Friday, August 9, 2019

வீரனின் முழுமை




அன்புள்ள ஜெ

துரியோதனனின் இறப்பு ஒரு மென்மையான நிகழ்ச்சி போல் முடிந்தது. அதை நெடுநாட்களாகவே எதிர்பார்த்திருந்தோம். அதை எவ்வகையிலும் மாற்றமுடியாது. ஆனால் நுட்பமாக அதை ஒரு ராகவிஸ்தாரம் போல விரித்து விரித்துச் சென்றீர்கள். அவனுடைய அந்த இறுதிக்கணத்துக் கம்பீரம் கிளாஸிக் கதாபாத்திரங்களுக்கு உரியது. மகாபாரதத்திலேயே அது இருக்கிறது. அவனுக்கு யுதிஷ்டிரர் ஒரு வாய்ப்பு கொடுக்கிறார். பாண்டவர்களில் எவரை வென்றாலும் தோற்ற எல்லாவற்றையும் திருப்பி கொடுத்துவிடுவதாகச் சொல்கிறார். அவன் நகுலனையோ சகாதேவனையோ தேர்வுசெய்யலாமே என்று அனைவரும் அஞ்சும்போது அவன் பீமனைத்தான் தேர்வுசெய்வான் என்று யுதிஷ்டிரர் சொல்கிறார். அவ்வண்ணம் அவனும் பீமனைத்தான் தேர்வுசெய்கிறான். அந்த கம்பீரம்தான் துரியோதனன்.

அந்த குணாதிசயத்தை நீட்டி நீட்டி பெரிய வடிவமாக ஆக்கியிருக்கிறீர்கள். அவன் ஒளிந்துகொள்ளவில்லை, யோகத்தின்பொருட்டே அங்கே சென்றான் என்று சொல்வது மிகச்சிறப்பு. மகாபாரத மூலக்கதையில் மிகப்பெரிய குணச்சித்திரவீழ்ச்சி என்பது துரியோதனன் ஒளிந்துகொண்டதுதான். அதெல்லாமே இடைசேர்க்கை என்று சில ஆய்வாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவன் ராஜனாக இருந்து ராஜயோகியாக ஆகும் முயற்சியில் இறக்கிறான். கடைசிநிமிடம் வரை அஸ்தினபுரிக்கானபோரிலேயே இருந்துகொண்டிருக்கிறான். அதுதான் துரியோதனனின் கதாபாத்திரத்தின் சிறப்பு

ராகவேந்தர்