Saturday, February 28, 2015

பூரிசிரவஸ்



Dear J
When I read Mahabaratham, I came across பூரிசிரவஸ் when he fight with Sathyaki.   Krishna ask Archun to kill பூரிசிரவஸ் because Sathyaki can't win him in a sword fight.

From that moment I want to know abt him but I can't get any info abt பூரிசிரவஸ்.   
Now I got all the info abt him through you.  
thanks a lot

 

Santhose Subu

மலைநிலம்



ஜெ,

வெண்முகில்நகரத்தில் முற்றிலும் புதிய நிலம் வரத்தொடங்கியிருக்கிறது. பாகிஸ்தானின் வடக்கே பலுசிஸ்தானில் உள்ள குளிர்ப்பாலை நிலம் என நினைக்கிறேன். பலுசிஸ்தான் தான் பழைய பால்ஹிகநாடு இல்லையா?

இதுவரை ஆப்கன் பாலை நிலம்[ காந்தாரம்] பாகிஸ்தான் பாலை[ சிபி] சிந்துமாகாணம்[சப்தசிந்து] கங்கைச்சமவெளி , யமுனைப்புல்வெளி எல்லாம் விரிவாகவே வந்துவிட்டன

வெண்முரசு நாவலின் சிறப்பே இந்த விரிவான நிலம்தான். வாசிக்க வாசிக்கத் தீராத நிலம்

ஜெயராமன்

சில அன்னையர்




குந்திக்கும் அர்ஜுனனுக்குமான உறவு சற்று வித்தியாசமானதாக பிரயாகையின் தொடக்கத்தில் சொல்லப்பட்டிருக்கும். குந்தி அர்ஜுனனை நெருங்க விடுவதில்லை. ஆனால் அடுத்தவர்களிடம் பேசும் போதும் அவன் மேல் ஒரு கண் இருக்கிறது. அவள் நகை அசைவுகளின் மூலமாய் அவன் எண்ணத்தை அறிகிறான் அர்ஜுனன். அர்ஜுனன் வார்த்தைகளுக்கு முகம் சிவக்கிறாள்.

இதே போல தான் சித்ராங்கதன் மீதும் சத்யவதிக்கு ஒரு விஷேச கவணம் இருந்ததாக ஞாபகம். இப்படி பட்ட உறவுகளை எப்படி புரிந்து கொள்வது. மகனின் மூலமாக அவனை அளித்த அவர்களின் விருப்பத்திற்குரிய ஆன் மகனை ரசிக்கிறார்களா?

ஹரீஷ்

குழும விவாதம்

கணிகர்


எனக்கு மஹாபாரதத்தில் கணிகன் எனும் பாத்திரம் உள்ளதா என்று எனக்கு உறுதியாக தெரியாது.

'கணிகா' என்றால் சொட்டு, ஒரு சொட்டு என்பதாக பொருள் என்று எனக்கு தெரிந்த கொஞ்சம் ஹிந்தி/ சந்ஸ்கிருதத்தில் இருந்து புரிந்து கொன்டது, தவறாகவும் இருக்கலாம். 
 
உதாரனம் பஜகோவிந்ததில் வரும் 'பகவத்கீதா கிஞ்சித கீதா, கங்கா ஜலலவ கணிகா பீதா' என்ற இடத்தில் கங்கையின் ஒரு சொட்டை பருகினாலும் என்று பொருள் படுவதாக சொல்லி செல்கிறது பஜகோவிந்தம்.

இங்கு கணிகன் அப்படியான பொருளில் பெயர் கொன்டதாக எடுத்துக்கொன்டேன்.

சொட்டு விஷம் ஆனாலும் பாலில் கலந்தால் அடையாளம் காண இயலாது, பருகவும் உதவாது.கணிகன் மறைவில் அமர்ந்து திருதராஷ்டிரன் காது பட பேசுவதையும் இதே பொறுளாக கொண்டேன்.

அவன் ஒவ்வொருவர் உள்ளும் உறையும் ஒரு சொட்டு, அவனை வீரியம் மிக விட்டுவிட்டால் சேர்ந்து நாமும் கெடுவோம்.ஜாக்ரதையாக உஷாராக இருந்து நமக்கும் உனர்துபவர் பீஷ்மர். யானை என இருந்தாலும் வாழைபழத்தினுள் ஊசி போல வந்த கணிகனை விட்டு விட்டவர் திருதராஷ்டிரன் - 
அவர் உனரும் தருனம் பான்டவர் இல்லை, ஆகையினாலே துயரில் உழலுகிறான்.

எனக்கு இப்படியான பொருளில் - கணிகன், சொட்டு பொல இருந்து உள் இருந்தே தூன்டி செல்லும் தூய விஷம்.செல்லுபடி ஆகும் இடத்தில் வீரியம் கொள்பவன்.

நன்றி
வெ. ராகவ்
 
அன்புள்ள ராகவ்

கணிகர் என்றார் [gaNikar] கணிப்பவன் என்று பொருள்

மகாபாரதத்தின் கதாபாத்திரம். ஆனால் மிகச்சிறிய கதாபாத்திரம். கணிக நீதி என சுருக்கமான ஒரு வடிவம் அதில் உள்ளது

ஜெ

குழும விவாதத்தில்...

வெண்முரசு தகவல்கள்

வெண்முரசில் நாவல் தொடரில் வரும் கதாபாத்திரங்கள், தெய்வங்கள் ஆகியவற்றின் பெயர்கள்

பிரயாகை 75 வரை எடுக்கப்பட்டுள்ளது.

கணிபொறி நிரல் எழுதி எடுக்கப்பட்டது. சில தவறுகள் இருக்கலாம். பல பெயர்கள் விடுப்பட்டிருக்கலாம்.

ஹரீஷ்


https://docs.google.com/document/d/1whmDwla1ExwpPsJihPDEendKWpcTv8PfY5Yur8CWaWI/pub

Friday, February 27, 2015

மனத்திரை ஓவியங்கள்



ஓவியங்கள் வரவில்லையெனினும் நான் என் மனதில் வரைந்து கொண்ட ஓவியங்கள் இவை.
வெண்முகில் நகரம் 4
1. கடலோர மனலில் பதிந்து கிடக்கும் ஜலஜையின் செம்பவளம்
2. நீரலை மாளிகை – இதில் சுவர்கள், பீடங்கள் என அனைத்தும் நீரலைகள். ஒரு கனவு மாளிகை.
3. பார்த்தனை ஆடிப்பிம்பமாக பார்க்கும் அணிசெய்துக் கொண்ட தருமன்
வெண்முகில் நகரம் 5
1. தருமனை குழந்தையை அழைப்பது போல இருகை விரித்து அழைக்கும் திரெளபதி
வெண்முகில் நகரம் 6
1. தருமன், விதுரர், திரெளபதி உரையாடல் – ஷாத்ரம் பொங்கும் தருமன்தான் இந்த ஓவியத்தின் மையம்
வெண்முகில் நகரம் 7
1. யானையைப் போல் மெதுவாக காலடிவைத்து வந்து வாயிலில் நிற்கும் பீமன்
2. மிருஷை, காருஷை, கலுஷை மூவரையும் அணைத்துக்கொள்ளும் பேருடல் கொண்ட பீமன்
வெண்முகில் நகரம் 8
1. பீமன் – திரெளபதி கங்கை நீர் விளையாட்டு. ஆடலின் ஒரு கணம் ஓவியத்தில் வரவேண்டும்.
வெண்முகில் நகரம் 9
1. பீமனை தன் மேல் ஏந்தி நான்காம் நிலா காணும் திரெளபதி
வெண்முகில் நகரம் 10
1. தருமன், துருபதன், அர்ஜூனன் உரையாடல். நாற்கர பீடம் மத்தியில்.
வெண்முகில் நகரம் 13
1. திரெளபதியின் இடையுடன் இடைசேர்த்து நிற்கும் அர்ஜூனன்
2. ஆடை அணிகலன்கள் சிதறிக் கிடக்க மஞ்சத்தில் சுருண்டு கிடக்கும் திரெளபதி. அவளை நோக்கும் அர்ஜூனன்
3. பளிச்சிடும் வாளால் அர்ஜூனனை வெட்ட விழையும் திரெளபதி
இளையராஜா

அறத்தராசின் இரு தட்டுகள்(வெண்முகில் நகரம் அத்தியாயம் பதினேழு)

அன்பு ஜெயமோகன்,


          சொல்லப்படாத ஒன்றால் நிறைந்திருந்த பதினேழாம் அத்தியாயத்தில் விறலி சொல்லும் கதையை முடிவுசெய்வதும், கேட்பதும் சகதேவன். அதுதான் அவனின் இயல்பு. சூதரைத் தவிர்த்து விறலியைப் பாடச்சொல்கிறபோதே அது ஒரு பெண்ணின் கதையாகத்தான் இருக்க வேண்டும் என ஊகித்தோம். பெண்மீனான விசாகத்தைத் தேர்ந்தெடுப்பவனும் அவனே; அதன் கதையைக் கேட்க விழைபவனும் அவனே. 


