நீர்க்கோலம், நீரில்
கோலங்களை உருவாக்கும் ஒளியின் நாயகனான சூரியனில் துவங்கியிருக்கிறது. வாழ்வை இரு
இணைந்த நிகழ்வுகளை, காலமெனும் பரிமாணத்தில் முன், பின்னாக வைத்துப் பார்ப்பது
வெண்முரசுக்கு புதிதல்ல. மாமலரில் கால ஏடுகளின் புரட்டல்களாக அதைச் செய்து பார்த்த
வெண்முரசு, ஒளியுமிழ் கோலங்களின் ஆட்டமாக நீர்க்கோலத்தில் அதைச் செய்திருக்கிறது.
நீர்க்கோல வாழ்வு
என்று வந்த போதே மனதில் கர்ணனும் வந்து சென்றான். அவன் சம்பாபுரியின் அரசன்.
நீர்க்கோலம் சம்பாபுரியில் சூரியனை நிறுவி வழிபட்ட சாம்பனின் கதையில்
துவங்கியிருக்கிறது. புராணங்களின் படி கிருஷ்ணனுக்கு (துவாரகையின் கிருஷ்ணனே தான்)
ஜாம்பவதியில் பிறந்த சாம்பன், கிருஷ்ணனை விஞ்சும் பேரழகனாக இருந்தவன்.
அப்பேரழகினாலேயே தந்தையின் தீச்சொல்லுக்கு ஆளானவன். நாரதர் செய்த கலகத்தால் தன்
மைந்தன் மீது முனிந்து அவனை தொழு நோயாளியாகச் சபித்தான் கிருஷ்ணன். இதையே
நீர்க்கோலம் ‘ஒளிகொண்டவன் தன் ஒளியால் மறையவேண்டியவன்’ எனச் சொல்கிறது. எந்த தீச்சொல்லும், அதன் மீட்போடு தானே
அளிக்கப்பட்டாக வேண்டும். அதன் படி சாம்பனின் சாபம் சூரியனால் விலகும் என்பது
மீட்பு. அவ்வகையில் சாம்பன் சூரியனின் பெருமைகளை அறிந்து, அவனை வணங்கி, அவன் ஒளியை
ஒரு சிலையாக சந்திர பாக நதியில் இருந்து எடுத்து, விமோசனமும் அடைந்து, நிறுவி
வழிபட்ட இடமே சம்பாபுரி, இன்றைய கோனார்க். மேலும் இது சூரியன் உதிக்கும் இடத்தில்
அமைந்த கோவில். இதே போன்று மூல்தானில் மதிய நேரத்திற்கு ஒன்றும், குஜராத்
மொதாராவில் அந்திக்கு ஒன்றும் என அவன் மேலுமிரு கோவில்களை அமைத்தான். அவன்
சூரியனின் பெருமையைக் கேட்டு உணர்ந்த புராணம்
சூரிய புராணம் அல்லது சம்பா புராணம் என அழைக்கப்படுகிறது.
சாம்பனின் சாப விமோசனத்தின் முக்கிய பகுதி, அவன் நதியின்
ஒளியில் இருந்து மூழ்கி எழுகையில் நோய் விலகினான் என்பது. அதையே இங்கே பிரஹத்பலத்வஜன்
நதியில் மூழ்கிப் பெற்றுக் கொள்கிறான். இங்கே பிரஹத்பலத்வஜன் அவன் நூறு மைந்தருக்குத்
தந்தை. சாம்பன் அங்கே தந்தையருக்கு மைந்தன். இந்த பிரஹத்பலத்வஜன் சூரிய வம்சத்தைச்
சார்ந்தவன். அவன் இந்த சாம்பனின் கதையை வசிஷ்டரிடம் கேட்டதாக ஒரு கதை உள்ளது. வம்ச
வரிசைகளின் படி சாம்பன் சந்திர குலத்தவன் (சந்திரன் – புதன் – புரூரவஸ் – ஆயுஷ் – நகுஷன் – யயாதி – யது – யாதவ குலம்).
சூரியனின் ஒளியை வாங்கித் தானே சந்திரன் ஒளிர இயலும். அதையே சூரியன்
‘என்
வடிவே இருள்
பகலின்
மறுபக்கமாகிய இரவும் எனதே’ என்கிறான். இந்த இருமையை அறியும் அவன், வாழ்வு என்பது நீர்க்கோலமென
நெளியும் தருணங்களே எனத் தெளிகிறான். இந்த இருள், ஒளி என்ற இருமைகளை அறிந்து, அதன்
இன்மையையும் உணர்ந்து கடந்தவன் இறுதியில் அந்தியில் எழும் செவ்வாயாகச் சென்று
அமர்கிறான். நீரில் ஒளியிட்ட கோலம் இரு வாழ்வுகளைத் தீர்மானிக்கிறது. நீர்க்கோல
வாழ்வு!!
ஆம், இதில் ஒரு கால
மயக்கமும் உள்ளது. நம்முடைய புராண காலங்களின்
படி பிரஹத்பலத்வஜன் இராமாயண காலத்தவனாக இருக்க வேண்டும். ஆயினும் அவன் கேட்கும்
சாம்பன் கதை கிருஷ்ணனின் மகன். இது போன்ற பல குழப்பங்கள் நமது புராண கதையாடல்களில்
உண்டு. அவை புராணம் என்பதாலேயே, இத்தனை காலங்களைக் கடந்து நம்மை வந்தடைந்துள்ளவை
என்பதாலேயே அவற்றின் உள்ளுறை அறிவது அவசியம். அதற்கு வெண்முரசு பெரிதும் உதவிக் கொண்டிருக்கிறது.
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்