Tuesday, May 30, 2017

ஆள்மாறாட்ட மனநிலை



அன்புள்ள ஜெ. வணக்கம்.

அப்பாவும் நானும் சிதம்பரம் பொன்னம்பலத்தில் கூத்தபெருமான் கூத்தைக்கண்டுவிட்டு வந்து கீழவீதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீக்குடித்தோம். மண்ணின் மீதுதான் எத்தனை எத்தனை ஒப்பனை இல்லாத கூத்துகள்.

டீப்போடுபவர் இல்லாமையாலோ அல்லது வாராமையாலோ கல்லாப்பெட்டியில் நின்ற பெரியரே வந்து டீப்போட்டுக்கொடுத்தார். அப்பாவும் அவரும் நலம் விசாரித்தல் என்று தொடங்கி மென்மையாக பேசிக்கொண்டு இருந்தார்கள். சொல்லின் வழியாக பெறும் எந்த உணர்வும் முகம் அறியாமல்   பெரியவர் பேசிக்கொண்டு இருந்தார். ஆளுக்குரிய ஆடை என்று இல்லாமல், , ஆடைக்காக கொஞ்சம் உடம்பு இருப்பதுபோல் இருந்தார்.

வயதுதான் மனிதனை எப்படி மாற்றிவைக்கிறது. வயது ஆக ஆக  காலமும்  வாழ்க்கையும் மனிதனை ஏதேனும் ஒரு கட்டாய உழைப்புக்குள் சிக்கவைத்துவிடுகிறது அல்லது அந்த உழைப்புதான் வாழ்க்கையின் பிடிப்பாக உள்ளதுபோல் நம்ப வைக்கிறது.

அப்பா மீதிவாங்கிக்கொண்டு விடைப்பெற்று வரும்போது ஒரு கனத்த மௌனத்தோடு வந்தார்கள். நானும் அப்பாவுடன் மௌனமாக நடந்தேன்.
“அந்த பெரியவரை கவனித்தாயா?“ என்றார்கள் அப்பா.

“பார்த்தேன்பா“-என்று அப்பாவின் முகம் பார்த்து தலையசைத்தேன். அப்பாவின் முகத்தில் இன்னும் அந்த கனம் இருந்தது.

“அவர் ஒரு காலத்தில்  சிதம்பரத்தில் தனக்கு நிகர் உள்ளவன் இல்லை என்று வாழ்ந்தவர்” என்றார்கள் அப்பா.

நெஞ்சில் பலமும், முன்செல்லும் சொல்லும் பின்வரும் கட்சியும் இருக்கும்போது மனிதன் வேறு ஒருவனாக இருக்கிறான். நான் கேட்டிருந்த அவரைப்பற்றிய கதைகளில் அவர் வேறு ஒருவராக இருந்தார். அவர் சார்ந்த அரசியல்தான் அவரை தூக்கிவிட்டதும், இறக்கிவிட்டதும்.  அப்பாவுடன் நடந்த நான் நின்று திருப்பி அவரைப்பார்த்தேன். இவர் வேறு ஒருவர்.

இவர் தொடமுடியுமா அவரை?. அவர் அறிந்து இருப்பாரா இவரை?.

வாழ்க்கை மேடையில்  வேடமும் கூத்தும்  காலம் காலமாய் நடக்கிறது. இதை எல்லாம் அறிவேன் அறியேன் என்பதுபோல கூத்தபெருமான் சிவகாமிஅம்மை மகிழ்வதற்காக பொதுவில் ஆனந்த கூத்துச் செய்கிறான்.

அமரும் இடத்தை எல்லாம் சிம்மாசனம் என்று ஆக்கும் ஆளுமை உடைய திரௌபதி பணிப்பெண் என்னும் வேடம். பிறந்ததில் இருந்தே அன்னையாலும் தந்தையாலும் பேரறத்தான் பேரரசன் என்று வளர்க்கப்பட்ட தருமன் சிற்றரசன் அகம் அறிந்து சொல்புனைந்து மகிழவும் வெறுக்கவும் செய்யும்  களமாடி. மண்ணில் பெண்ணென பிறந்தாலே பார்த்தன் மாலைவந்து விழாதா என ஏங்கவைக்கும் வில்லாலி கன்னியர் கனவுநாயகன்  பாலிலி வேடம். பீமன் அடுமனைமடையன்.  அழகும் அறிவும் நிரம்பிய நகுலன் சகாதேவர்கள் கால்நடை மெய்ப்பர்கள்.  

இவர்களின் எல்லையில் அவர்கள் இல்லை. அவர்களின் கனவிலும் இவர்கன் இல்லை. மானிட வாழ்க்கையில் புனைந்து இருந்தது வேடமா? புனையபோவது வேடமா? புனைந்து இருந்தது வேடம் என்று ஆகும் என்றால் அது எப்படி அசல் என்று மானிடனை நம்பசெய்கிறது. புனையபோவது வெறும் வேடம் என்றால் மானிட மனம் ஏன் நாணுகின்றது?

அதும் இதும் இல்லை இக்கணம் மட்டுமே உள்ளது  எண்ணும்படி ஒரு திரை வாழ்க்கையில் தொங்குகின்றது. அந்த திரை அறுந்துவிழும்போது அவரும் இருவரும் ஒருவர் என்று காலம் கூத்துசெய்கிறது. 

காலத்தின் இந்த கூத்தை நீர்க்கோலத்தில் அழகாகப்போட்டுக்காட்டுகின்றீர்கள். பாண்டவர்களின் ஆள்மாறாட்ட மனநிலையை செம்மைப்படுத்தி உணரவைக்கின்றீர்கள். பாண்டவர்கள் மட்டும் இல்லை மானிடர் அனைவரும் ஏதோ ஒரு மாறுவேடத்தில் வாழ்கிறார்கள். அது வேடமாக இல்லாமல் நிஜமாக வாழ்க்கையாக இருக்கும்படி காலம் சட்டம் மாட்டிவிடுகின்றது.  

அன்புடன்     
ராமராஜன் மாணிக்கவேல்.