Wednesday, May 10, 2017

இருத்தல் இனிது




அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

துயரம் இருத்தலின் பகை - இருத்தல் இனிது.  மாமலர் முடிந்து விட்டது.  பல எண்ணங்களை, உணர்வுகளை, கேள்விகளைக் கிளப்பிவிட்டு என்னளவில் இன்னும் முடியாமல் இருக்கிறது.  அவ்வப்போது என் எண்ணங்களை எழுத வேண்டும் என்று எண்ணி பின்னர் சூழ்நிலைகளின் அலைகள் செலுத்தியவாறு சென்று எழுதாமல் விட்டேன். 

நாற்றம் என்ற சொல் முன்பு எந்த பொருளில் வழங்கப்பட்டதோ அதன் நேர் எதிர் பொருளில் இன்று மக்கள் வழக்காகிவிட்டது.  மலர் தேடி பீமன் செல்கிறான்.  அவனது பயணம் நிலத்தில் கிடைமட்டமாகவும், மேடு பள்ளங்கள் கடப்பதாக மேலும் கீழுமாகவும் புறதில் தோன்றுகிறது.  சூட்சுமமாக மற்றொரு வகையில் காலத்தின் பரப்பில் பயணிக்கிறான்.  அருள் வடிவினன் அனுமன் பிறவியின் வாசனைகளைத் தொடர்வது நிறுத்தப்பட வேண்டும் என்பதை உணர்த்த முற்பட்டு நிகழ்த்துகிறான்.  ஆனால் பீமன் பீமனாகவே இருக்கிறான். 

கோவையின் ஒரு பகுதியில் மழை வலுவாக பெய்யும் நேரத்தில் 10 கிமீ தொலைவில் உள்ள நண்பருடன் தொலைபேசியில் பேசினால், இங்கு மழை பெய்கிறது என்று சொன்னால் நம்ப மறுக்கிறார்.  இங்கு ஒரு துளி விழவில்லை பொய் சொல்கிறார் என்கிறார்.  மழையின் சத்தத்தை கேட்கச் செய்து நிரூபிக்க வேண்டும்.  ஆர்டிக் பெருங்கடலில் நீரில் உப்பு குறைவு. பெருங்கடல்களின் நடுவே தோராயமாக ஒரு இடத்தில் இருந்து இந்தபக்கம் குறைவு - இங்கிருந்து உப்பு அதிகம் என்று கூறலாம்.  ஒரே நீர்தான் என்றாலும் கூட.  கோதண்ட ராமன் நேர் நின்றான்.  ராம பக்தன் நேராக அமைக்கப்பட்ட பாதையின் வழியே மலையின் உச்சிக்கு செல்லலாம்.  கண்ணனின் பாதை இதுவென்று பிறர் அரியவொண்ணாதது மலைச்சுற்றி எங்கெங்கோ சென்று உச்சி செல்கிறான்.  ராமனுக்கு பெரும் பக்தர்கள் - அந்த வழியிலே யோகிகள் ஞானிகள் என அமைகிறார்கள்.  கண்ணனின் பக்தர்கள் அவ்வாறு அமைவதில் குழப்பம் உண்டு.  குழப்பம் தவிர்க்க கண்ணனை விரும்பியவாறு தேர்வு செய்து ஒற்றைப் பாதை அமைக்க வேண்டி இருக்கிறது.  ராமன் போல் அல்லாமல் அவன் பக்தர்களால் சந்தேகிக்கப்படுபவன்.  சீடர்களால் சந்தேகிக்கப்படும் குருவும் கூட.  செல்லும் திசைகளை தீடீரென்னு மாற்றுபவன், வண்ணக் கோலங்கள் வரைந்து கலைப்பவன்.

