ஜெ
மாமலர் பெண்களின் உலகம் வழியாகச் சென்றதை பலமுறை எழுதவேண்டும்
என நினைத்தேன். ஒவ்வொரு முறையும் அடடா என்ற எண்ணம் வந்தது. ஆனால் நாவலின் முடிவில் திரௌபதியின் மனநிலை வந்தபோதுதான் அதன் முழுமையான
நிறைவை அடைந்தேன். அவள் சின்னவயசைப்பற்றி நினைக்கிறாள்.
அத்தனை பெண்களுக்கும் சின்னவயசுக்குச் செல்வதுதான் பெரிய
சொப்பனமாக மனசிலே இருந்துகொண்டிருக்கும். எனக்கும் அந்த நினைப்பு கொடுக்கும் நஸ்டால்ஜியாவும்
கனவும் அற்புதமானது. நாங்கள் சின்னவயசில் திருத்துறைப்பூண்டியில் இருந்த வீடு போல எனக்கு
ஒரு கனவுப்பிரதேசமே இல்லை. அந்த வீடு இன்றைக்குக் கிடையாது. அது என் மனசிலேதான் இருக்கிறது.
அவள் அந்த மனநெகிழ்ச்சியை அடைவதை கண்டபின்னர்தான் அவள் அந்தமலரைத்தேடிச்செல்ல
பீமனை அனுப்பிய அத்தியாயத்தைதிரும்பச்சென்று வாசித்தேன். அதிலும் அதே மனநெகிழ்ச்சிதான்
உள்ளது. அவள் த்ருபதனை நினைத்துத்தான் ஏங்கிக்கொண்டிருக்கிறாள். அவள் அந்த தந்தையிடமிருந்து
மீளவே இல்லை.
அதை மீண்டும் தேடி பிரயாகையிலே அவள் சின்னப்பெண்ணாக வரும்
காட்சியை வாசித்தேன். அதில் அவளை துருபதன் தெய்வம்போல கொண்டாடும் இடம் வருகிறது. அற்புதமானது
அது. அவளை பெற்றபின்னர்தான் அவன் நார்மலாக மீண்டு வந்திருக்கிறான். அவனுடைய அந்த மனநிலைதான்
அவளை சக்கரவர்த்தினியாக ஆக்குகிறது. சக்கரவர்த்தினியாக அவள் ஆனாலும் அப்பாவின் சக்கரவர்த்தினியாக
ஆவதைப்பற்றித்தான் கற்பனைசெய்துகொண்டிருப்பாள்.
நுட்பமான இடம் அது. அதோடு அந்த கூடலும் மழையும் எல்லாம் ஒரு
நெகிழ்வான முடிவாக இருந்தன
எம்