          வைகாசி விசாகத்தோடு தமிழ்க்கடவுள் முருகனும், கெளதம புத்தனும், ஏசுவின் பன்னிரெண்டு சீடர்களிலே ஒருவனான பிலிப்பும் தொடர்புபடுத்தப்படுகின்றனர். அது தொடர்பான மேலதிகத் தகவல்கள் அதிகமில்லை. தெரிந்திருப்பின் நீங்கள் விளக்குங்கள். நடுவுநிலை தவறாத பண்பைக் காட்டும் தராசு அம்மீனின் வடிவமாகச் சொல்லப்படுகிறது. அம்மீனுக்குரிய தேவர்கள் இந்திரனும், அக்னியும். 


விசாகத்தோடு இணைத்துச் சொல்லப்படும் கதைகளில் சிபியின் கதை நாமறிந்த ஒன்றாகும். ஒருநாள் சிபி மன்னனின் மடியில் புறா ஒன்று வந்து விழுந்து “என்னைக் காப்பாற்றுங்கள்” எனக் கதறுகிறது. அதனைத் துரத்தியபடியே வந்த கழுகு ”அரசே! அது நான் துரத்தி வந்த இரை அது. அதை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்” எனச் சொல்கிறது. சிபி மன்னன் இரண்டு தரப்புக் கருத்துக்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறான். இரண்டுமே நியாயம் என்பதை உணர்ந்து கொள்கிறான். அச்சமயம் கழுகு “புறாவுக்குப் பதிலாக உன் சதையைத் தருவதானால் அதை விட்டுவிடுகிறேன்” எனச் சொல்கிறது. கொஞ்சமும் யோசிக்காமல் சரி என்றபடியே தன்சதையை அறுக்கத் தயாராகிறான் சிபி. ஒரு தராசை எடுத்து வரச்சொல்லி ஒருதட்டில் புறாவை வைத்து, மறுதட்டில் தன் சதையை அறுத்து வைக்கிறான். எவ்வளவு சதை வைத்தாலும் தட்டுகள் சமநிலைக்கு வருவதில்லை. இறுதியின் சிபியே ஏறி தட்டில் நிற்க முயல்கிறான். அப்போது அவனைத் தடுக்கும் கழுகு ”சிபி, வேண்டாம். நான் இந்திரன். புறாவாக வந்த்து அக்னி. உம் நடுநிலைமையைச் சோதிக்கவே அவ்வண்ணம் வந்தோம்” எனச் சொல்கிறது. சிபி மன்னனின் புராணக்கதை விசாகமீனின் நடுவுநிலைமையை இன்றளவும் ஞாபகமூட்டிக்கொண்டிருக்கிறது.


சிபியின் கதையை நான் புராணத்திலிருந்து இறக்கிவந்து நவீனகாலத்தோடு இணைக்க முயல்கிறேன். ஆறாவது அறிவை சிபி எனக்கொள்வோம். புறாவை இயற்கையோடு இணைந்த வாழ்க்கையாகவும், கழுகை இயற்கைக்கு முரண்பட்ட வாழ்வாகவும் கருதுவோம். சிபியாக இருந்து கழுகிடமிருந்து புறாவைக் காக்காவிட்டாலும் பரவாயில்லை. கழுகுக்குப் புறாவைப் பலிகொடுக்காமலாவது இருக்கப்பார்ப்போம். ஏனென்றால், புறாவின் எடை மானுட சமூகத்தின் ஒட்டுமொத்த அளவைக் காட்டிலும் கூடுதலானது. அதனால் புறாவைப் பலிகொடுப்பதென்பது மானுட சமூகத்தையே பலிகொடுப்பதாகும். அறமெனும் தராசாகவே விசாகத்தை நான் பார்க்கிறேன். விசாகம் அறத்தை ஞாபகமூட்டும் பெண்மீன். அதற்கு இந்திரனும், அக்னியும் துணைநிற்கிறார்கள். கற்பனையென்றும், கதையென்றும் எளிதில் ஒதுக்கிவிட முடியாதவை புராணங்கள். அவை தடுமாறும் தனிமனிதர்களையும், தடம்மாறும் பொதுச்சமூகத்தையும் தொடர்ந்து தன் கதைகளால் சீர்படுத்த முயல்பவை. இங்கு ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்வோம். புராணங்கள் நீதிநூற்களன்று; அவை வாழ்க்கை நூற்கள். ஒருவன் எப்படி இருக்க வேண்டும் என ஆணையிடுபவை நீதிநூற்கள். ஒருவன் எப்படி இருக்க வேண்டும் அவனாகவே முடிவெடுக்கத் தூண்டுபவை புராணங்கள். அதைப்புரிந்து கொள்ள முதலில் அவற்றைச் சூழ்ந்திருக்கும் ‘புனிதப்பூச்சுகளை’ களைந்தாக வேண்டும்.


விறலி சொல்லும் ருசியின் கதையும் கிட்டத்தட்ட சிபியின் கதையைப் போன்றதுதான். ஒரே ஒரு வித்தியாசம். இந்திரன் பொன்வண்டு, காட்டுமான், அன்னம், சேவல், குயில் எனப் பலவடிவங்களில் வர.. அக்னி விபுலனாக வருகிறான்.   

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.

Thursday, February 26, 2015

உன்மத்தம்




அன்புள்ள ஜெயமோகன் அவர்களே,

19.02.15 அன்று வெளியான வெண்முரசு பகுதி. பக்கம் குறித்து, அடிக்கடிப் படித்து, நனைந்து, புணர்ந்து, அறிவிழந்து, ஆழ்ந்து, தியானித்து, பகுத்தறிந்து, வாழ்ந்து மரணிக்கத்தக்க இலக்கிய அடைவாகும். கதைத் தொடர்பில்லாதோரும் தனியாகப் படித்து இன்புறும் வகையில் உள்ள ஒரு கவிதைப் பிம்பமாகும். இதை எழுதுகையில் சற்று கட்டுக்குள் அடங்குமளவு மனப்பிறழ்வு கொள்வீரோ 
 
நன்றிகள்.
 
கமலக்கண்ணன்

வெண்முகில் நகரம்-19-வானந்தமான வடிவுடையாள்.



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

வெண்முகில் நகரம் என்று பெயர் இருந்தாலும் இது அதிகமாக சுடுகின்றது. பாரதி  “தீக்குள் விரலைவைத்தால் உன்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா” என்று சொன்னது இந்த நிலைதான் என்று நினைக்கின்றேன். தீக்குள் விரலை வைத்தால் வெந்துதானே போகும் எப்படி தீண்டும் இன்பம் தோன்றும் என்று நினைப்பதுணண்டு. அந்த கணத்தில் அந்த இன்பம் தோன்றி மறைந்துவிடும். மின்னல் சுட்டதுபோல என்று சொல்லலாம். வெண்முகில் நகரம் மின்னல் சுட்டதுபோல உள்ளது.

