Tuesday, May 30, 2017

நீர் கொள்ளும் கோலங்கள் (நீர்க்கோலம் -1)




பெரும் நீர் பரப்பில் நாம் காண்பதாக அறிவது அது கொண்டிருக்கும் கோலங்களை மட்டுமல்லவா? பாய்தல் என்றும் நிலை நிற்றல் என்றும் நீர் வீழ்ச்சியென்றும், சுழல்கள் என்றும் பல்வேறு தோற்றங்களை அது தன் மேல் பூண்டுகொள்கிறது. காற்று அதன் மேல் அலைகளை ஏற்படுத்தி விதவிதமான அலங்காரங்களை இடுகிறது. ஞாயிறு, நிலவு விண்மீன்கள் போன்றவற்றால் பல்வேறு விதங்களில் ஒளிகொண்ட வான், நீர் பரப்பின் மீது தன் பங்கிற்கு வண்ணமும் வெளிச்சமும் தந்து அணிகலன்களைச் சூடுகிறது. இப்படியான இந்தக் கோலங்களைத் தாண்டி அந்த நீர்வெளியை யாராவது பார்த்திருக்கிறார்களா? இந்த அனைத்து கோலங்களும் இல்லாமல் காண்பதற்கு அதற்கு உருவென்று எதுவும் இருக்கிறதா?

நாம் பிறரைக் காண்பதாக அறிவது அவர் உடலையும் அந்த உடல் மீது அவர் பூண்டிருக்கும் ஆடை, அணிகலன்களால் ஆன உருவைத்தானே? அவர் உடலே அவர் உயிர் கொண்டிருக்கும் ஒரு கோலம்தானே? அவர் உடலைக்கொண்டு நாம் அறிவதை அவரின் உண்மை உருவெனக் கொள்ள முடியுமா? அப்படியாயின் அவரின் உயிரின் உண்மை உருவென்ன?

ஒருவனை சிந்தை, அறிவு, மனம், ஆளுமை என நாம் அறிவதெல்லாம அவர் நான் என அறியும் அவர் ஆன்மா பூண்டிருக்கும் கோலங்கள் அல்லவா? கணத்திற்கு கணம் மாறிக்கொண்டிருக்கும் அவற்றை வைத்து அந்த ஆன்மாவை நாம் அறிந்துகொள்ள முடியுமா? அவற்றையெல்லாம தாண்டி அந்த ஆன்மாவின் உரு என்னவென எவராவது அறிந்திருக்கிறார்களா? ஏன் தன்னுடைய ஆன்மாவையே அதன்மேல் ஓயாது அலைகளென ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களை தாண்டி அறிந்தவர் உண்டா? இந்தக் கோலங்களையெல்லாம் விலக்கிக் காணும் அந்த ஆன்மாவின் உரு எப்படி இருக்கும்? அல்லது அதற்கு உருவென்பதே இல்லாத ஒன்றா? தன் கோலங்களை எல்லாம் களைந்து நிற்கும் அந்த ஆன்மாவின் உரு அந்த எவருமறியாது எங்கும் நிறைந்திருக்கும் பேரான்மாவை ஒத்திருக்குமா.? அந்த பேரான்மாவிலிருந்து சிதறிய துமிகளா நம் ஆன்மாக்கள்? அல்லது சிற்றகல்களில் தேங்கி நிற்கும் மழைநீரில் காணும் ஞாயிறின் உருக்களைப்போல் உடல்களில் தேங்கியிருக்கும் உயிர்களில் பிரதிபலிக்கும் பேரான்மாவின் உருக்களா அவை?

ஒருவன் தான் பூண்டிருக்கும் கோலங்களை களைந்து வேறு கோலங்களை மாற்றியபடி இருகிறான். தானே போட்டுக்கொண்டவை, மற்றவர் போட்டு விட்டவை என பல்வேறு கோலங்கள். ஒருவர் கொண்டிருக்கும் கோலம் மெல்ல மெல்ல மாற்றப்படுவதால் நாம் அந்த மாற்றங்களை உணராதிருக்கிறோம். அதனால் ஒருவரை இப்படித்தான் என அவரின் ஒரு கோலத்தை நினைத்துக்கொள்கிறோம். ஏதோ நேரத்தில் அவர் சட்டேன்று தன் ஆளுமையில் கொள்ளும் வேறு கோலத்தை நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது திகைத்து நிற்கிறோம். எவரொருவரின் ஆளுமையும் அவர் தற்காலிகமாகக் கொண்டிருக்கும் ஒரு கோலம்தான் என அறிபவனே முழுதறிந்த ஞானி என்றாகிறான். அவன் மனிதர்களை, அவர்கள் கொண்டிருக்கும் ஆளுமைகளை, ஆன்மா என்ற நீர்ப் பரப்பின் மீது காணப்படும் கோலங்களாகக் கொள்கிறான். அந்த ஞானப் பார்வையின் காரணமாக, ஒரு ஞானி, உலகில் மனிதர்கள் மகிழ்ந்தும் துன்புற்றும், ஊக்கங்கொண்டும், சலிப்புற்றும், விரும்பியும், வெறுத்தும் அனுபவிக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் நீரின் மீது காணும் கோலங்களைப்போல நிலையற்றதாகவும், பொருளற்றதாகவும், பொருட்படுத்தவேண்டா மதிப்பற்றதாகவும் அறிகிறான். இதை அறிபவன் மட்டுமே உலகவாழ்வின் பிடிகளில் இருந்து விடுபட்டவனாகிறான். அவன் மட்டுமே ஞான வெளியில் பறந்து அந்த பேரான்மாவை அடைய முடியும் என்று தோன்றுகிறது.

வெண்முரசு போன்ற பெருங்காவியம் பல்வேறு மனிதர்கள் கால ஓட்டத்தில், பல்வேறு கோலங்களை பூண்டு, களைந்து, வேறு கோலம் பூண்டு அந்தக் கோலங்களுக்கேற்ப சிந்தித்து, செயல்புரிந்து, சரி தவறு எதுவென அறியாது குழம்பி, குண மாறுபாடுகளை அடைந்து, பலப்பல தவறுகளை அறிந்தும் அறியாமலும் செய்து, இன்பதுன்பங்களை அடைந்து வாழ்வதை நம் கண் முன்னே நிகழ்த்துகிறது. பலபிறவிகள் பெற்றும் அடைய முடியாத வாழ்வு அனுபவங்களை நாம் இக்காப்பியத்தைப் படிக்கையில் அடைகிறோம். வெண்முரசில் அடுத்த நிகழ்வென அமையும் நீர்க்கோலம் இன்னும் நமக்கு அனுபவங்களை அள்ளி வழங்கி நம் அகத்தை விசாலமாக்கும் என்பது உறுதி.

தண்டபாணி துரைவேல்