Monday, May 22, 2017

தேவயானி

 
 
அன்புள்ள எழுத்தாளருக்கு...

முதலில் மாமலரை தினம் தினம் படிக்கத் துவங்கவில்லை. விட்டு விட்டது.  பிறகு துவங்குகையில் பீமனின் பயணத் துவக்கம் வரை படித்து விட்டு கதை வேறெங்கோ போகையில் விட்டு விட்டேன். அவ்வப்போது கண்ணில் படுகையில் தேவயானி, புரு என்றெல்லாம் பட்டதில் ‘ஓ..கதை எங்கோ கிளை பிரித்துப் போகின்றது..’ என்று உணர்ந்து முக்கிய ஆட்கள் இல்லாத கதை என்று படிக்கவேயில்லை. மேலும் காண்டேகரின் யயாதியை ஏற்கனவே படித்திருந்ததால், அவர்களுடைய கதையை படிப்பதில் ஆர்வம் வரவில்லை.  (‘சொல் வளர் காட்டுக்கும்’ முதலில் இதே தான் நடந்தது. ஒவ்வொரு குருகுலமாகப் போகிறார்கள் என்பதைத் தாண்டி பல குருமரபுகளின் வேர்களை அறிமுகம் செய்யும் பகுதிகளைத் தாண்டித் தாண்டிப் போனேன். இப்போது பாண்டவர்களை விட்டு விட்டு குருமார்கள் என்ன சொல்கிறார்கள் என்பதில் ஆர்வமாகப் படிக்கிறேன்.)

மாலரைப் போன வாரம் முதலிலிருந்து படிக்க ஆரம்பித்தேன். பதினேழு வருடங்களுக்கு முன்பு கல்லூரி விடுதியில் இரவுணவு முடிந்து படிக்கத் துவங்கி, இரவு மூன்று மணி வரை விழித்து, மறுநாள் காலை வகுப்புகளைப் புறக்கணித்துப் படித்து முடித்து அகம் நிறைந்த  பொன்னியின் செல்வனுக்கு அடுத்து, கிடைத்த மணிகளில் எல்லாம் மேலும் நேரம் உருவாக்கிக் கொண்டு இரு தினங்களில் படித்து மகிழ்ந்தது மாமலரை மட்டும் தான்.

நீங்களே சொன்னது போல் முடிக்கையில் ஒரு தனிமையோ, களைப்போ வரவில்லை. மகிழ்வும் நிறைவும் தான் வந்தன. காரணம் இங்கே மனம் கவர்ந்த பீமனும், அனுமனும். பிரயாகையில் கடோத்கஜன் பக்கங்களிலும் வந்த அதே இனிமை தான் இங்கும். இந்திரநீலத்தை மீண்டும் மீண்டும்படிக்க வைப்பது அவனுடைய காதல். மாமலரில் மணமாக இருப்பது இவர்களது வல்லமையும் அவற்றைத் தலைவனுக்கே அர்ப்பணித்து விட்ட சரணாகதியும். வல்லவன் ஒருவன் அதை அறிந்தும் எளியாரிடம் பிரயோகிக்காமல் (சவுக்கால் அடித்தவனையும் பொருட்படுத்தாதவன்) அதைத் தன் சுயநலத்திற்குக் கொள்ளாதவன் மேல் அன்பு கொள்ளாதவர் யார்?

காண்டேகரின் யயாதியில் வந்த தேவயானி கொஞ்சம் வில்லத்தனம் சூடி வந்தாளோ என்று நினைக்க வைத்து விட்டாள், மாமலரில் நிகழ்ந்த தேவயானி. 

பட்டுத்துணியில் பதிக்கப்பட்டு தொடுகையில் மின்னும் மின்மினிப்பூச்சிகள் போல, இப்போது மீண்டும் வண்ணக்கடலோ பிரயாகையையோ படிக்கையில் தேவயானி பற்றி வருகின்ற ஒவ்வொரு குறிப்பும் மாமலரின் தேவயானியின் மொத்த வாழ்க்கையையும் அரைக்கணத்திற்கு மனதில் நிகழ்த்தி விடுகின்றது. 

நன்றிகள்.

அன்புடன்,
இரா.வசந்த குமார்.