வெண்முகில் நகரம்-19க்கு எதுவும் எழுதவேண்டாம் என்று நினைக்கின்றேன். எழுதவேண்டாம் என்று நினைப்பதே ஒரு வருத்தமாக இருக்கிறது. என்ன எழுதவது? அது பெரும் வருத்தமாக இருக்கிறது. வருத்தத்தை எப்படி எழுதுவது. பெரிய இன்பம் என்பது கண்ணீர் உடன் சொல்லும் ஒன்றோ? கலப்பில்லாத சிரிப்பு என்பது கண்களின் கண்ணீருடன் வழிவதோ? உதட்டால் சிரிப்பது எச்சில் சிரிப்பு அதற்கு பெரும் புனிதம் இருக்கமுடியுமா?  வெண்முகில் நகரம்-19 எழுத்தில் இருக்கக்கூடிய ஒன்றல்ல அது வேறு ஒன்று.

சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம், கௌமாரம், சௌரம் என்று எல்லோரும் ஏதேதோ சொன்னாலும் இந்த ஆறுக்குள்ளும் சோதியே என்றும் துன்னிருளே   என்றும் சொல்லும்போது அந்த ஆறு மதங்களும் அழிந்து, சொல்லும் நாமும் இல்லாமல் ஆகிவிடுகின்றோம்.

பெண்கூட சோதி என்றும் இருளென்றும் நிற்கும் தருணத்தில் எல்லாவற்றையும் இல்லாமல் ஆக்கிவிடுகின்றாள். இந்த அற்புதம் திரௌபதியின் வழியாக விஸ்வரூபம் எடுக்கும்போது உலகம் மறைந்த நானும் மறைந்து அதுவாக மட்டும் நிற்கின்றேன். இதை எழுத்தில் வடித்த ஜெவுக்கு வணக்கம். இந்த மாபெரும் தரிசனத்தை சகாதேவன் காணும் அற்புதம் அழகு, திரௌபதி சகாதேவன் இதயத்தில் திருமுகம் வைக்கும் கணத்தில் அடைகின்றான். 

கண்களும் நிறங்களும் சந்திரநிறங்களும் 
கண்குளிர என்றன்முன் சந்தியாவோ-என்று அருணகிரி நாதசுவாமிகள் தேடும் முருகபெருமன் இதயத்தில் பதம்வைக்கும் நாளில் தோன்றும் அருள்வெள்ளம் எப்படி இருக்கும் என்று காட்டிப்போகும் பிரபஞ்ச தரிசனம். 


நாடும் பொருட்சுவை சொற்சுவை
   தோய்தர நாற்கவியும் 
பாடும் பணியில் பணித்தருள்
   வாய் பங்கய ஆசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே
   கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே 
    சகல கலாவல்லியே என்று பாடுகின்றார் குமரகுருபரர் ’சுவாமிகள். 

சகாதேவன் நெஞ்சை பங்கய ஆசனமாக்கி அதில் திரௌபதியை ஏற்றி வைக்கின்றீர்கள் ஜெ. திரௌபதி தனது மலர்குழலை ஐந்து பிரவாக்கி பிண்ணிமுடித்திருந்தாள் என்பதை இன்று எண்ணிப்பார்க்கையில் சகாதேவன் அடையும் பிரபஞ்ச தரிசனமும் அதன்மூலம் எழுந்துவரும் சொற்சுவை பொருட்சுவை கலந்துவரும் கவிக்கணத்தை நினைக்கும்போது நெஞ்சம் இனிக்கிறது.  

அபிராமிப்பட்டர் அன்னை அபிராமியை “ஆனந்தமாய்” எனத்தொடங்கும் அபிராமி அந்தாதியில் “வானந்தமான வடிவுடையாள்“ என்கின்றார். இந்த அபிராமி அந்தாதிப்பாடலை ஒருநாள் நடைப்பயணத்தில் பாடிப்பார்த்தப்படி பூமியையும் வானத்தையும் அண்ணாந்துப்பார்த்தேன். மாகாளி என்று சொல்கின்றார்களே அது இதுதானா என்று திகைத்து பம்பி பதுவிசா நடந்தேன். நான் ஒரு மண்துகள்கூட இல்லை. அதற்குமேல் நினைக்க எதுவும் தெரியவில்லை.  மாகாளியை ஒரு சிமிழில் குந்தவைப்பதுபோல்தான் நான் பூமியையும் வானத்தையும் பார்த்து அளவிடுவது என்று இன்று அறிகின்றேன். வெண்முகில் நகரம்-19 “வானந்தமான வடிவுடையாள்” என்பதற்கு ஒரு சொல்லோவியம் தீட்டிச்செல்கின்றது.

கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே வெளிமுதற் பூதங்களாகி  விரிந்த அம்மே
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே

வானந்தமான வடிவுடையாளை எனது சிற்றறிவுக்கு தகுந்தப்படி பகுத்தும் தொகுத்தும் பார்க்கின்றேன். அவளும் எனது அறிவு அளவுக்கு அளவாகுவதுதான் அதிசயம். ஆனால் அவள் அளவுக்குள் அடங்கா அளவுள்ளவள், எண்ணில் ஒன்றும் இல்லாத வெளியானவள்.
அன்னை, சகோதரி, தோழி, காதலி. மனைவி, மகள் என்று அவள் என்னறிவுக்கு தன்னை அளவாக்கிக்கொள்கின்றாள் ஆனாலும் அவள் வானந்தமான வடிவுடையாள். எழுதல், புலரி,காலை,மதியம், மாலை, இரவு, அமைதல் என்று இந்த பதிவு ஒரு அளவுக்குள் அளவானாலும் அதற்கும் அப்பால் பிரபஞ்சமாகி நிற்கின்றது வானந்தமான வடிவுடையாள் என்று.

இலக்குவன் கோடு கிழித்து கோட்டுக்குள் உள்ளே நிறுத்திய சீதையின் அளவு மிகமிக சிறியது. கோட்டுக்குவெளியே இராவணன் இடம் இருந்த சீதை அள்ளவா பெரியது. அதுவல்லாவா இராவணை வந்து அள்ளி செல்லச்சொன்னது. இலக்குவணன் கோடுகிழித்து நிறுத்திய சீதையும், இராவணன் கொண்டு சென்று சீதையும் சிறிதாக்கும் அளவல்லவா இராமனுடன் இருந்த சீதையின் வானந்தமான வடிவு. அதுவல்லவா ஒற்றை வில்கொண்டு ஒரு ராஜியத்தை எதிர்த்தது அழித்து. அந்த வானந்தமான வடிவுடையவள் வால்மிகி முனிவனின் நெஞ்சத்தில் கால்வைத்து நிற்கும் காட்சி ராமன் கண்ட அளவைவிட எத்தனை எத்தனை பெரியது. இந்த நிலைகூட அன்னையின் அளவாகுமா? அளியேன் அறிவு அளவிற்கு அளவாகும் அதிசயம்தான் அது. 

திரௌபதியை, பெண்ணாகி வந்த ஒரு துளி பேரன்னையை காமம் என்ற ஒரு கொதிகலத்திற்குள்ளோ, காதல் என்ற பூவிதழுக்குள்ளோ அடைத்து வைக்கும் எளிமையைத்தாண்டி பிரபஞ்சமாக்கி விரித்துவைத்து வண்ணம் செய்யும் வெண்முகில் நகரம்-19 ஒரு வைரக்கடல். 

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.    

