை  அகற்றி உண்மையாக இருக்கும் நபரை காணவும் உரையாடுவதற்குமான பொறுமையும் சகிப்புத்தன்மையும் மன்னிக்கும் குணமும் இருக்குமானால் எதிரிகளே இல்லாத வாழ்வு கிட்டும்.  சமுகத்திலும் நாம் மதம் மொழி, சாதி, தேசம் என்றபெயரில் குழுவாக சேர்ந்து ஒன்றாக எதிரி  என்ற பதுமையை   மற்றொரு மக்கள் குழுவை அடிப்படையாக வைத்து   கட்டமைக்கிறோம்.  இதைப்போன்ற பதுமைகள் நமக்கு தீங்கைத் தவிர வேறு எதையும் தராது என்பதும் நமக்கு பேரழிவை ஏற்படுத்த வல்லது என்பதையும்  அறிந்துகொள்ள துரியோதனன் அடைந்த முடிவு நமக்கொரு பாடமாக அமைகிறது என்று எண்ணுகிறேன்.

தண்டபாணி துரைவேல்