Wednesday, May 24, 2017

நீர்க்கோல வாழ்வு

நீர்க்கோல வாழ்வு



அன்பின் ஜெ,

கம்பனில் எடுத்த வரிகள் உங்கள் அடுத்த நாவலின் மையப்படிமம் ஆகியது மகிழ்ச்சி. கடந்த சில நாட்களாகவே இருந்த மன உலைச்சல்களில் இருந்து வெளிவர உதவிய மந்திரமாகவே ஆகிவிட்டது நீர்க்கோல வாழ்வு என்னும் சொற்றொடர். இம்முறை ஊட்டி காவிய முகாமில் தே. அ. பாரி கவிதைகளுடன் ஏதேனும் ஒரு பொருத்தமான படத்தை இணைத்துப் பார்த்தால் அக்கவிதை அனுபவம் மேலும் அழகுறும் என இரு கவிதைகளுக்கு அவர் தேர்ந்தெடுத்த படங்களின் மூலம் எடுத்துரைத்தார். அது உண்மை. பேன் புராணம் என்ற கவிதைக்கு அவர் தேர்ந்தெடுத்த ஜேன் கூடால் சிம்பன்சிகளோடு இருக்கும் ஒரு படம் அக்கவிதையை ஒரு காலாதீதமான மானுட வாழ்வின் ஒரு பகுதியைத் தொட்டுக் காட்டிய ஒன்றாக மறு விளக்கம் செய்தது. இத்தகைய சாத்தியங்கள் வாசகனின் கையில் தான் இருக்கின்றன. அவ்வகையில் கம்பனின் இப்பாடலுக்கு நீர்க்கோலத்தின் ஒரு படத்தை இணைத்ததன் மூலம் வேறொரு கோணத்தைத் திறந்திருக்கிறீர்கள்.

இப்பாடல் பொதுவாக நீரின் மேல் எழுதப்பட்ட கோலம் என்ற வகையில் வாழ்வின் நிலையாமையைச் சொல்வதாகவே வாசிக்கப்பட்டிருக்கிறது. நீர் மேல் வரைந்த கோலத்தைப் போல நிலையாத இந்த வாழ்வை விரும்பி, எனை வளர்த்து போர்க்கோலம் கொடுத்தவருக்கு உயிர் கொடாது வீர சொர்க்கம் செல்ல மாட்டேன் என்றே பொருள் கூறியிருக்கிறார்கள். அது ஒருவகையில் உண்மை தான் என்றாலும், நீர்க்கோலம் என்பதைத் தெளிவான நீரில் ஒளியும், காற்றும் இணைந்து ஆடும் கோலம் போல ஒவ்வொரு கணமும் சுற்றியிருக்கும் சூழலாலும், தனது குண மாறுபாடுகளாலும் வெவ்வேறு தோற்றங்களைக் காட்டும் இந்த வாழ்வு என்ற பொருளில் பார்க்கையில் இப்பாடல் இன்னும் ஆழமாகிறது. இதைக் கூறுபவன் ஆறு மாதம் உறக்கமும், மறுபாதி விழிப்பும் கொண்ட ஒருவன். ஒரு வகையில் பனி விலங்குகளின் குளிர்கால தூக்கத்தை ஒத்த வாழ்வைக் கொண்டவன். அவன் வாணாள் நிச்சயம் சராசரியை விட அதிகமாகவே இருக்கும். இருப்பினும் அவன் தான் வாழ்வை நிலையாதது எனவும், நிலையாதது ஆயினும் கணம் தோறும் ஒரு காட்சி தர வல்லது எனவும் விளிக்கிறான். நீர்க்கோல வாழ்வு... என்ன ஒரு சொல்லாட்சி. ஒரு வகையில் பார்த்தால் கம்பனுக்கு மீண்டும் ஒரு நவீன வாசிப்பைத் தர வேண்டும் என நினைக்கத் தோன்றுகிறது.

கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு முடிவைத் தானே கர்ணனும் எடுக்கிறான். நீர்க்கோல வாழ்வு. எத்தனை கோலங்கள். என்னென்ன நியாயங்கள். சரிகள், தவறுகள், இருமைகள், இருமை இன்மைகள்... ஒவ்வொருவரும் ஒரு கோலத்தைக் கொள்ளப்போகிறார்கள். ஆயினும் உடனேயே அதைத் துறக்கவும் போகிறார்கள். பிரயாகை நாவலுக்குப் பிறகு மையப்படிமம் ஒன்றை கதைத் தலைப்பாகத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். சிறப்பாக நாவல் வர வேண்டி, காத்திருக்கிறேன்.

அன்புடன், அருணாச்சலம் மகராஜன்