அகந்தையால் சூழும் ஆணவ இருள்(வெண்முகில் நகரம் அத்தியாயம் பதினெட்டு)



அன்பு ஜெயமோகன்,
         
பதினெட்டாம் அத்தியாயத்தில் சகதேவன் ஆணவத்தைக் கண்டு அஞ்சி நடுங்கும் சமயத்தில் நானும் அதிகம் நடுங்கினேன். ஆணவத்தின் நிறம் அடர்கருப்பு. அதன் உருவத்தை நாமறிந்து கொண்டுவிடவே முடியாது. அதன் பரவலும் அத்தகையதே. ஆணவத்தின் விதை நிமிடத்திற்குள்ளாக மரமாகும் வல்லமை கொண்டது. எப்பேர்ப்பட்ட அறிவாளியானாலும் ஆணவத்திடமிருந்து தப்பிவிட முடியாது. உலக வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் ஆணவமே இயக்க்கிக் கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன். அதனால்தான் உலக வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் அறத்தை வலியுறுத்த வேண்டிய தேவையும் எழுகிறது.

நிமித்தகனான சகதேவன் வாழ்வின் பொருளின்மைக்கும், நிலையின்மைக்கும் கூட அஞ்சாமல் ஆணவத்துக்கு அஞ்சுகிறான். “நான் மானுடரின் உள்ளே கொந்தளிக்கும் ஆணவத்தை அஞ்சுகிறேன். காமம், குரோதம், மோகம் என்கிறார்கள். அவையெல்லாம் எளியவை. அத்தனை விலங்குகளுக்கும் உள்ளவை. ஒவ்வொன்றையும் சென்று தொடும் ஆணவமே அவற்றைப் பேருருக்கொள்ளச்செய்கிறது. குருதிவிடாயெழுந்த பெருந்தெய்வங்களாக்குகிறது” எனும் சகதேவனின் குரலில் மிகை துளியும் இல்லை. ஆணவத்தின் மூலங்கள் எவை, அது தோன்றும் கணம் எது என்பன போன்ற கேள்விகளுக்கு இதுகாறும் முறையான பதில்கள் இல்லை. என்றாலும், காட்டுத்தீயான ஆணவத்தைத் தூண்டும் சிறுபொறியை ஒவ்வொருவரும் சுமந்தே திரிகிறோம். அப்பொறியை வெளியேற்றும் வகையறியாமலும், அதன் தாக்குதலில் இருந்து மீளும் முறையறியாமலும் தவித்துக் கொண்டே இருக்கிறோம்.

சைவ சித்தாந்தத்தில் குறிப்பிடப்படும் மும்மலங்களில் முதன்மையானது ஆணவம். முதன்முதலாக சைவம்தான் எனக்கு ஆணவத்தைக் குறித்த தெளிவான அறிமுகத்தைக் கொடுத்தது. அச்சமய நெறியில் ஆணவத்தை இருளுக்குக் கூட ஒப்பிட்டுச் சொல்ல மாட்டார்கள். இருளைவிடக் கொடியது என்றே குறிப்பிடுவார்கள். “இருள் தன்னிடம் இருக்கும் பொருட்களை மறைத்துக் கொண்டு தன்னைக் காட்டிக்கொள்ளும். ஆணவம் தன்னையே காட்டிக் கொள்ளாது” என்பதே அச்சமயத்தின் பார்வை. அளவுகடந்த ஆணவம் கொண்டவன் நிச்சயம் அறம் தவறியவனாகவே இருப்பான் என்பதும் அச்சமயம் தரும் செய்தி.

இங்கு ஆணவத்தை அழிக்கவே முடியாதா எனும் கேள்வி வருவது இயல்பு. நிச்சயம் நம்மால் ஆணவத்தை ஒழித்துவிட முடியாது. வேண்டுமானால், ஆணவத்தை உருமாற்றலாம். கந்தபுராணத்தின் அடிப்படையே அதுதான். ஆணவத்தின் உருவமான சூரபன்மனை முருகன் அழிப்பதில்லை; மாறாக, உருமாற்றுகிறார். எதிர்மறையான ஆணவத்தை நேர்மறையானதாக மாற்றிக்கொள்ளப் பார்ப்பதே அதிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி. கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத்தைக் கொண்டு சைவ சித்தாந்தத்தை நம்மால் எளிதில் விளங்கிக்கொள்ள இயலும். மும்மலங்களில் முதன்மையான ஆணவத்தின் குறியீடாகவே சூரபன்மன் சுட்டப்படுகிறான்.

சூரபன்மனைக் குறித்த குறிப்புகளில் திருமுருகாற்றுப்படை தரும் குறிப்பு முக்கியமானது. “இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை” எனச் சூரபன்மனை அது சுட்டுகிறது. ஆணவம் என்பது தனக்குள் நேர்மறை, எதிர்மறை எனும் கூறுகளைக் கொண்டே அமைந்திருக்கிறது என்பதாகவே இதை நான் விளங்கிக்கொள்கிறேன். அதிகாரத்தின் ருசிக்குப் பழகிப்போகும் சூரபன்மன தன் இயல்பிலிருந்து விலகுவதோடு தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் அவ்வாறே இருக்குமாறு தூண்டுகிறான். ‘உலகை வெல்லும் அதிகார’ ஆணவத்தால் ‘தான் யார்’ என்பதை மறந்து ‘அறத்தை’யே பயமுறுத்துகிறான். அதனால்தான் அவன் மகனான பானுகோபன் சொல்லும்போதும் அவன் கேட்பதில்லை.

சூரபன்மனை ஆணவம் எனக்கொண்டு அவனை முழுக்க எதிர்மறையானவன் எனக் கந்தபுராணம் சொல்லவில்லை. அவன் ’சிவனிடமே வரம் வாங்கியவன்’ எனும் நேர்மறையான தகவலும் சொல்லப்படுகிறது. சூரபன்மன் மாயைக்குப் பிறந்தவன். மாயை என்பதை நாம் புலனின்பங்களுக்கு ஆட்பட்ட வாழ்வாக்க் கொள்ளலாம். கொஞ்சம் நுட்பமாகப் போனால் ஆணவத்தின் மூலமாக நமது ’நான் எனும் அகந்தை’ இருப்பதைக் கண்டுகொள்ளலாம். முதலில் சூரபன்மனிடம் முருகன் ச்மாதானம் பேசிப்பார்க்கிறார். எவ்விதத் தூதும் எடுபடாமல் போகவே முருகன் நேரடியாகக் களத்தில் இறங்குகிறார்.

போர்க்களத்தில் கூட முருகன் சூரபன்மனிடம் சமாதானம் பேசிப்பார்க்கிறார். அவனோ கேட்கவே மறுக்கிறான். கடலாய், இருளாய் மாறி மாறி முருகனுடன் சண்டை போடுகிறான். ஒருகட்டத்தில் அவனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. என்றாலும், அவன் சரணடையத் தயாராவதில்லை. ‘ஆணவம் தன்னைக் காட்டிக் கொள்ளாது’ என்பது நுட்பமாக உணர்த்தப்படும் தருணம் அது. முருகனுக்கும் சூரனுக்கும் இடையே பதினெட்டு ஆண்டுகள் போர் நடப்பதாகக் கந்தபுராணம் சொல்கிறது. இராமாயண மகாபாரதப்போர்கள் மிகக்குறைந்த நாட்களே(இராமாயணம் – 18 மாதங்கள், மகாபாரதம் – 18 நாட்கள்) நடந்திருக்க கந்தபுராணப்போரின் வருடக்கணக்கு பிரமிப்பைத் தருகிறது. ஆணவத்தை எளிதில் உருமாற்றிவிட முடியாது என்றும் அது செய்தி சொல்கிறது.  

தன் படைபலத்தை முற்றிலும் இழந்து கடலுக்கடியில் தலைகீழ் மாமரமாக நிற்கும் சூரபன்மனை முருகனின் வேல் இரு துண்டுகளாக்குகிறது. ஒரு துண்டை மயிலாகவும், மற்றொரு துண்டை சேவலாகவும் மாற்றித் தன்னருகே வைத்துக் கொண்டதாகவும் கதை நீள்கிறது. சூரபன்மனுக்குள் ’பொய்அகந்தை’ மயிலும் ‘மெய்அறிவு’ச் சேவலும் இருந்திருக்கின்றன. மெய்அறிவைத் தூண்டி இருந்தால் சூரபன்மன் நிச்சயம் பொய்அகந்தைக்குள் அகப்பட்டுக்கொண்டிருக்க மாட்டான். நாம் காணும் புற உலகில் ஒவ்வொரு கணமும் நம்மை மயக்கித் திசை திருப்பும் மயிலாகவே இருக்கிறது. ‘நான் யார் தெரியுமா’ எனும் அகந்தை கொள்பவன் அதன்பிடிக்குள் தன்னைத் தொலைத்து விடுகிறான். ‘நான் யார்’ என மெய்யறிவு தெளிபவன் அதன்பிடிக்குள் சிக்காமல் நழுவிவிடுகிறான்.

