Saturday, August 10, 2019

மீறல்




அன்புள்ள ஜெ

துரியோதனனின் வீழ்ச்சி அற்புதமாக அமைந்தது. அவன் ஒர் அரசனாக இருந்தான். தேவனாக மறைந்தான். அவனுடைய தவமும் அதிலிருந்து புன்னகை நிறைந்த முகத்துடன் அவன் எழுந்து வருவதும் அவனுடைய சாவு ஒரே ஒரு அடியில் நிகழ்வதும் பிரமிக்கச்செய்தன. அவன் தேவன் போலிருக்கிறான். அவனைக்கொன்ற பீமன் விலங்கு போலிருக்கிறான். அவன்அமைதி கொண்டிருக்கிறான். பீமன் கொந்தளிப்பாக இருக்கிறான்.

இப்படிச் சொல்ல மூலமகாபாரதத்தில் இடமுண்டா என்றால் சொர்க்காரோகண பர்வத்தில் இதற்குச் சமானமான காட்சிகள் வருகின்றன. துரியோதனன் அவனுடைய கலங்காத வீரத்தால் வீரசொற்கத்தில் இருக்கிறான். பீமன் மனம் கலங்கி அலைகிறான் என்று வருகிறது.

அந்தப்போர்க்களக் காட்சி, அதிலுள்ள போர் நுட்பம் எல்லாமே பலமுறை வாசிக்கவேண்டியவை. அவர்களுக்கிடையேயான போர் என்பது ஒரு பெரிய தவம் போல என்று பலமுறை சொல்லப்பட்டுள்ளது. அது ஒருவர் தன்னிடமே போரிடுவதுபோல. அவர்கள் இருவரும் ஒன்றே. ஆகவே அந்தப்போர் அத்தனை பெர்ஃபெக்ட் ஆக உள்ளது. அதில் நிகழ்ந்த ஒரே ஒரு இம்பெர்ஃபெக்‌ஷன் அந்த தொடையில் அடிப்பது. ஆனால் அந்த அபஸ்வரம் இல்லாவிட்டால் அந்தப்போர் முடிவுகே வந்துவிட்டிருக்காது. ஆகவே அது நிகழ்ந்தது. அது மீறல்தான். ஆனால் அதுதான் போரை முடிவுக்குக் கொண்டுவரமுடியும். கவித்துவமாக பலகோணங்களில் யோசிக்கவேண்டிய விஷயங்கள் இந்த அத்தியாயத்திலே இருந்தன

ராஜசேகர்