அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
வேதமுடிபுக் கொள்கை சார்ந்த குரு தமனர் “வழிபடுவது தவறில்லை. ஒன்றை வழிபட பிறிதை அகற்றநேரும். மலர்கொய்து சிலையிலிடுபவன் மலரை சிலையைவிட சிறியதாக்குகிறான்” “தூய்மை பிழையல்ல. தூய்மையின்பொருட்டு அழுக்கென்று சிலவற்றை விலக்குதலே பிழை.” என்று ஒன்றின் பொருட்டு பிறிதொன்றை விலக்கும் தன்மை பிழை என்று கூறி “இங்கிருத்தல், இக்கணத்தில் நிறைதல், இதற்கப்பால் யோகமென்று பிறிதொன்றில்லை” கூறுகிறார். "இங்கிருத்தல், இக்கணத்தில் நிறைதல்" இச்சொற்கள் பேருவகை அளிக்கிறது. விலக்குதல் ஒன்றில்லை. பொருளற்றவற்றை பொருளென தூக்கிச் சுமக்கும் புல்லறிவும் இல்லை.
யோகம் கூறும் தமனர் அவ்வழியிலே பாண்டவர்க்கு மறைந்து கொள்ள வழியும் பகிர்கிறார். தம்மில் தாமே விலக்கி மறைத்தவற்றை உருக்கொள்ளச் செய்தல் - தம்முள் உறையும் மற்றொருவரை எழச்செய்தல். இதுகாறும் பிறர் என்று கொண்டதை தமர் என வெளிச்சம் இடல். இதுகாறும் தமர் என தரித்தவற்றை பிறிது எனக் காணல். தனக்கென ஒரு தனித்த உருவம் இல்லாமல் செல்லுமிடம் நிற்குமிடம் என காலத்தால் இடத்தால் உருக்கொள்ளும் நீர் போல நீர்மை கொள்ளல். நீரில் இடப்பட்ட கோலம் என்று பிழையாக எண்ணினேன் -இப்போது அது சரியல்ல - செல்லுமிடம் எல்லாம் அல்லது அமையும் எல்லாம் அது கொள்ளும் கோலம் என அறிகிறேன். எலும்புகள் தெரியும் யானையின் புகைப்படம் முதன் முதலாய் காண்கிறேன். "நீரின்றி அமையாது அறம்" என தருமனாய் உரைத்து - பீமனாய் யானைகளுக்கு நீர் தரும் கருணை புனைவென்னும் கனவுலகு கடந்து புறவுலகென்னும் நனவுலகில் அருள் மழையென பொழிய பிறைநிலவு அணியும் பெருங்கருணை இறைவரை இறைஞ்சுகிறேன்.
விக்ரம்,
கோவை