’தர்மத்தின் மேல் இச்சையின் கொடி ஏறிவிட்டது’ அஜபாகனின் முதல்வரி சூரபன்மனைக் குறிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. “வெற்று இச்சை வீரியத்தை கோடைகால நதிபோல மெலியச் செய்கிறது” எனும் இரண்டாவது வரி அவனுக்குள் இருந்த பக்தி அகந்தையால் மாசுறும் சூழலைச் சொல்வதாகப்படுகிறது. “பலமிழந்த விதைகளை மண் வதைக்கிறது” எனும் மூன்றாவது வரி அவனின் அகந்தையால் விளைந்த கொடூரங்களைச் சொல்வதாகப் படுகிறது. ”வடதிசையில் எரிவிண்மீன் உதித்திருக்கிறது” எனும் நான்காவதுவரி அவனை எதிர்கொள்ளப் புறப்பட்ட முருகனைச் சுட்டுவதாகவே படுகிறது. ”உதித்தனன் உலகம் உய்ய” எனும் கந்தபுராணப்பாடல் வரியும், ‘முதுமீன்’ எனும் அருணகிரிநாதர் சொல்லும் நம் கவனத்துக்குரியவை.

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.

Wednesday, February 25, 2015

வெண்முகில் நகரம்-18-பிரபஞ்ச தூய்மை



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

ஜத்குரு ஜக்கிவாசுதேவ் “மற்ற சீவன்களுக்கு கீழ்மேல் மேல் கோடு வரையருக்கப்பட்டு உள்ளது அவைகளின் வளர்ச்சி அதற்குள்தான், ஆனால் மனிதனுக்கு கீழ்கோடு உள்ளது மேல்கோடு இல்லை அவன் எவ்வளவு வேண்டும் என்றாலம் வளரலாம்” என்று சொல்வார். தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் இவர்களைப்பார்க்கும்போது அதுவும் திரௌபதியுடன் வைத்துப்பார்க்கும்போது இவர்கள் எத்தனை எத்தனை விதமாக எத்தனை எத்தனை உயரம் வளர்ந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அதை வளர்த்திக்காட்டி வென்று செல்கின்றீர்கள் ஜெ. அதற்கு முதல் அன்பு வணக்கம். 

ஒரு மனிதன் எவ்வளவு உயரம் வளரனும் என்று ஒரு கேள்விக்கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சகாதேவன் அளவுக்கு என்று சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன். வெண்முகில் நகரம்-18ல் சகாதேவன் வளர்ச்சி அகத்தை அடைத்துவிட்டது. ஒருமனிதன் எத்தனை உயரம் வேண்டும் என்றாலும் வளரலாம். எவ்வளவு அகலம் வேண்டும் என்றாலும் பரவலாம் ஆனால் அகத்தை நிறைப்பது என்பது முடியாத விசயம். சகாதேவன் அதை இன்று நிகழ்த்திக்காட்டுகின்றான். தன்னை விட்டுக்கொடுப்பவன் மானிடரில் தெய்வம்தான் தியாகம் செய்யாமலே ஒரு தியாகம் அதுவும் முகம் சுளிக்காமல் இன்னும் என்னவேண்டும் உனக்காக ஒரு ஏவளனாய் காத்திருக்கிறேன் என்ற அகத்தோடு இருக்கும் மனிதன் முன் ஆனவம் எல்லாம் அடிப்பட்டு தவிடுபொடியாகிவிடுகின்றது. அந்த ஆணவம் அழியும் இடத்தில் எல்லாம் அந்த மகாமனிதன் ஏறி உட்கார்ந்துக்கொண்டுவின்றான். 

இந்த அத்தியாயத்தில் சகாதேவன் ஆணவம் பற்றிப்பேசுவதும் அந்த ஆணவத்தை தன்னிடம் அண்டவிடாமல் செய்வதும் வாழ்ந்துக்காட்டுகின்றான் என்று சொல்லலாம். திரௌபதியை பார்க்கநினைக்கும் மனதை மறைக்கும் இடத்தில் இருந்து தான் எழுந்து வந்தவன் என்பதை கடைசியில் நிறுபிக்கின்றான்.சேத்தில் இருந்து முளைக்கும் செந்தாமரை. 

காதல் திருமணம் செய்துக்கொண்டவர்களும் இருக்கலாம், குடும்பம் பார்த்து திருமணம் செய்துக்கொண்டவர்களும் இருக்கலாம். இல்லறத்தில் எதிர் பார்ப்பு என்பது அல்லது தேவை  என்பது காதல் மட்டும்தான். காதலிக்கின்றேன் என்பர்களிடம்கூட காதல் இல்லை என்று உணரும் தருணம் வரும். காதல் எந்த சட்டத்திட்டங்களுக்கும் வடிவங்களுக்கும் அகப்படும் ஒன்று அல்ல. அது எப்ப வந்தது எப்படி வந்தது எப்படி இருக்கும் என்று முழுகாதலில் மூழ்கிருக்கும் தருணத்தில்கூட அறியமுடிவதில்லை. அந்த கணம் அகன்று வெற்றிடம்தோன்றும்போது அது எத்தனை மென்மையாய் கனமாய் இருந்தது என்பதை மட்டுமே அறியமுடியும். அந்த மென்மையை கனத்தை தேடிக்கொண்டே இருப்பதையே காதலிக்கிறேன் என்று சொல்லிச்செல்வதுண்டு. அதுதான் காதலா? அதற்கும்மேல். 

காதல் என்பது ஆணுக்கு பெண்ணாக இருப்பதா? பெண்ணுக்கு ஆணாக இருப்பதா? அதற்கும்மேல..தெய்வமாக இருப்பது, பெற்றவராக இருப்பது, நட்பாக இருப்பது,அறிவு ஆற்றல் கலை, கவிதையாக இருப்பது, புன்னகையாக இருப்பது, கண்ணீராக இருப்பது, அழகாக இருப்பது, அழகே இல்லாமல் இருப்பது, மூத்தவராக இருப்பது, இளையவராக இருப்பது, தனியாக இருப்பது, ஒட்டுமொத்த உயிர்குலமகா இருப்பது, கொடையாளியாக இருப்பது, யாசகனாக இருப்பது, நானாக இருப்பது, நான் இல்லாமல் இருப்பது, செத்தும் வாழ்வது, வாழ்ந்துக்கொண்டே சாவது என்று போய்கொண்டு இருக்கும் ஒரு அகம் அடையும் முழுமை இன்பம் காதல். இதை உண்டாக்கவும் முடிவதில்லை, உண்டானால் தடுக்கவும் முடிவதில்லை. இப்படி எதேதோ சொன்னாலும் சொல்லமல் இருக்கும் ஒன்று காதல். 

தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன் என்று தொடங்கி இதோ இன்று சகாதேவன் இடம் வந்து நிற்கும் திரௌபதி சகாதேவன் நெஞ்சில் ஏன் தலைவைத்தாள்?.  அது காதல்..காதல்..காதல்.

சகாதேவன் நெஞ்சில் அவள் தலைவைத்தபோது தன்னை குழந்தை என்று உணர்ந்தாளா? அவன் தன்னை தாய் என்று உணர்ந்தானா? இருக்காலம். அவர்கள் அப்படி உணர்ந்தாள் அது அவர்கள் அறிவு இயங்கும் எல்லை மட்டும்தான் ஆனால் அறிவு இயங்கும் எல்லைக்கு அதற்கும் அப்பால் அல்லவா காதல் உள்ளது.காதல் காமத்தை ஆண்பெண் பேதத்தை ஒற்றை நொடியில் அழித்து மிளிர செய்து செல்கின்றது.

