உலகில் மகிழ்வைக் கூட்டிக்கொள்ள ஒவ்வொருவரும் முயல்கின்றனர். எவ்வளவு கிடைத்து எவ்வளவு மகிழ்வாக இருந்தாலும் அதிகமாக மகிழ்ச்சியடைய இன்னும் வேண்டும் என தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த ஓட்டத்தில் மக்கள் உண்மையில் தம் நோக்கமான மகிழ்ச்சியைத் தவற விட்டுவிடுகிறார்கள். ஒட்டப்பந்தயத்தில் ஓடுபவன் ஒரு கட்டத்தில் நின்று பரிசை வாங்கி அதை அனுபவிக்க வேண்டும் என்பதை மறந்து விடுகின்றனர். ஒரு ஓட்டப் பந்தயம் முடியும் தருவாயிலேயே மற்றொரு ஓட்டப்பந்தயத்துக்காக ஒட ஆரம்பிக்கின்றனர். ஓடி ஓடிச் சென்றுகொண்டே இருந்து பின்னர் முடிவில் களைத்து நின்று திரும்பிப் பார்க்கையில், தான் வென்ற ஓட்டப்பந்தயங்களின் பரிசை பெற்றுக்கொள்ளவேயில்லை என்பதை உணர்கிறார்கள்.
உணவு உடை இருப்பிடம் என்பது அடிப்படைத் தேவைகள். ஒருவனுக்கு இது கிடைக்கும்போது அடைவதே உண்மையான மகிழ்ச்சி. ஆனால் இன்று உண்கையில் உடுக்கையில் அல்லது இரவு தங்கி தூங்க ஒரு இடம் இருப்பதை அனுபவித்து மகிழ்கிறோமா? உணவை மகிழ்ந்து அனுபவிக்க பலவிதமான ருசிகளை அதில் தேடுகிறார்கள். ஆனால் ஒரு உணவை ருசிக்க வைக்க முக்கியமாக தேவைப்படும் ஒன்றை அலட்சியப்படுத்தி மறந்துவிடுகின்றனர். அப்படி ஒரு உணவை ருசிக்க வைப்பதில அடிப்படைக் காரணமாக அமைவது பசியாகும். நமக்கு பசியை எது குறைத்துவிடுகிறது? பசியைத் தூண்டும் உடலுழைப்பை நாம் மட்டமானதாக கருதும் நாகரீகத்தைக்கொண்டிருக்கிறோம். உடலுழைப்பு இல்லாதவன் உண்மையான பசியை அடையமுடியாது. உண்மையான பசி இல்லாதவனுக்கு எந்த உணவும் முழுமையான உணவின்பத்தை அளிக்க முடியாது. உழைப்பற்ற உடற்பயிற்சி உடலுக்கு ஒருவேளை பசியைக் கொடுக்கலாம். ஆனால் மனம் வரை உணவுக்கான பசி சென்று அடைவது எதோ ஒரு வேலையை உடல் களைப்பாகும்வரை செய்து நிறைகையில் மட்டுமே. நம் வீட்டு வேலையாக இருக்கலாம், அல்லது ஒரு பொது நலனுக்கான உடலுழைப்பாக இருக்கலாம். அதன் காரணமாக எடுக்கும் பசியில் ஒரு பெருமிதம் இருக்கும். அப்போது அந்த உணவை உண்பதற்கான தகுதியை நாம் அடைந்திருப்பதாக நம் ஆழ்மனம் உணரும். கடைசியாக ஒரு உடலுழைப்பில் பசியுற்று உண்டபோது அடைந்த அந்த நிறைவை, அனுபவத்தை,உணவின் ருசியை நினைத்துப்பார்த்து இதை நாம் உணர்ந்துகொள்ளலாம். பாண்டவர்களும் திரௌபதியும் அரச வாழ்வு வாழ்ந்தவர்கள். அவர்கள் உடல் நோக உழைத்தது எப்போதாவது அரிதினும் அரிதாக நிகழ்ந்திருக்கும். அரச வாழ்வில் இருந்தபோது, உணவு உருவாகி வருகையில் ஏற்படும் மணத்தை, இனிய ஓசைகளை, எல்லாம் அவர்கள் அறிந்தே இருக்கமாட்டார்கள். அவர்கள் இதுவரை அடைய இயலாத முழுமையான உணவின்பத்தை, இப்படி காடு மலை ஏறியிறங்கி அலைகையில், அடுத்த வேலைக்கான உணவை தேடி சமைத்து கூடி உண்கையில் அடைந்திருப்பார்கள் என எண்ணுகிறேன். வெண்முரசு அவர்கள் அடையும் உணவின்பத்தை வார்த்தைகளால் குறைவாக சொன்னாலும் காட்சிப்படுத்தலில் நமக்கு உணர்த்திச்செல்கிறது. அவர்கள் நாவறண்டு கொண்டிருந்த கடுந்தாகத்தை தீர்ந்த்துக்கொள்வதில் யானைகளுடன் நம் தாகமும் தீர்கிறது. அடுப்பு மூட்டி உலையிலிட்டு அன்னம் சமைத்து உண்கையில் குரங்குகளோடு நாமும் அந்த விருந்தில் கலந்துகொள்ளும் நிறைவு ஏற்படுகிறது. அரண்மனையில் அறுவரும் ஒன்றமர்ந்து உணவருந்தியிருப்பது எப்போதாவதுதான் நிகழ்ந்திருக்கும். திரௌபதி கையால் சமைத்த உணவை தன் கடும் பசி போக உணவுண்டு நிறைவதை அவர்கள் அனுபவித்திருக்கவே மாட்டார்கள். அவர்கள் வனவாழ்வில் உணவுண்பது பலமுறை காண்கிறோம் என்றபோதிலும் ஒவ்வொரு முறையும் நமக்கு அந்த அனுபவம் பெரும் விருந்தாக அமைகிறது. திரௌபதியுடன் நாமும் சேர்ந்து சமைப்பதாக, அவர்கள் அனைவருடன் நாமும் சேர்ந்து உண்பதாக உணர்கிறோம். அனைவரும் உண்டு எஞ்சிய உணவுப் பதார்த்தங்களை, எலும்புத் துண்டுகளை பீமன் வாயிலிட்டு மென்று தின்பதைக் காண்கையில் அவன் மேலும் மேலும் நமக்கு நெருங்கியவனாக ஆவதை அறிகிறோம். அவர்கள் அரண்மனையில் இருந்தகாலத்தைவிட இந்த வனவாழ்வில் நமக்கு மிக நெருங்கியவர்களாக ஆகிவிடுகின்றனர்.
