Monday, July 7, 2014

மகாபாரதம் மறுபுனைவின் வழிகள்

மகாபாரதத்தை மறு ஆக்கம் செய்யும் நவீன இலக்கியப்படைப்புகள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. அவை எடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தின் எல்லை என்ன? எந்த அளவுகோலைக்கொண்டு அவற்றின் சாதனையை அளப்பது? – சிலகடிதங்களால் இக்கேள்விகள் என்னிடம் எழுப்பட்டன.
இலக்கியத்தின் எல்லையை எவரும் தீர்மானிக்க முடியாது. எவர் விதி வகுப்பது, எப்படி அதை நடைமுறைப்படுத்துவது? இலக்கியம் தன்னிச்சையான போக்கில் செயல்படும். வாசகன் அவற்றை எதிர்கொள்வதில் மதிப்பிடுவதில் விதிகளை உருவாக்கிக்கொள்ளலாம்.
இந்தியமொழிகளிலெல்லாம் பலவகையான எளிய மகாபாரத மறுஆக்கங்கள் வந்தபடியேதான் உள்ளன. மிக எளிய சமகால அரசியலையும் , சமகால அதிகாரப்போர் சார்ந்த வரலாற்றுநோக்கையும் மகாபாரத்த்தில் போட்டுப்பார்ப்பது சிலரால் செய்யப்படுகிறது
மகாபாரதம் மீது. சில்லறைத்தனமான வாதங்களைப்புகுத்துவது. கதாபாத்திரங்கள் மேல் எளிய தீர்ப்புகளைச் சொல்வது இதெல்லாம் பல நூல்களில் காணக்கிடைக்கிறது.அதாவது ஒரு மகத்தான ஆக்கத்தில் இருந்து சில்லறை ஆக்கங்களை உருவாக்கிக்கொள்கிறார்கள்.
இலக்கியத்தகுதி பெறும் மகாபாரத மறுஆக்கம் எப்படி இருக்கும்? என் நோக்கை பலமுறை எழுதியிருக்கிறேன்
1. மகாபாரதம் பல பிரபஞ்ச தரிசனங்களை முன்வைப்பது. அவற்றை ஒட்டிய தத்துவநோக்குகளை,வாழ்க்கைப் பார்வைகளை அவற்றுக்கிடையேயான மோதலை விவரிப்பது. அவற்றிலிருந்து எழும் அறச்சிக்கல்களை, அவை உருவாக்கும் உணர்வுக்கொந்தளிப்புகளை, அவ்வுணர்வுகளை தாங்கிநிற்கும் மனிதர்களை காட்டுவது.
அவற்றை முழுமையாக உள்வாங்கி இன்றைய வாழ்க்கையை கொண்டு மறுபசீலனை செய்யும் படைப்புகளே இலக்கியம்
2.மகாபாரதத்தின் அடிப்படையான கதைப்பின்னல்களையும் குணச்சித்திர வார்ப்புகளையும் அப்படியே வைத்துக்கொண்டு, வியாசனின் புனைவின் இடைவெளிகளை கற்பனையால் நிரப்புவதே இலக்கியம். வியாசன் சொன்னதை தலைகீழாக்கிச் சொல்வதில் அல்லது வசதிப்படி மாற்றி எழுதிக்கொள்வதில் கலையும் இல்லை சவாலும் இல்லை.
வியாசபாரதத்தின் அமைதி என்பது அனைத்துக்கதாபாத்திரங்களுக்கும் அது நியாயம் செய்கிறது, அத்தனை அறச்சிக்கல்களையும் முழுமையாகவே சமன்செய்து முன்வைக்கிறது என்பதுதான். அதைத் தவிர்த்துவிட்டு எழுதுவது கலையல்ல என நினைக்கிறேன்.
3. மகாபாரதத்தின் படிம அமைதியை முன்னெடுக்கும் படைப்பே இலக்கியம். பிரபஞ்ச உருவகத்தைச் சொல்லவும் உணர்வுகளைச் சொல்லவும் பாரதம் ஒரு பெரும் படிமவெளியை உருவாக்கி அளிக்கிறது. அதைக்கொண்டே அதன்மேல் பயணித்து முன்செல்வதும், அதிலிருந்தே தன் உலகை அமைத்துக்கொள்ளளவும் முனையும் கலைஞனே வியாசனுக்கு பிரியமானவன்
ஜெ