பிரபஞ்ச தூய்மையின் ஒரு துளி காதல் என்று பெயர் எடுத்துவந்து ஆண் பெண்ணுக்குள் ஒரு காவியத்தை செய்துவிட்டு செல்கிறது. அது இறைவன் மகிமையில் ஒன்று. அந்த உண்மையின் மகத்துவத்தை உங்கள் எழுத்தில் சகாதேவன் திரௌபதியிடம் உணர்கின்றேன் ஜெ. நன்றி

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.

ஓட்டத்தை மறந்த குதிரைகள்(வெண்முகில் நகரம் அத்தியாயம் பதிநான்கு)







அன்பு ஜெயமோகன்,

தாமரை மலரின் ஒளிபொருந்திய அழகு கொண்ட நகுலனின் அறிமுகம் இனிதே நிகழ்ந்திருக்கிறது. பெண்களே பொறாமைப்படும் அழகு கொண்டவன் அவன். குதிரைகளுக்கும் அவனுக்குமான உறவும் விசித்திரமானது. ஒருவேளை அவன் தன்னைக் குதிரையாகவே கருதுகிறானோ எனும்படியே குதிரைகளோடு பழகுகிறான். குதிரைகள் அவனின் தொடுதலுக்கு ஏங்கி நிற்கும் காட்சியில் அவை குதிரைகளாகத் தெரிவதில்லை. பேரழகன் நகுலனின் தொடுதலில் சிலிர்க்க விரும்பும் இளம்பெண்களாகவே தெரிகின்றன. ஒருவேளை நகுலனும் குதிரைகளை அவ்வண்ணமே அணுகுகிறானோ?
         
குதிரை பாலூட்டி வகையைச் சேர்ந்த உயிரினம். பாலூட்டிகளில் பெரிய கண்களைக் கொண்டிருப்பவை குதிரைகளே. அவற்றால் இரண்டு நிறங்களை மட்டுமே பார்க்க முடியும். மிகச்சிறுபூச்சி ஒன்று உடலில் அமர்ந்தால்கூட அவை கண்டுகொள்ளும். பிடித்தமான தீனியைத் தேர்ந்தெடுத்து உண்ணுமளவு சுவைத்திறன் கொண்டவை. குதிரைகளின் குணங்களோடு பெண்களின் குணங்களைப் பொருத்திப்பார்ப்போம். பாலூட்டிகளான பெண்கள் கண்களாலேயே பிறரை ஈர்க்கும் இயல்பு கொண்டவர்கள். பெரும்பாலும் பெண்கள் பிறரை நல்ல அல்லது கெட்ட எனும் கண்ணோட்டத்திலேயே அணுகுபவர்கள். தொடுதலைக் கொண்டே தொடுபவரின் மனநிலையைக் கண்டுகொள்ளும் திறன்கொண்டவர்கள். தங்களுக்குப் பிடித்தமான சுவையை ஒருபோதும் அவர்கள் விட்டுக்கொடுத்துவிடுவதில்லை. குதிரைகளுக்கும் பெண்களுக்கும் பொருந்திப்போகும் மற்றொரு முக்கிய அம்சம் கூந்தல். பாய்ந்து செல்லும் குதிரையொன்று ஒரு பெண்ணின் சுற்றிச்சுழன்றாடும் நாட்டியத்தையே நமக்கு நினைவூட்டுகிறது.
         
தந்தை வீட்டிலிருக்கும் வரை பெண்களுக்கு ஆண்கள் மீது அன்பே மிகுந்திருகிறது. ஏனென்றால், அவர்களின் துள்ளலை தந்தையர்கள் வெகுவாக ரசிப்பதோடு ஊக்குவிக்கவும் செய்கின்றனர். கணவன் வீட்டுக்குச் சென்றவுடன் ஏனோ அவர்களுக்கு ஆண்கள் மீது சொல்லவொணா வெறுப்பு வந்துவிடுகிறது. அதற்குக் காரணம் பெண்களின் துள்ளலை கணவர்கள் கண்டிப்பதே. மேலும், ’பெண்களுக்குரிய இலக்கணம்’ என ஒரு முகமூடியைத் திணித்தும் விடுகிறது புகுந்த வீடு. “மணமான பெண் தன் தந்தையில் இல்லத்தில் அயலவள்” எனும் விதுரரின் கூற்றில் என் கருத்து உறுதிப்படுவதாகவே நம்புகிறேன்.
         
குதிரைகள் பெரும்பாலும் அவற்றின் உரிமையாளர்களுக்குக் கட்டுப்பட்டவை. பெண்களும் நம் சமூகத்தில் அவ்வாறே. அவர்களுக்கான மரியாதையும் அத்தகையதே. ஓட்டத்துக்கு அடையாளமான குதிரையைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் மூடசெயல் போன்றே திருமணத்தைப் பார்க்கிறேன். திருமணத்துக்கு முன்பிருக்கும் பெண்ணின் உற்சாகத்தில் பாதியளவு கூட திருமணத்திற்குப் பின்பு அவளிடம் இருப்பதில்லை. காலப்போக்கில் அவள் தன் ஓட்டத்தை மறந்தவளாகிறாள். பிறரின் கட்டளைப்படி நடக்கத் துவங்கும் போலியாகிறாள். அது அவளாகத் தேடிக்கொண்டதில்லை. ‘சமூக ஒழுக்கம்’ எனும் போர்வையில் நாம் திணித்தது. பெரும்பாலும் ஆண்களுக்கான ‘சமூக ஒழுக்கம்’ அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படுவதில்லை என்பதை எவ்வகையில் சேர்ப்பது?

தந்தை வீட்டில் இருக்கும் பெண், கணவன் வீட்டில் இருக்கும் பெண், மகன் வீட்டில் இருக்கும் பெண் என பெண்ணின் வாழ்க்கை மூன்றுகட்டங்களில் நிகழ்கிறது. ஏனோ சதுரங்கத்தில் குதிரைக்காய் மூன்று கட்டங்கள் நகர்த்தப்படுவது இங்கு நினைவுக்கு வருகிறது. இரண்டு கட்டங்கள் கிடையாக ஒரு கட்டம் செங்குத்தாக அல்லது இரண்டு கட்டங்கள் செங்குத்தாக ஒரு கட்டம் கிடையாக அக்காய் நகர்த்தப்படும். தந்தை, கணவன் மற்றும் மகன் வீட்டில் இருக்கும் பெண்ணின் வாழ்க்கையும் அப்படியாகத்தான் நகர்த்தப்படுகிறதோ என்றும் தோன்றுகிறது.

‘கற்பு’ எனும் சொல்லை மட்டுமே கொண்டு பெண்ணை அளவிடும் அபத்தங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்களைப் போகப்பொருட்களாக மட்டுமே முன்வைக்கும் ஊடகங்கள் முன்னைக் காட்டிலும் பெருகி இருக்கின்றன. பாலியல் வக்கிரங்களுக்கு சிறுமிகள் பலியாகும் கொடூரங்களும் அரங்கேறுகின்றன. பள்ளி மாணவிகளை ஆசிரியரே பாலியல் தொந்தரவு செய்யும் கேடுகளும் நடந்தேறுகின்றன. பெண்ணைத் தெய்வமாகக் கொண்டாடிக்கொண்டே அவளை மனதாலும் உடலாலும் கற்பழித்துக் கொண்டே இருக்கும் சமூகத்தில் நாமும் ஒருவர்தான் என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும்.  

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம். 

