வெண்முரசில் புராணங்களின் கதைகள் மாறுதலுக்குள்ளாகியிருப்பதைப்பற்றி பலர் எழுதியிருந்தனர். பெரும்பாலானவர்களுக்கு இது மறு ஆக்கம் என்று புரிகிறது, சிலருக்குப் புரியவில்லை
புராணங்களை ‘தகவல்களாக’ தெரிந்துவைத்திருப்பதன் விளைவு இது. தொடர்ந்து புராணங்களை வாசிக்காமல் உதிரியாக- தற்செயல்களாக- அறியும் நம்மில் பெரும்பாலானவர்களிடம் இந்த மனநிலை உள்ளது
புராணங்கள் தகவல்கள் அல்ல. அவை படிமங்கள் , உருவகங்கள், ஆழ்படிமங்கள் [image,metaphor, archetype] தொடர்ந்து புராணங்களைக் கவனிப்பவர்களுக்கு இது தெரியும்.
கவிதையும் கதையும் நேரடியாகச் சொல்லப்படமுடியாத பிரம்மாண்டமான அல்லது நுட்பமான ஒன்றைச் சொல்வதற்காக புராணங்களைக் கையாள்கின்றன.
ஆகவேதான் எல்லா முதன்மையான புராணக்கதைகளுக்கும் பல்வேறு வடிவங்கள் உள்ளன. பெரும்பாலான மகாபாரதக் கதைகளுக்கும் பிற்காலப் புராணக்கதைளுக்கும் பெரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.கதகளியில் உள்ள அனைத்து மகாபாரதக்கதைகளும் சுதந்திரமாக மறு ஆக்கம் செய்யப்பட்டவை.
அதேபோல புராணங்களை காவியங்கள் கையாள்வதற்கும் நாட்டார்கலைகள் கையாள்வதற்கும் பெரும் வேறுபாடுண்டு. நாட்டார் கதைகளில் வரும் துரியோதனின் சித்திரமே வேறு
தாட்சாயணியின் கதையை பலர் சுட்டியிருதனர், பெரும்பாலும் ஏ.பி.நாகராஜனின் சினிமாவை மேற்கோள்காட்டி. நான் எழுதியிருந்தது மகாபாரதத்தில் உள்ள கதை. அதில் ஸதி வேள்விநெருப்பில்தான் மாய்கிறாள். சிவன் எரித்தான் என்பது வேறு புராணமாக இருக்கலாம். அல்லது ஏ.பி.நாகராஜனின் மறு ஆக்கமாக இருக்கலாம்
இந்தப்புராணம் இப்படியல்ல அப்படித்தானே என்று கேட்பது எதைப்போன்றது என்றால் அந்த ஹைக்கூவில் வண்ணத்துப்பூச்சி முள்மேல் அமர்ந்ததே இந்த ஹைக்கூவில் அது எப்படி கம்பளத்திலுள்ள பூவில் அமரமுடியும் என்று கேட்பதுபோல.
அல்லது சரஸ்வதி நாவில் வசிக்கிறாள் என்றால் அவள் எங்கே மலம் கழிப்பாள் என்று கேட்கும் தமிழ் அறிவுஜீவித்தனம் போல.
புராணங்களின் படிமங்கள் மூலம் எது சொல்லப்பட்டுள்ளது என்று பார்ப்பதே தேவையான வாசிப்பு. அதை ஒட்டி கற்பனைவிரிவுகொண்டு அந்த தரிசனத்தை அடைந்தால் அதன் நோக்கம் நிறைவேறுகிறது. அதாவது ஒரு கவிதையைப் பொருள்கொள்ளுதலுக்கு நிகர் அது
புராணங்களின் படிமங்களின் காவியவிரிவாக்கம் என்றும் நிகழ்ந்துகொண்டிருப்பது. சமகாலத்தின் மிகச்சிறந்த உதாரணம் அரவிந்தரின் சாவித்ரி. மூலக்கதையில் சாவித்ரி இப்படிச் சொல்லவில்லையே என்று நினைப்பவர் அக்காவியத்தை அறியமுடியாது