Wednesday, May 17, 2017

.நீர் கோலம்






அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

நீர்க்கோலம் பற்றி தாங்கள் அறிவித்தது மகிழ்வும் புன்னகையுமாக இப்பொழுதை மாற்றிவிட்டது.  எதிர்பார்த்த ஒன்று அறிவிக்கப்பட்டது மகிழ்வு.  வெண்முரசின் ஒவ்வொரு நாவலை எழுதும் முன்னும் ஒரு திருத்தலம் சென்று குழவியென ..வேண்டாம்.... குழந்தை என  கைகள் நீட்டி 'தூக்கு என்னை' என்று கோரி அருட்கரங்களினால் தூக்கப்பெற்று அது கொண்டு செல்லும் தொலைவு வரை சென்று பின்னர் இறக்கி விட்டபின் மற்றொரு திருத்தலம் நாடலும் ........இதில் அத்வைதி என்று சொல்கிறீர்.  ஆனாலும் அத்வைதியான ரமணர் கோவிலில் அருணாசலர் - உண்ணாமுலை அம்மையின் திருமண விழாவன்று "இன்னிக்கி அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம்" என்று நெகிழ்தலும்.  சிவபிரானை நினைந்தோறும் உருகிக் கண்ணீர் பெருக்கலும் படித்து அறிந்துள்ளேன்.

 அத்வைதி பக்தன் தான் எனவும் பக்தனும் அத்வைதியே எனவும் திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆதலின் வியத்தல் இலம்.  அத்வைதி சௌந்தரிய லஹரி - சிவானந்த லஹரி பாடலாம் - பஜகோவிந்தம் உருகலாம்.  அத்வைதம் ஒன்றும் வறட்டு தத்துவம் இல்லையே.  என்றாலும் ஆன்மீகம் மாய மந்திரம் அல்ல என்கிறீர் ....ஆனால் நீங்கள் ஆன்மிகம் எழுத்து என்று அமைத்துக் கொண்டு எழுத்தை மாய மந்திரம் போல் செய்கிறீர் என்று தோன்றுகிறது.  

வெண்முரசு படிப்பதே ஒரு மாய உலகில் புகுந்து பயணிப்பது போல் - நுண் சொற்களால் கட்டி எழுப்பப்பட்ட மாளிகைக்குள் செல்வது போல் அல்லது நுண் சொற்கள்  மரங்கள்  செடி-கொடிகளாக வளர்ந்த அடர்ந்த காட்டிற்குள் செல்வது போல் உள்ளது.  மாயனின் குழல் போல் வேலை செய்து கொண்டு - மந்திரவாதி போல் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறீர்.  சொற்கள்  சொற்கள் ......நீர் கோலம் இடும் ..வரைவதும் கலைவதும் புதியதும் காண ஆவலாய் இருக்கிறேன்.  ஒவ்வொரு கடிதம் எழுதி அனுப்பிய பின்னரும் சிறந்த பேட்ஸ்மேன் ஒருவருக்கு தொடர்ந்து நோபால் போடும் உணர்வு ஏற்படுகிறது.  பாரி தங்கள் கோவை காஸ்மோபாலிடன் கிளப் சந்திப்பு வருவது பற்றி மெயில் அனுப்பினார் தாமதமாக மெயில் பார்த்ததால் தவறவிட்டேன்.  

அன்புடன்,
விக்ரம்,
கோவை