தன் அகந்தையை உறுதிபற்றி யயாதியைச் சினந்து - உமிழ்ந்து தேவயானி நடந்துகொண்டது யயாதியின் மீது ஒருவித பரிவைத் தோற்றுவித்தாலும் அது உடனே போய்விட்டது.  யயாதி தந்திரமானவர் "ஆசானிடம் பணிவு" என்று வேடம் இடுகிறார்.  பணிவும் பொறுமையும் மிகுந்து நடப்பதன் மூலம் தீச்சொல் இடப்பட்டாலும் உடனே தப்பிவிடவும் வழியமைந்து விடும் என்று அறிந்தே நடந்துகொண்டார் என்ற எண்ணமே ஏற்பட்டது.  சாபத்தால் பெற்ற முதுமையை அவர் விரைந்து மாற்ற முற்படுவது அப்படி எண்ணச் செய்தது.  ஆணவத்தைப் போலவே - அதைக்காட்டிலும் கீழானது போலிப்பணிவு.  முதுமை பற்றிய கருத்துக்கள் - அது இளமையுடன் தொடர்பற்ற வேறு வாழ்கை என்று காட்டுகிறது.  நடுவயதில் நின்று நோக்க குழந்தைப் பருவமும் அவ்வாறுதானே ? நினைவுகளால் பின்னோக்க “இனிமையானது” என்று எண்ணினாலும், "அது மீண்டும் வேண்டுமா?" என்று கேட்டால் யாராவது குழந்தைப் பருவத்தை மீண்டும் கேட்பார்களா? அன்று அர்த்தம் உடையவை இன்று அர்த்தம் உடைய தேவைகள் அல்லவே ?. 

தன் உணவை திரௌபதி பீமனுக்குத் தந்து விடுகிறாள்.  அதில் அவனுக்கு தாயாக தன்னை வெளிப்படுத்துகிறாள்.  அவனிடம் தன் தந்தையின் அன்பை எதிர்நோக்குகிறாள்.  தாய், சகோதரி, மனைவி, மகள் என எந்த உறவில் இருந்தாலும் பெண் தாயாக நடந்து கொள்கிறாள்.  பாதுகாப்பும் அரவணைப்பும் ஆண்களிடம் பெறும் போது அவர்களில் தந்தையைக் காண்கிறாள் - அதையே அவர்களுக்கு தான் வழங்கும் போது தன்னை தாயென்று காண்கிறாள்.  ஆண்கள் அச்சமுறும் போது அன்னையே என அம்பிகையின் அருள் நாடலும், பெண்கள் தந்தையே என சிவன் பால் சரண்புகலும் பொருத்தம் எனத் தோன்றுகிறது.

மாமலரின் ஊடாக பலவற்றையும் கடந்து வந்தேன்.  மண்ணில் ஆழமாக வேர் விட்டு, வானோக்கி கிளைகள் விரித்து பரவியது போல் விரிந்து சென்ற எண்ணங்கள் யாவற்றையும் மீண்டும் ஒருமுறை நோக்கி - எல்லாத் தடங்களின் வழியாகவும் சென்று பார்க்க ஆசை.  தினமும் ஷாம்பவி பயிற்சியின் போது உச்சரிக்கும் "அசதோமா சத்கமய தாமஸோமா ஜோதிர்கமய மிருத்யோர்மா அமிர்தங்கமய" என்பதில் அசதோமா "சக்தமய" என்று உச்சரித்து வந்தேன்.  சரியான நேரத்தில் உங்கள் பதிவு வந்து பிழை திருத்தமாக அமைந்தது.  வகுப்பு மேற்கொண்டபோது தந்த தாளை மீண்டும் எடுத்துப் பார்த்து அதை சரியாகக் கொள்ளத் தவறியதை உணர்ந்து கொண்டேன்.  எவ்வாறாயினும் நுண் சொற்கள் தொடர்ந்து உச்சரிக்கப்படுகையில் பிழை இருக்குமாயின் அருளே அதை சரி செய்கிறது -அதுவும் அன்பின் வழியிலேயே.  தங்களுக்கு நன்றி.



அன்புடன்
விக்ரம்,
கோவை