Sunday, May 14, 2017

கிளாஸிஸம்






ஜெ

மாமலரில் சில பகுதிகளை நான் மிகமிகக்கூர்மையாக வாசித்து ரசித்தேன். அதையெல்லாம் விரிவாக எழுதலாம். ஆனால் அதிலே முக்கியமானது யயாதிக்கு சர்மிஷ்டையில் உருவாகும் அன்புதான். அவள் அழகில்லை என்ற எண்ணமே முதலில் அவனிடம் எழுகிறது. எப்போதும் அந்த எண்ணம் தான் மேலோங்கி இருக்கிறது. அதை எப்படியெல்லாம் படிப்படியாகக் கடந்து அவளை அவன் கண்கள் அழகியாகக் காண ஆரம்பிக்கின்றன என்ற அந்த பரிணாமவளர்ச்சி நுணுக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது.

உண்மையில் இன்றைய தமிழ் வாழ்க்கையில் ஒவ்வொரு ஆணும் இந்த அனுபவத்தை அடைந்திருப்பான். இங்கே அழகிகள் ரொம்பவும் குறைவு. அவர்கள்மேல் நாம் கொள்ளும் அன்பினால்தான் அவர்கள் அழகிகள். அந்த அன்பு நமக்கு இவள்தான் பொருத்தமானவள் என்பதில் தொடங்கி அவள் அளிக்கும் அன்பு பணிவிடை இதனால் படிப்படியாக உருவாகிறது

இதில் நான் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். இந்தமாதிரி விஷயங்க்ளை தீவிரமாகவோ டிரமாட்டிக் ஆகவோ வெண்முரசு சொல்வதில்லை. மிகச்சரியாகச் சொல்வதில்தான் அது கவனம் எடுத்துக்கொள்கிறது. ஆகவே திடுக்கிடுவதோ வியப்பதோ நிகழ்வதில்லை. அதையெல்லாம் நாமே முன்னாடி அறிந்திருக்கும் நினைப்புதான் வருகிறது. ஆனால் முன்னாடி நாம் உணர்ந்திருக்கிறோமே ஒழிய அறிந்திருப்பதில்லை என யோசித்தால் தெரியும். நாம் வாசித்ததுமே அடடா உண்மை என்றுதான் நினைக்கிறோம். அதுதான் கிளாஸிஸம் என நினைக்கிறேன்

மதுசூதன் ஸ்ரீனிவாஸ்