எளிய வாழ்வில் பெரும்பாலும் நாம் கூடி வாழ்கிறோம். விவசாயம், நெசவு, மீன்பிடித்தல், மற்றும் பல கைத்தொழில்கள் அனைத்தும் குடும்பமாக கூடிச் செய்யும் தொழில்களாகும். இவற்றில் பிள்ளைகளும் பெற்றோரும் பிரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை, சகோதரர்கள் சேர்ந்திருப்பது கெட்டுவிடுவதில்லை. மற்ற தொழில்களில் பல கணவன் மனைவியைக்கூட இவை கடல் தாண்டி பிரித்துவைக்கின்றன. பாண்டவர் ஒரே அரண்மனையில் இருந்தபோதுகூட எப்போதாவதுதான் சந்தித்துக்கொண்டிருப்பர், அரசு அலுவல்கள் போன்ற காரணங்கள் அவர்களைப் பிரித்துப்போட்டிருக்கும், மேலும் அரசு சம்பிரதாயங்கள், அப்போது உரைக்கவேண்டிய முறைமை மொழிகள், செயல்கள், போன்றவை அவர்களை இந்த அளவுக்கு நெருங்கவிட்டிருக்காது. தருமன் சற்று தடுமாறினால் தாங்கிப்பிடிக்க நான்கு பேரின் கைகள் விரைவதை அங்கு கண்டிருக்க முடியுமா? திரௌபதியின் கால்களில் முட்கள் குத்தி வேதனையடைந்திருந்தாலும் அவற்றை கவனமாக பீமன் நீக்கிவிடுவதில் இருக்கும் பாசத்தை அவள் அனுபவித்திருக்க முடியுமா?
நகரவாழ்வில் மனிதர்கள் தொட்டுக்கொள்வது மிகவும் இல்லாமலாகிவிட்டது. கணவன் மனைவிக்கிடையே கூட காமத்திற்கு அல்லாமல் மற்றபடி தொட்டுக்கொள்வது அரிதாகிவிட்டிருக்கிறது. கிராம வாழ்வில் மனிதர்கள் தொட்டுக்கொள்வதற்கான வாய்ப்புக்களைத் தேடிக் கண்டடைந்து அனுபவிப்பார்கள். இல்லாத பேன்களை மணிக்கணக்கில் ஒருவர் தலையில் ஒருவர் தேடிப்பார்த்துக்கொண்டிருப்பார்கள். நீச்சல்களில், கட்டிப்பிடித்து மண்ணில் உருண்டு ஈடுபடும் பொய்யான சண்டைகளில் ஒருவர் உடலை ஒருவர் தழுவிகொள்வார்கள். ஆடும் விளையாட்டுக்களில் தேடிப்பிடித்தல் என்ற ஒன்று எப்போதும் இருக்கும். எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டிவிடுவது என்பது பிள்ளைகளைத் தொடும் இன்பத்தை அதிகரிக்கச் செய்யும். பீமன் திரௌபதியின் தலைக்கு குளிப்பாட்டும் நிகழ்வு அவர்களின் அரச வாழ்வில் நிகழ்ந்திருக்குமா? அப்படி நிகழ்ந்திருந்தாலும் அது ஒரு காம விளையாட்டக இருந்திருக்கும். இப்படி ஒரு மன நெருக்கத்தை அது ஏற்படுத்தியிருக்க முடியாது. செல்வம் கொழிக்கும் வாழ்வில் நேரமின்மை காரணமாக அல்லது மற்ற பகட்டான இன்பங்களில் மனம் ஈர்க்கப்பட்டு அதிலேயே மூழ்கிவிடுவதால், இத்தகைய எளிய ஆனால் இனிய இன்பங்களை நாம் இழந்துவிடுகிறோம் என்றே தோன்றுகிறது. பாண்டவர்கள் இப்படி அனுபவிக்கும் இன்பங்களைக் காண்கையில வனவாழ்வில் அவர்கள் இழந்ததைவிட அடைந்த இன்பங்கள் அதிகம் என்றுதான் தோன்றுகிறது

தண்டபாணி துரைவேல்