ஒரு பெண்ணில் கன்னிபெருந்தெய்வம் எழுந்து குடிகொண்டு ஆணென எதிர் நிற்பவனின் அகங்காரத்தைத் தாக்குகிறது. அந்தத் தெய்வம் அப் பெண்ணுடலின் அங்கங்களை, பாவனைகளை, நளினங்களை போர்க்கருவிகளாகக்கொண்டு ஆணை எப்படியெல்லாம் தாக்குகிறது என்பதை அந்தப் பெண்ணே அறிந்திருக்கிறாளா என்பது தெரியவில்லை. ஆதிப்பேரன்னை, அவள் நாயகனை வீழ்த்தி காலில் பணிய வைக்க பெண்ணென உருவம் கொண்டு நிகழ்த்தும் பெரும்போர் என்றும் நடந்துகொண்டேயிருக்கிறது.
சுருண்டு அல்லது நீண்டு பரந்து பெருகி தவழும் பெண்ணின் கூந்தல் ஒரு ஆணை ஒரு காற்றுச் சுழல் எனத் தாக்கி கலங்க வைக்கும் ஆயுதம். அவள் முகத்தில் தனித்து வந்து ஆடும் சிறு முடிக்கற்றைகளை அவள் விலக்குவது அவன்மேல் வாள் வீச்சுகள் என விழுபவை. புருவங்களை வில்லெனக்கொண்டு அங்கிருந்து பாய்ந்து அம்புகளென வருகின்றன அவள் பார்வைகள். எத்தனை விதமாக அவை எய்யப்படுகின்றன! ஓர விழிப்பார்வை கவிழ்ந்த தலைநிமிராமல் எய்யப்பட்ட பார்வை, தூரத்தில் இருந்து, தனித்து அவன்மேல் மட்டும் குறிபார்த்து வீசப்படும் பார்வை, குறுஞ்சிரிப்பெனும், ஆவலெனும், நாணமெனும், குறும்பெனும், நகைப்பெனும், அஞ்சலெனும், பழிப்பெனும், பொய்ச்சினமெனும், சீண்டலெனும் நஞ்சுகள் தோய்ந்த பலவித பார்வையம்புகளால் அவன் தாக்கப்படுகிறான். அவள் நிமிர்ந்தெழும் மூக்கில், வளைந்திறங்கும் காதுகளில், முனைந்தமைந்த முகவாய் வடிவுகளில் தேங்கியிருக்கும் அழகுகள் அவனைத் தாக்கும் சாட்டைகள். பேசுகையில், சிரிக்கையில், சிணுங்குகையில் அவள் கன்னங்கள், குழிவுகள், குழைவுகள், வளைவுகள் என பலவித வடிவுகள் கொண்டு அவனை ஈட்டிகளெனத் தாக்குகின்றன. அவள் இதழ்கள் குவிந்து விரிந்து உள்ளுறையும் முத்துக்களை ஒளித்து, சற்று வெளிக்காட்டி அவன் சிந்தைய மயங்க வைக்கும் மாய அஸ்திரங்கள். கிணுகிணுத்து ஒலிக்கும் சிரிப்பு, இனிய நாதமென எழும் அவள் குரலொலிகள் அவனைக் கொல்ல எறியப்படும் குறுவாள்கள். அவள் மெலிந்திறங்கும் கழுத்து அவனை எதிர்த்து முழங்கும் வெண் சங்கு. தன் மேல் மென்மையைப் பூத்து அமைந்த தோள்கள், நீன்டிருக்கும் கைகள், ஒளிஊடுருவும் மெலிந்த நீள் விரல்கள் அனைத்தும் பலவிதமான வாள்கள் என சுழன்று அவனைத் தாக்குகின்றன. அவளின் மார்பகங்கள் நேர்கொண்டு வருகையில் மதம்கொண்ட யானையின் மத்தகம் எனஆகியும் ஒரு பக்கமாக அவள் திரும்பி இருக்கையில் அந்த யானையின் தந்தங்கள் என ஆகியும் அவனைத் தாக்க வருகின்றன. தன் திண்மையால் ஆடையை நிறைத்து, தளும்பல்களில் வெளிப்பட்டு, அசைவினில் உணர்த்தி எழும் அவை அவனை பெருங் கதை ஆயுதங்களெனவும் தாக்குகின்றன. சிறுத்தும், பெருத்தும், வளைவுகொண்டும், இறுகித் திண்மைகொண்டும், குழைந்து மென்மைகொண்டும் இருக்கும் அவள் அங்கங்கள் ஒவ்வொன்றும் அவனைத் தாக்கும் பல்திறன் கொண்ட பொறிகளென ஆகின்றன. அவள் திரும்பி நடக்கையிலும், அவள் நடையில் அவள் உடல் அசைந்தும் அதிர்ந்தும் பிணைந்தும் பிரிந்தும் ஊசலாடி நிகழ்த்தும் காவியம் அவன் மன ஒருமையை பிளக்கும் கோடரியாகிறது. அவள் ஆடைகள் அவள் உடலுடன் இணைந்து உடலுடன் ஒட்டியும், விலகியும், ஒளித்தும், ஒளித்ததை உணர்த்தியும், யூகங்களை கிளர்த்தியும், ஆடும் ஆட்டம் அவனை நிலையழிக்க வைக்கும் மாய அஸ்திரங்களாக அமைகிறன. அவள் பாதங்களின் வடிவழகு, வெண்மை, பவழம் சூடிய விரல்க்ளின்நேர்த்தி குத்தீட்டிகள் என அவனை குத்த வருகின்றன. கையிலெடுத்தால் விரலிடுக்கில் வழிந்துவிடுமோ, காற்றிலே கரைந்துவிடுமோ என எண்ண வைக்கும், அவள் உடல் முழுதும் மலர்ந்திருக்கும் மென்மை, அவனை நச்சுப்புகையில் ஆழ்த்தும் ஒரு அஸ்த்திரம்.
