ஜெ,
யயாதி முதுமையை அடைவதும் அதனை அவன் தன் மகனுக்குக்கொடுத்ததும் அவனும் முதுமை
அடைவதும் சூட்சுமமான முறையில் நிறையச்செய்திகளுடன் சொல்லப்பட்டிருந்தன. அதை வாசித்தபோது
அதெல்லாமே வேறுவேறு வகையில் நாவலில் வந்துவிட்டிருப்பதை நான் உணர்ந்தேன்.
யயாதியின் முதுமையும் ஹுண்டன் கல்லாவதும் ஹுண்டனின் மனைவிகள் நோயில் மெலிந்தும்
உப்பியும் உயிர்விடுவதும் ஆயுஷ் நோயாளியாக ஆவதும் அசோகசுந்தரி இளமையில் இருந்து நேரடியாக
முதுமையாக ஆவதும் ஞாபகம் வந்தது. நாவல் முடிந்தபின்னர் பழைய அத்தியாயங்களை எடுத்துப்பார்த்தேன்.
அப்போதுதான் இந்த இளமை முதுமை மரணம் என்னும் மாற்றத்தை வைத்தே மொத்த நாவலும் எழுதப்பட்டிருப்பதை
உணர்ந்தேன்.
ஒரே விஷயத்தைத்தான் பலகோணங்களில் நுட்பமாக மாற்றி மாற்றி எழுதி வெவ்வேறு உணர்ச்சிகளைச்
சொல்லியிருக்கிறீர்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான முதுமை. ஒவ்வொரு வகையான மரணம்.
இந்த நுட்பம்தான் மாமலரின் அழகு என நினைக்கிறேன்
ஜெயராமன்