பறதி Angst : இருத்தலியல் சார்ந்து ஒருவரில் உருவாகும் நிலைகொள்ளாமை பதற்றம் அல்லது தடுமாற்றம் (கலைச்சொற்கள்)
ஒரு வகையில் அது அச்சம் தான். அச்சம்
பலவகைப்படுகிறது. உயிர்மேலான அச்சம், எதிர்காலம் குறித்த அச்சம், சமூகம்
பற்றிய அச்சம் என்று இவற்றை பலவகையில் குறிப்பிட்டு வருகிறோம்.
தத்துவார்த்தமாகச் சுருக்கினால் அச்சம் மூன்றுதான். 1. மரணத்திற்கான அச்சம்
2. தன்னிலை அழிவு குறித்த அச்சம் 3. காலத்தின் தற்செயல் தன்மை அல்லது
ஊகிக்க முடியாமை குறித்த அச்சம். [மேலைநாட்டு இருத்தலியல் சிந்தனைகளில் இது
Angst என்று சொல்லபப்டுகிறது. இருத்தலியலின்படி தீர்வே இல்லாத ஆழ்ந்த
மனத்தத்தளிப்பு இது. தமிழில் பறதி என்ற கலைச்சொல்லால் இது சுடப்படுகிறது] (செயலென்னும் யோகம் சாங்கிய யோகம் 4)
இங்கே காளகன் கொள்வது தன்னிலை அழிவு குறித்த அச்சம் - பறதி.
இங்கே குதிரைகள் கிரிசிருங்கத்தை தாங்கள் இருந்து, அனுபவித்து, அறிந்து
நிறைக்கும் ஒரு நிலமாக அறியவில்லை. அந்த நிலத்தின் தன்மைகள் அவற்றுக்குப்
புதிதானவை. எனவே அவற்றால் இயல்பாக இருக்க இயலவில்லை. எப்போதுமான ஒரு
அச்சம். அவற்றில் அச்சம் முற்றிய ஒருவனே காளகன். அதன் அச்சங்களை உணர்ந்து,
அதிலிருந்து வெளிவரும் வழியை அறிந்து, அதை அதற்கு அறிவித்தவன் நளன். அதை 'புரவியாக இருப்பதன் இன்பத்தை காளகன் உணர்ந்தது' என வெண்முரசு குறிப்பிடுகிறது. இருத்தலியல் சிக்கல்கள் எல்லாம் மானுடருக்கு மட்டுமேயான ஒன்றா என்ன?
அன்புடன், அருணாச்சலம் மகராஜன்
