Tuesday, May 9, 2017

மயக்கும் மணம்

 
 
மதிப்பிற்குரிய ஜெ..

மாமலர் முடிந்து விட்டது... மாமலரில் தான் நான் வெண்முரசுக்குள் நுழைந்தேன்... அப்படியே வெண்முரசு தளத்தில், முதற்கனல் முடித்தேன்.. மாமலர் இத்தனை மனதை மயக்கும் மணம் பொருந்தியது என்று ஆரம்பித்த பொழுது தெரியவில்லை.. நார்னியா திரைப்படம் தான் நினைவுக்கு வருகிறது.. ஒரு வீட்டின் பீரோவுக்குள் ஒளிந்து விளையாட நுழையும் குழந்தைகள், மறுபக்கம் உள்ள கதவின் வழி பனி சூழ் உலகத்துள் நுழைந்து, புதிய புதிய அனுபவங்களைப் பெறுவார்கள்.. பிறகு அக்கதவின் வழி திரும்ப அறைக்குள் வந்து விழுவார்கள்.. தினசரி காலை இணையத்தின் வழி வனத்துள் நுழைந்து திரிந்து, மலரின் மணம் நுகர்ந்து, முண்டனைப் பார்த்து அதிசயித்து, அடுமனையின் அமைப்பை கவனித்து வெளியே வந்து விழுந்து கொண்டிருந்தேன்.. மொபைலில் படித்தாலும், அதே உணர்வு தான்..

இன்னும் ஆச்சரியமாய் இருக்கிறது.. தேவயானியின் பாத்திரப் படைப்பு... எத்தனை நுணுக்கமாய், பெண்மையின் எல்லாக் கூறுகளையும் தேற்றி தேற்றி,உருக்கொடுத்திருக்கிறீர்கள்... அவள் வேங்கைகளுடன் உலவியதில் இருந்து, பேரரசியாய் முடிவெடுத்தது,சர்மிஷ்டையை பலவருடம் கழித்துப் பார்த்தும் அவளின்சிறு அசைவில் நடந்திருக்கக்கூடும் என்று சம்பவங்களை உணர்வது என்று இத்தனை ஆளுமை மிக்க, நுண் உணர்வு கொண்ட பெண்ணை உயிரோடு உலவ வீட்டீர்கள்...

அவள் அணிகலன் களை சேடி கையாளத் தெரியாமல் வலி ஏற்படுத்திய போது சீறினாள் என்று எழுதியிருந்தீர்களே,, அந்த ஒரு வார்த்தை போதும்... ஆகா..

ஒரு வேளை உங்களை என்றாவது பார்த்தால், சட்டென்று ஓடி வந்து பாதம் பணிவேன்.. 

வணக்கங்கள்...

பவித்ரா..