Tuesday, February 24, 2015

ஆறாவது காதலன்



அன்புள்ள ஜெ,

மிகச் சரியாக அந்த குறிப்பைத் தவற விட்டிருக்கிறேன். மிகத் தெளிவாகவே "மண்டைக்கலம் இரண்டேந்தி திசையாடை அணிந்து தனித்தமர்ந்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். உண்மையில் திசையாடை என்ற வார்த்தையில் முழுவதுமாக தோய்ந்து விட்டேன். திசைகளையே ஆடையாக அணிந்தவன். ஆடை அற்றவன், திக் அம்பரன். அதில் அந்த மண்டைக்கலம் என்ற குறிப்பை தவற விட்டுவிட்டேன். அதனாலேயே அந்த அத்தியாயத்தை சகதேவனின் அனுபவமாகக் கருதி விட்டேன். 

ஆனால் அது அந்த சாக்தன் என்ற அந்த குறிப்பு அந்த அத்தியாயத்தை மேலும் துலக்கமாக்குகிறது. இன்னும் குறைந்த பட்சம் இரு வாரங்களுக்கு இதைப் பற்றி தேடிக் கொண்டிருக்கப்போகிறேன். முன்பு தாந்த்ரீக மரபைப் பற்றித் தேடப் புகுந்தால் ஏதோ வழி தெரியாத காட்டுக்குள் நுழைந்த அனுபவம் வரும். இப்போதோ ஓர் கைவிளக்கு கிடைத்திருக்கிறது. நுழைந்து விட்டேன்.

பல்லுருக்காட்டியைப் (கலைடாஸ்கோப்பை இவ்வாறு சொல்லலாம் தானே) போல படிக்க படிக்க ஒவ்வொரு பொருளை, திறப்பை அளித்துக் கொண்டே செல்கிறது இந்த அத்தியாயம். திரும்பிப் பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. அன்னை விழியின் துவக்கத்தில் நிறைந்த நெல்லி மரத்தின் பின்னாலிருந்து பார்க்கும் ஒருவனாக, ஊருக்கு வெளியில் இங்கு நடப்பவைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போன்ற, அங்கு பார்வையாளர்களாக இருந்த ஜிவ்ஹன் என்ற நரியால் "நம்மவன்" என்று உணரப் பட்ட அந்த சாக்தன், திரௌபதியின் திருமணத்தின் அனைத்துக் கட்டங்களிலும் அவன் வருகிறான். அனைத்து போட்டியாளர்களும் அறிமுகமாவதற்கு முன்பே முதலில் அவன் தான் அறிமுகமாகிறான். திருமணம் முடிந்த பின் கடைசியாக வருகிறான், அவளிடும் இடுகை ஏற்க வந்திருப்பதாக சொல்கிறான். அவனுக்குத் தான் தேவி தன் தலையில் சூடிய செங்காந்தள் மலர் எடுத்து கொடுக்கிறாள். அங்கும் அவன், "அன்னை வாழ்க! அவள் கொள்ளப்போகும் பலிகளால் இப்புவி நலம் கொள்க!" என்று சொல்கிறான். இதோ அனைவரும் ஐந்து வழிகளில் அவளை அறிந்த பிறகு ஆறாவதாக அவனும் அவனின் வழியில் அறிந்து தானே ஆக வேண்டும். எல்லாம் தொடர்புற்று ஓர் முழுமையை, வடிவை அடைந்து விட்டது.

அன்புள்ள ஜெ, நாமறிந்த ஞானம் எல்லாம் இதுவரையிலுமிருந்த மானுடம் என்னும் உணர்வை மீறி மீண்டும் தூய விலங்கு தன்மையை அறிவதற்குத் தானா? நம்மைச் சுற்றி எழுந்த இத்தனைக் காவியங்களும், இத்தனை தரிசனங்களும் அந்த எதார்த்தத்தை உன்னதமாக உணரத்தானா? அறிவால், விடுதலையால், கீழ்ப்படுத்தலால், இணையாதலால், அரவணைப்பால் அறிந்ததை விட, அச்சத்தால், காத்திருப்பதால், வலியால் உணரும் தேவியை, அழகிலும், நளினத்திலும் மட்டுமல்லாமல் அழிவிலும், கழிவிலும், அருவருப்பிலும் உணரும் அந்த நிலை தான் மானுடம் கொள்ளச் சாத்தியமான உச்ச நிலையா? நினைக்க நினைக்க நிலையழிகிறது. உங்களின் நிலையழிவையும் உணர முடிகிறது. இன்னும் இன்னுமென அறிய மனம் ஏங்குகிறது. ஆனால் ஞானத்தின் முன் நிற்கும் போது வரும் பேரச்சம் என்னைச் சூழ்கிறது. 

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்

ஐந்து



ஜெ,

வெண்முகில் நகரம் 19 ஆம் அத்தியாயம் ஒரு பெரிய ஆச்சரியம். அதில் ஒரு கட்டற்ர மொழி உள்ளது . ஆனால் ஏதேதோ வந்து விழுகிறது. முதலில் அது ஐந்து வேளை பூசை. ஐந்து காலங்களிலே நிகழ்கிறது. ஐந்து கூந்தல் கொண்ட தேவிக்கான பூசை

பஞ்சமகாரம் எனப்படும் மலர், மந்திரம்,மாவு, மாமிசம் மைதுனம். .அதன் பின்னர் ஏதேதோ ஐந்து ஐந்தாக வந்துகொண்டிருக்கிறது. ஐந்து கணவர்களாக உருவகித்திருப்பவை பல. ஐந்து செல்வங்கள். ஐந்து தொழில்கள். ஐந்து கீழ்மைகள் எல்லாமே கணவர்களாக வருகின்றன.

அதோடு ஐந்துமலர்கள். ஐந்து மணிகள், ஐந்து மரங்கள் என்று வந்தபடியே இருக்கின்றன. ஐந்தைப்பற்றிய ஒரு பெரிய மந்திரம் போல இருக்கிறது

இன்னும் பலமுறை வாசித்தபிறகுதான் ஒரு பட்டியலையே போடமுடியும்போல

ஆர்.சுப்ரமணியம்

நானன்றி நீயுமில்லை.



ஜெ

பத்தொன்பதாம் அத்தியாயத்தைப்பற்றி இவ்வளவு தாமதமாக எழுதுகிறேன். எழுதவேண்டும் என்று எண்ணினேன். ஆனால் எங்கே இதைத் தொகுத்துக்கொள்வது என்றே தெரியவில்லை. இப்படித்தோன்றியது

இளங்காலைகளின் அரசி.
காதலின் கனவுகளின் தென்றலின் தோழி.
மலர்ப்பொடியின் சிலந்திவலையின்
பட்டுக்கூட்டின் இளம்புழுதியின்
இறகுப்பிசிறின் மென்மழையின்
பனிப்பொருக்கின் இறைவி.

என்று தேவியை உருவகிக்கிறது ஒரு மனம். அது அப்படியே சென்று உச்சகட்டத்தில் இன்னொரு அனுபவத்தை அடைகிறது


தோலுரிந்த நாகங்கள் நெளியும் வழுக்கு.
பீளையும் சலமும் குழம்பும் சழக்கு.
ஐந்து பேரிடர்களின் அரசி.
பிறப்பு, நோய், மூப்பு.
துயர்,இறப்பென்னும் ஐந்து அரக்கர்கள்
புதைகுழி புளந்து வேர்ப்பிடிப்பறுத்து
எழுந்து வருகின்றார்கள்
சீழ்சொட்டும் கைகளுடன் உன்னைத் தழுவுகிறார்கள்.
உன் ஐந்து வாயில்களிலும் புணர்கிறார்கள்.
மலநீரிழியும் மலையில் ஏறும் புழுக்கள்.
கழிவுப்பெருக்கே, இழிமணச்சுழியே
கீழ்மைப் பெருங்கடலே

இந்த இரண்டு அனுபவங்களையும் சமன்படுத்தி ஒரு உச்சநிலையை அடைகிறது அந்தமனம்

இவையனைத்தும் நானே.
நானன்றி ஏதுமில்லை.
தேவி, நானன்றி நீயுமில்லை.
ஓம் ஓம் ஓம்!

