Friday, August 9, 2019

கதிரெழுநகர் - பிரபு மயிலாடுதுறை




ஒரு மோட்டார்சைக்கிள் பயணியாக நான் அதிகாலையின் இனிமையை முக்கியத்துவத்தை உணர்ந்தவன். இந்தியாவின் வெவ்வேறு ஊர்களின் கருக்கிருட்டில் எனது பயணத்தை நான் துவக்கியிருக்கிறேன் என்பதை இப்போது எண்ணிப்பார்த்தாலும் மெய்சிலிர்க்கிறது. சிருங்கேரியில் கார்வாரில் லெபாக்‌ஷியில் நர்சிங்பூரில் மீரட்டில் ரிஷிகேஷில் என இம்மண்ணின் வெவ்வேறு தலங்களின் அதிகாலைப் பொழுதில் ஆர்வத்துடன் கிளம்பியிருக்கிறேன். நாளும் பயணத்தின் மூலம் மேலும் அணுக்கமாக உணர்ந்த எனது மரபின் எனது பண்பாட்டின் மீதான ஆர்வம் என்று அதனைச் சொல்ல முடியும். அத்துடன் மனிதர்களைக் காண்பதால் உள்ளத்தில் உணரும் எல்லையின்மை என்றும் அதனைச் சொல்ல முடியும். அரவிந்தரும் வ.வே.சு ஐயரும் பாரதியும் பல சூர்யோதயங்களைக் கண்ட புதுச்சேரியில் வெண்முரசின் கதிரெழுநகர் பகுதி குறித்து உரையாற்றுவது மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகிறது.
ஷண்மதங்களில் சௌரம் குறித்து யோசித்துப் பார்த்தால் காலத்தைக் கணிப்பவர்கள் கதிரவன் குறித்த துல்லியமான கணக்கீடுகளைக் கொண்டு மனித வாழ்க்கை குறித்தும் அதனை வளப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் குறித்தும் தங்கள் பார்வையை அளித்தவர்களாலேயே உருவாகியிருக்கிறது. ஆயினும் அதன் பிரத்யட்சமான தன்மை காரணமாக எளிய மக்களிலிருந்து யோகிகள் வரை அனைவரும் ஏற்கும் மார்க்கமாகவும் இருந்திருக்கிறது. சூரியன் கண் கண்ட தெய்வம் என்பது எவ்வளவு பெரிய உண்மை.


கலிங்கமும் வங்கமும் ஒரே பிரதேசமாக நிலமாக மிக சமீப காலம் வரை இருந்திருக்கிறது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கட்டாக்கில் பிறந்தவர். இளநாகனும் அருணரும் கலிங்கத்தில் நிகழும் சூர்ய விழாவுக்கு வருகின்றனர். சிலிக்கை ஏரியில் படகில் பயணிக்கின்றனர். சூர்ய விழாவுக்கு மக்கள் குவிவது இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் நிகழ்வது. ஒரு புதிய திருநாளில் மக்கள் தங்களைப் புதிதாக்கிக் கொள்ள விழைகிறார்கள். சென்றதினி மீளாது என்ற விவேகத்துடன் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற உணர்வு கொள்கிறார்கள். தங்கள் தடைகளை தயக்கங்களை எல்லைகளை உதறி விட்டு அமரத்துவத்தின் துளிகளை நோக்கி நகரத் தொடங்குகின்றனர். இந்திய மண்ணில் ஒரு எளிய திருவிழா கூட இவ்வண்ணமே வடிவமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் திருவாரூரில் ஆழித்தேர் காண சென்றிருந்தேன். யாக நெருப்பென கருணைக் கடலென தியாகராஜர் அமர்ந்திருந்தார். எங்கும் ஆரூரா தியாகேசா என்ற விளி. ஆரூரனை தந்தையாக பிள்ளையாக மனதில் வரித்து அனைவருமே ஆரூரா தியாகேசா என்றனர்.


சமவெளியில் நிகழும் விழாக்களினும் கடற்கரைகளில் நிகழும் விழாவுக்கு மக்கள் பெரிதாகத் திரள்வது ஒரு வழக்கம். அலைகடலின் ஈரக்காற்று மனித உள்ளங்களுக்கு அளிக்கும் உவகை அவர்களை மேலும் விழா மனநிலையுடன் இணைப்பது ஒரு காரணமாக இருக்கலாம். கடற்கரைக்கு உரிய சிறு வீதிகளில் இளநாகன் சுற்றி வருகிறான். கல் வீடுகள். கடலின் உப்புக்காற்றுக்கு கருங்கல்லே தாக்குப் பிடிப்பதால் எங்கும் கல்வீடுகள் நிரம்பியிருக்கின்றன.


