இராமாயண அனுமன்
நிரந்தர காம ஒறுப்பு கொண்டவன். பிரம்மச்சாரி என்பவன் காமத்தை உடலால் மட்டுமல்ல,
மனதாலும் உன்னாதவன். நைஷ்டிக பிரம்மச்சாரி ஆயினும் பெண்ணை அறிந்தவன், எனவே ஞானி.
அனுமன் எவ்வாறு நைஷ்டிக பிரம்மச்சரியத்தைப் பூண்டான் என்பதற்கு ஓர் அற்புதமான
பதிலைத் தந்திருக்கிறது மாமலர். அவன் காமத்தை அறியவில்லை, ஆயினும் தூய காதலை
அறிந்திருக்கிறான். மெய்க்காதல். மாமலர் 92
ல் முண்டன்
கூற்று - வினாவற்றதே
மெய்க்காதல் என்பார்கள் – தூய காதலை அறிந்த ஒருவனின் கூற்று.
அக்காதலை அவன்
யாரிடமிருந்து அறிந்திருக்க இயலும்? வேறு யார், சீதை தான். அனுமன் சீதையைச் சந்தித்து உரையாடும் பகுதிகளில் ஒன்றில்
கூட சீதை ராமனை நிந்திக்கவில்லை, அவனைக் கேள்விக்குட்படுத்தவில்லை, தான் என்ன
செய்ய இயலும், செய்வேன் என்பதையே கூறுகிறாள். அது மெய்க்காதல். அக்காதலையும், அதன்
செல்திசைகளையும் அருகிருந்து கண்டவன் அனுமன். அவன் மலரின் மணத்தை அடைந்து
விட்டான், உணர்ந்து விட்டான். அவனுக்கு மலர் காயாகி, கனியாகி மாறும் மது
தேவையில்லை. நறுமணத்தில் இருந்து கெடுமணம் செல்ல வேண்டிய பயணம் தேவையில்லை.
அவ்வுண்மையை, மெய்மையை அறிந்த ஒருவன் அனைத்தும் உதிர்ந்து நேற்றின்றி வாழ்கிறான்.
அப்படிப்பட்டவனின் உடலை அல்ல, வாலைக் கூட அசைக்க மெய்யறியாதவனுக்கு இயல்வதில்லை.
இங்கு அனுமன்
அனைத்தையும் சொற்களாக ஆக்கத்தான் வேண்டுமா என்று வினவும் பீமனிடம் அவன் தேடலை ‘ஒரு பெண் ஒரு சொல்லுக்கு
அப்பால் வேறென்ன?’ என ஒரு வினாவில் முடிக்கிறான். ‘ஒரு சொல் மட்டுமே. ஆனால்
இங்குள்ள அனைத்தும் சொற்களே. இவையனைத்துமான ஒன்று உண்டென்றால் அதுவும் ஒரு சொல்லே. சொல்லில் அனைத்தையும் பெய்கிறோம். விழைவை, ஆணவத்தை, இழிவுணர்வை, இனிமையை, தனிமையை. மாவலரே, பெண்ணும்
நாம் பெய்து நிறைத்து எடுக்கும் வெறுங்கலம் அல்லவா?’ என்கிறான்.
அதனூடாக தான்
அறிந்ததையும், உதிர்ந்து விலகியதையும், அமைந்ததையும் சொல்லிச்செல்கிறான்.
‘சொல்லின் செல்வன்’ அல்லவா அவன், வேறு எவ்வாறு உரைக்க இயலும். மாமலர் நிறைவை
எட்டியதும், ஊட்டி காவிய முகாமில் சுந்தர காண்டம் முடிவுற்றதும் தற்செயல் அல்ல
என்றே நினைக்கிறேன். மிகச் சரியாக கம்பன் நிறுத்தியதை முன்னெடுத்து
முடித்திருக்கிறார் ஜெ!!
அருணாச்சலம்
மகராஜன்