ஆணென தன்னை உணரும் எவர் ஒருவரையும் அந்தத் தெய்வம் ஏதோ ஒரு பெண்ணின் மீதமைந்து அவளிடமிருந்து எடுத்த ஏதோ ஒரு ஆயுதத்தால் தாக்காமல் விடுவதில்லை. அதன் தாக்குதலை சமாளித்து திடத்துடன் வீழ்ந்துவிடாமல் இருப்பவனே பேராண்மை கொண்டவனென ஆகிறான். அந்தத் தெய்வத்தின் தாக்குதலில் வீழ்ந்தவர்கள் பலர். செல்வம், புகழ், போன்றவற்றை இழந்து நின்ற பலரை வரலாறு கண்டவண்ணம் இருக்கிறது. பேரரசர்கள், பெரும்பதவியில் இருந்தவர்கள் பெரும் துறவிகள் பலரை கீழே வீழ்த்தும் ஆற்றல் கொண்ட தெய்வம் அது. தான் உடல் என்ற ஜடப் பொருளல்ல, அதனால் தான் ஆணல்ல என முற்றுணர்ந்த ஒருவனை மட்டுமே அந்தத் தெய்வம் தொடாமல் விடுகிறது. மற்றபடி ஆண் எந்த வயதினனாக இருந்தாலும், எவ்வளவு அறிவு பெற்றவனாக இருந்தாலும், பெண்ணில் குடி கொண்டிருக்கும் அந்த தெய்வத்தினால் ஏதாவது ஒரு ஆயுதத்தால் தாக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருந்தவண்ணம் இருக்கின்றன.
யயாதி தன் இளமை முடியும் தருவாயில் அந்தத் தெய்வத்தின் தாக்குதலில் வீழ்கிறான். அவன் காணாத அழகிகள் இல்லை. தேவயானி என்ற பேரழகியின் கணவன். ஆனால் சர்மிஷ்டையில் எழும் அந்தத்தெய்வம் தன் படைக்கலனை யயாதியின் மேல் செலுத்துகிறது அது முதலில் பயன்படுத்தும் ஆயுதம் அவள் விழிகள்.
அவள் தாழ்ந்த குரலில் ஏதோ சொல்ல இளையவள் விழிதூக்கி நோக்கினாள். யயாதி தன் நெஞ்சு படபடக்கத் தொடங்கிய பின்னரே அது அவள் விழிகளை நோக்கியமையால் என உணர்ந்தான்.
பின்னர் சர்மிஷ்டையின் விழிமூடிய இமைகள் பின்னர் அவளின் உதடுகள், தோள்கள் என ஒவ்வொரு கணையாகமாறி அவனைத் தாக்குகின்றன.
அவள் கண்களை மூடி கைகூப்பி நின்றிருந்தாள். அப்போது அது கோட்டைமுகப்பில் கண்ட முகமாக மாறிவிட்டிருந்தது. பெரிய விழிகளை மூடிய இமைகள் தாமரையின் புல்லிகள்போல தெரிந்தன. சிறிய உதடுகள் மெல்ல அசைந்தன. குவிந்த மேலுதடு. மெலிந்த தோள்கள்.
அப்புறம் அவள் உடலின் பாவனை. இரு கரம் தூக்கி, குழல் திருத்தி மலரிடுதல் என்பது பெண்களின் பாவனைகளில் மிக அழகானது. அது மேலும் கூறிய அம்பென அவனைத் தாக்கி நிலையழிக்கிறது.
சுடர்வணங்கி பூசகன் அளித்த மலரைப் பெற்றுக்கொண்டு யயாதி திரும்பி நோக்கியபோது சர்மிஷ்டை அந்த மலரை தன் குழல்சுருளில் சூடிக்கொண்டு நடந்தாள். அவள் கழுத்தைத் திருப்பி கைகளைச் சுழற்றி மலரைச் சூடிய அசைவு யயாதியை மீண்டும் உளம்பதறச் செய்தது. அவர்கள் சென்றுமறைவது வரை நோக்கிநின்றான்.
அந்த ஆயுதங்கள் யயாதி அணிந்திருந்த பேரரசன், நூல்கள் பல கற்ற அறிஞன், இளமையின் இறுதி கட்டத்தில் இருப்பவன், தேவயானியென்ற பேரழகியின் கணவன் என்ற கவசங்களை உடைத்தெறிகின்றன. அவன் இப்போது எவ்வித பாதுகாப்புகளும் இல்லாது தனித்து ஒரு சிறுவனென நிற்கிறான்.
விழிதிருப்பிய யயாதி பார்க்கவன் புன்னகைப்பதைக் கண்டு “என்ன?” என்றான். “உடலென்பது என்ன என எண்ணிக்கொண்டேன்” என்றான் பார்க்கவன். “என்ன சொல்கிறாய்?” என்று யயாதி புருவம்சுருக்கி கேட்டான். “ஒரேகணத்தில் முதிரா இளைஞனாக ஆகிவிட்டீர்கள். நோக்கு அசைவு அனைத்திலும்.”
இப்படி தாக்குதலை எதிர்கொள்ளமுடியாமல் முற்றிலுமாக வீழ்ந்துவிட்ட யயாதி அதற்கான விளைவுகளை அனுபவிக்க வேண்டியவனாக ஆகிவிட்டான்.
தண்டபாணி துரைவேல்