மாமலர் முடிந்ததுமே ஒரு
வெறுமை சூழ்ந்தது. ஒரு பெரிய கொண்டாட்டமாகத் தான் பீமன் உடன் பிறந்தாரை சென்று
சேர்கிறான். திரௌபதிக்கு கொடுக்கப்பட்ட மலரும் அவன் உணர்ந்த மணமும் ஒன்றல்ல
என்கிறான். பின் திரும்பிப் பார்த்தால் எல்லாமே சொல்ல முடியாத அளவுக்கு மிக கனமாக
இருக்கின்றன.
மாமலர்
முடியும்நேரத்தில் நான் யயாதியும் படித்து முடித்தேன். மிக நல்ல அற்புதமான
புத்தகம். மிக எளிய ஆங்கிலம். ஒரு மனிதனால் தாங்க முடிகிற சுமைகளுடன்
குற்றங்களுடன் இளைப்பாறல்களுடன் இருக்கிறது. ஆணவம் மிக்க தேவயானியை
சித்தரித்திருக்கிறார். ஒவ்வொருவரும் அவர்கள் மனதளவில் கொள்ளும் பிரியங்களும்
சுமைகளும் அவற்றின் அடிப்படையில் எழும் மேன்மைகளும் சிறுமைகளும் சிறப்பாகவே
சொல்லப்பட்டுள்ளன. அந்தக் காட்சிகளை நாமும் கண்டுவிடும் படி சொல்லப்பட்டிருப்பதும்
சிறப்பு. அவற்றில் குறைவதாக நான் நினைப்பது உவமைகள். அவை இன்னும் அழுத்தமாக
கதையில் நம்மை தைத்திருக்கும்.
சில உவமைகள் நம்மோடே
தங்கிவிடும். எப்போதும் அந்த இடத்தை தருணத்தை நினைவூட்டிக் கொண்டே இருக்கும். காலையில் விடியலில் மலை முகடுகளை விரியக் கூம்பிய மலர்கள் போல என இன்னும் இந்த நொடி சொல்லப்பட்டது போலவே மனதால் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
புலர்காலையில் மெல்லிய வயலட் நிறத்தில் அந்த மலை முகடுகளை இப்போதும் என்னால்
பார்க்க முடிகிறது.
மாமலரில் ஒரு இடத்தில்
வானிலிருந்து பார்த்தால் சுழற்றிய தீப்பந்தம் போல ஊர் தெரியும் என்ற உவமையை
சொல்லியிருந்தீர்கள். மிகச் சரியாக் புரிந்து கொள்ள முடிந்தது. வானிலிருந்து
பார்ப்பதற்கான கற்பனையை அந்நாளின் மனித மனம் கொண்டிருக்குமா என்றே எனக்குக் கேள்வி
எழுந்தது. மீ உவமை இந்நாளில் நின்று அந்த நாளை பார்க்கும் பார்வை அது என்று
தோன்றியது.
சினமே முதலான அரசியின்
நகரம் தீப்பந்தம் போல இருப்பது நியாயம் தான்.
காண்டேகர் காட்டும்
யயாதி வேறு ஒருவன். மிக எளிய அவனை, புண்பட்ட அவனை நான் அன்னையென ஆற்றுப்படுத்தவே
விழைகிறேன்.
கங்கா