Sunday, May 28, 2017

நீர்க்கோலம் 3 – பிறிதோன்



பாண்டவர்கள் தம்முள் இருந்து பிறிதொருவரைக் கண்டெடுக்கும் இந்த அத்தியாயம் மீண்டும் ஒரு முறை அவர்களுக்கிடையே இருக்கும் உறவையும், அவ்வுறவில் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் பிறரையும் பற்றி அறியத் தருகிறது. ஒவ்வொருவரும் தாங்கள் வென்று கடந்த, தம்மால் வெறுக்கப்பட்ட அந்த உருவைச் சூடுகிறார்கள். இந்த மாற்றுரு காணும் விளையாட்டில் ஒரு வைப்பு முறை உள்ளது.

சகதேவனிடம் துவங்கி, நகுலன், பீமன், அர்ச்சுனன், திரௌபதி என்று இறுதியாக தருமரிடம் முடிகிறது. ஒருவிதத்தில் ஒவ்வொருவருக்கும் சூதர் பாடல்களால் உருவாக்கி அளிக்கப்பட ஆளுமை அலகின் ஏறுவரிசையில் அமைந்துள்ளது. அவர்களுக்குள் உறையும் அந்த பிறிதோன் சகதேவன் கூறுவது போன்று ‘எளியவர்களின் மாற்றுருக்கள் அவர்களின் முதன்மையுருவிலிருந்து பெரிதும் வேறுபடாதென்று எண்ணுகிறேன். மாமனிதர்களின் பெருந்தோற்றத்தின் அளவு அவர்களின் முதலுருவுக்கும் இறுதியுருவுக்குமான இடைவெளிதான் போலும்.

யார் பிறரின் மாற்றாளுமைகளைக் கூறுகிறார்கள் என்பதையும் நோக்க வேண்டும்.
திரௌபதி – சகதேவன், அர்ச்சுனன் மற்றும் தருமன்
பீமன் – நகுலன்
நகுலன் – பீமன்
தருமன் – திரௌபதி

சகதேவனும், தருமனுமே அவர்களின் முடிவுகளை எடுப்பவர்கள். அவர்களின் வாழ்வின் செல்திசையைத் தீர்மானிப்பவர்கள். அதற்கென அவர்கள் கொண்ட ஆளுமையே அவர்கள் இருவரும் வெளிப்படுத்துவது. அம்முடிவுகளால் பெரிதும் புண்பட்டது திரௌபதியின் ஆளுமையே. எனவே அவர்கள் கொண்ட ஆளுமையின் மறுபகுதியைத் தேடி அறிந்தவளாக திரௌபதியே இருக்கிறாள்.

அவள் அர்ச்சுனனின் மாற்றாளுமையைச் சொல்வது இன்னும் நுட்பமானது. அவனைப் பேடி என்கிறாள். நிலம் கதையில் வரும் அம்மாச்சி கூறுவது போல ‘ஏளா என்ன சொல்லுதே? நரம்பனுக தான் பொட்டைக்குட்டிகள மதிக்க மாட்டானுக…இவன் அய்யனாரு அம்சம்…நம்ம குட்டிய ராணிமாதிரி வச்சுக்கிடுவான்…காலில விளுந்து கெடப்பான்…. ’. அதை இங்கே செய்தவன் பீமன். மாறாக அவளை முதல் நாளே அறைந்து கீழடக்க நினைத்தவன் அர்ச்சுனன். பொதுவாக பெண்களை மிகக் கீழ்மையாக நடத்துபவர்கள் தன்னாளுமை மீது குழப்பம் உடையவர்கள். அர்ச்சுனனிடம் இந்த குழப்பம் ஆரம்பத்தில் இருந்திருக்கிறது. மாருதரிடம் அவன் தன் முதல் பெண் அனுபவத்திற்குப் பின் நடத்தும் உரையாடலில் இது மறைவாக வெளிப்பட்டிருக்கும். அதை உணர்ந்து கொண்டவள் ஆதலாலே அவள் பேடி என்கிறாள்.

இன்னும் முக்கியமானது பீமனும், நகுலனும் ஒருவரை ஒருவர் கண்டடைவது. பீமன் நகுலனிடம் சொல்வது அவன் அப்படியே கர்ணனிடம் கூறியது, அவன் நகுல சகாதேவர்களை குருகுலம் கூட்டிச் செல்ல வந்த போது. கர்ணனின் குருதித் தந்தை சல்லியன் தானே. சல்லியனின் தங்கை மாத்ரியின் மகன் தானே நகுலன். அவ்வகையில் இது இயல்பே. நகுலனுடன் திரௌபதியின் தோழமையுடன் கூடிய உறவையும் இதனுடன் இணைத்துப் பார்க்கலாம். இதன் பிரதிபலிப்பாக பீமனின் மாற்றாளுமையை வரையறுக்கிறான் நகுலன்.


அருணாச்சலம் மகாராஜன்


ar