கதிரெழுநகரில் இணைத்து யோசிக்க வேண்டிய இரண்டு கதைகள் ரிஷியசிருங்கனின் கதை மற்றும் கர்ணனின் தானத்தின் கதை. ரிஷியசிருங்கன் கடும் தவவாழ்வை மட்டும் அறிந்தவன். அன்ன தானமிடாததால் சாபமிடப்பட்ட நாட்டுக்கு விஷாலியால் அழைத்து வரப்பட்டு மழையால் அந்நாடு பொலிய காரணமானவன். அங்கம் நிலைபெற்றது ரிஷ்யசிருங்கனால். கதிரோன் தனக்கு தானமாக அளித்த பொற்செல்வத்தை அன்னதானத்தை தன் அறமாக மேற்கொள்ளும் பேரறத்தானிடம் அளிக்கிறான் கர்ணன். அங்க நாட்டின் மக்கள் கர்ணனை தங்கள் அரசனாக ஏற்பது என்பதுடன் இந்த இருகதைகளையும் இணைத்து வாசிக்கலாம்.


கர்ணன் அவன் அன்னையிடம் கேட்கிறான்.: ’’மாமனிதர்கள் என்பவர்கள் ஏன் கண்ணீர்விட நேர்கிறது?’’. ராதை சொல்கிறாள்: ‘’அவர்கள் மனிதர்களை விட மிகப் பெரியவர்கள் மைந்தா. மனிதர்கள் எலிகளைப் போல. வளைகளுக்குள் பிற எலிகளுடன் கூடியும் ஊடியும் வாழ்கிறார்கள். மாமனிதர்கள் மத்தகம் எழுந்த பெருங்களிறுகள். அவர்களுக்கு இவ்வுலகம் மிகச் சிறியது’’


கர்ணன் குறித்து மகாபாரத காலகட்டம் முதல் இன்று வரை பலவிதமாக தொடர்ந்து பேசப்படுகிறது. வெண்முரசு அவற்றை குறிப்பிட்ட விதத்தில் அடுக்கி ஒரு தெளிவான சித்திரம் உருவாக வழிசெய்கிறது. கர்ணனுக்கு தான் யார் என்பதில் ஐயம் இருக்கவில்லை. யாதவ அரசியின் முதல் கர்ப்பம் குறித்து பாரதத்தின் அரசியல்சூழ்கையாளர்கள் அறிந்திருக்கின்றனர். கர்ணன் அஸ்தினபுரிக்கு வருகிறான்.


கிருபரும் துரோணரும் அவனை ஏற்கின்றனர். ஷத்ரியர்கள் அவனை சூதன் என்கின்றனர். தான் சூதன் எனப்படுவதும் சூதப் பெற்றோர்களின் மகனாக நினைக்கப்படுவதுமே தன்னை வளர்த்து ஆளாக்கிய அதிரதனுக்கும் ராதைக்கும் தான் செய்யும் கௌரவம் என்பதால் அவனுடைய இறுதி மூச்சு வரை அதை அவர்களுக்கு அளிக்கிறான். பீமன் உனது குலம் என்ன என்று கேட்கும் போது தன்னைப் பெற்ற அன்னையாகிய குந்தியின் மாண்பை காக்கத் தொடங்குகிறான். அதையும் தன் இறுதி மூச்சு வரை காக்கிறான். கௌரவர்களின் தலைமையில் திரண்ட ஷத்ரியர்கள் பீஷ்மர், துரோணருக்குப் பின் கர்ணனின் படைத்தலைமையை ஏற்க நேர்கிறது. வாழ்நாள் முழுதும் தன்னை இகழ்ந்த ஷத்ரியர்களுக்காகக் களத்தில் போர் செய்கிறான் கர்ணன். அவர்களும் கர்ணனிடம் தானம் பெற்றவர்களே.


வளத்தை நலத்தை செல்வத்தை நாளும் நல்கும் கதிரவனின் விழாவில் தொடங்கி மானுடர்களில் கதிரவன் போல வாழ்ந்த கர்ணனின் கொடையின் தொடக்கத்தை உரைக்கிறது கதிரெழுநகர்.