இந்தப்பயணமாக இந்த அத்தியாயத்தை ஒருமாதிரி வகுத்துக்கொண்டேன். இனிமேல்தான் ஒவ்வொன்றாக வாசித்து அர்த்தம் கொள்ளவேண்டும்

ஜெயராமன்

வெண்முகில் நகரம்-13-இரண்டு கை


அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

காதல் என்றால் என்ன? காமம் என்றால் என்ன? எவ்வளவு சொன்னாலும் எழுதினாலும் தொடமுடியாத உயரம் அது. சுருக்கமாக இப்படி புரிந்துக்கொள்கின்றேன்.
ஒரு பெண்ணுக்கு வலிக்கும் என்று நினைத்தால் காதல். ஒரு பெண்ணை வலிக்கவைக்கவேண்டும் என்று நினைத்தால் அது காமம். வெண்முரசு அப்படித்தான் எனக்கு காட்டி உள்ளது.

வலியில் ஒரு கை தன்னை தாங்கவேண்டும் என்றும், ஒரு கை தன்னை வலிக்க வைக்கவேண்டும் என்றும் பெண் மனம் நினைக்கின்றது. அந்த இரண்டு கையும் கொண்ட மனிதன்தான் நல்ல கணவன். நல்ல கணவனுக்கு கூட அந்த இரண்டு கையும் இருக்கா என்று சொல்லமுடிவதில்லை. தாங்க பழகிய கை வலிக்க வைப்பது இல்லை. வலிக்க வைக்கும் கை தாங்குவதில்லை. பெண்மை ஒரு கையையே இரு கையாகக்கொண்டு நிறைவடைகின்றது. எங்கோ ஒரு நிறைவடையாத பெண் கீழ்மகள் ஆகின்றாள்.

காலம்காலமாக நமது மண்ணில் நடக்கும் ராமநாடகம் சொல்வது என்ன? மாற்றான் மனைவிக்கு ஆசைப்பட்டு தானும் அழிந்து, தனது குலத்தையும் அழித்தான் ராவணன் என்று சொல்கிறது. எங்கள் ஊரில் அண்ணனும் தம்பியும் சம்பூரணராமயணம் நடிப்பார்கள். தம்பி ராமன், அண்ணன் ராவணன். அண்ணன் பிள்ளைக்கு கல்யாணமாகி குழந்தைகள் இருக்கின்றது. நாடகம் நடத்தபோன இடத்தில் தனது குழந்தை, குடும்பத்தைவிட்டுவிட்டு வந்த பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துவந்து வைத்து கட்டிய மனைவியோடு வைத்து குடும்பம் நடத்தினார். அவரைப்பார்க்கும்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன். இராவணன்  இன்னும்  உயிரோடுதான் இருக்கிறான்.  ராமநாடகம் சொல்லும் நீதி மட்டும் ஏன் செத்து செத்து விழுந்துக்கொண்டே இருக்கிறது? கீழ்மையில் உள்ள சுவையை மனிதன் சுவைப்பதுபோல் மிருகங்கள்கூட சுவைப்பது இல்லை.   கீழ்மையின் சுவைக்கு மனிதன் கொடுக்கும் விலையை கடவுளால்கூட கணக்குப் பார்க்கமுடியாது. 

கங்கையில் நீந்தும் திரௌபதியை அவள் எழும் இடங்களில் எல்லாம் தன் கைக்கொண்டு தாங்கினான் பீமன் என்ற வரிவரும்போதெல்லாம் என்ன ஒரு தாய்மை என்று மகிழ்ந்தேன். கட்டிலில் தொட்டிலில் வீட்டினில் மனைவியின் வலியறிந்து தாங்கும் பொழுதெல்லாம் தன்னை அன்னையாகநினைக்கும் கணவன் இதயத்தில் சுரக்கும் காதலுக்கு மண்ணும் விண்ணும் ஈடாகுவதில்லை. அங்கு உடல் மறந்து அகம் மலர்ந்துவிடுகின்றது. மனைவி கணவன் நெஞ்சில் உதைத்து துள்ளும்போதுகூட அவனுக்கு உடல் அங்கு இல்லை உள்ளமே இருக்கிறது. திரௌபதி பீமனிடம் காண்பது வலியறியும் கை. தாயின் கை.

திரௌபதி தருமனுடன் கூடியதில், பீமனுடன் கூடியதில் உடல் எரியும் அர்ஜுனன் இன்று மாயையுடன் கூடியதில் திரௌபதி உடல் எரிகின்றாள் என்பதை அறிந்து உடல் முழுவதும் உவகை நிறைந்திருப்பதை உணர்கின்றான். திரௌபதி அர்ஜுனனுக்கு செய்யும் கொடுமைதான்.  அர்ஜுனன் திரௌபதிக்கு செய்யும் கொடுமையும். ஒருவரை ஒருவர் உடம்பாகவே பார்க்கின்றார்கள். உடம்புக்கு மேல் அவர்களுக்குள் எதுவுமே இல்லையா? அர்ஜுனன் திரௌபதியிடம் நிறைவடையாமல்போனது இந்த உடம்போடு மட்டும் பிணைந்த காமம், காமத்தால் வரும் சினமும். திரௌபதியும் அதே நிலையையே அர்ஜுனன் இடம் அடைகிறாள். காமம், காமத்தால் எழும் சினமும். இது ஒரு நாக பிணைப்பு வாழ்க்கை. உடம் இணைந்தே இருக்கம் ஒன்றை ஒன்று நோக்கி சீறிக்கொண்டு இருக்கும்.

அர்ஜுன்ன கை வலிக்க வைக்கும் கை. வலிக்கும்போதே தனக்கு உடம்பு என்ற ஒன்று இருக்கு என்று திரௌபதியை உணரவைக்கும் கை. அந்த கையை அவள் வெறுக்கலாம் வெட்டவும் துணியலாம் ஆனால் வெட்டவும் மாட்டாள் நீங்கவும் மாட்டாள்.

மானிட அகம் உள்ளமாகவும் உடம்பாகவும் மாறும் விந்தையை காதல் என்றும் காமம் என்றும் பீமன் அர்ஜுனன் இடத்தில் திரௌபதி நடந்துக்கொள்ளும் விதத்தில் உணர்ந்தேன். நன்றி ஜெ.

பெண் எவ்வளவு அசிங்கமாக அவமானப்படுத்தி திட்டினாலும் உரைக்க மாட்டேங்கறது அர்ஜுனனாக இருக்கும்போது. எவ்வளவு அடம்பிடித்தாலும் முறைத்தாலும் முரண்டுபிடித்தாலும்  கல்லாக போனாலும்  இந்திரனை அகலிகையும் விடுவதில்லை.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்

Monday, February 23, 2015

சில தாய் மகன் உறவு





குந்திக்கும் அர்ஜுனனுக்குமான உறவு சற்று வித்தியாசமானதாக பிரயாகையின் தொடக்கத்தில் சொல்லப்பட்டிருக்கும். குந்தி அர்ஜுனனை நெருங்க விடுவதில்லை. ஆனால் அடுத்தவர்களிடம் பேசும் போதும் அவன் மேல் ஒரு கண் இருக்கிறது. அவள் நகை அசைவுகளின் மூலமாய் அவன் எண்ணத்தை அறிகிறான் அர்ஜுனன். அர்ஜுனன் வார்த்தைகளுக்கு முகம் சிவக்கிறாள்.

இதே போல தான் சித்ராங்கதன் மீதும் சத்யவதிக்கு ஒரு விஷேச கவணம் இருந்ததாக ஞாபகம். இப்படி பட்ட உறவுகளை எப்படி புரிந்து கொள்வது. மகனின் மூலமாக அவனை அளித்த அவர்களின் விருப்பத்திற்குரிய ஆன் மகனை ரசிக்கிறார்களா?

ஹரீஷ்

குழும விவாதத்தில்

ஐந்துயோகம்



ஜெ

வெண்முரசில் அந்த கபால யோகி வந்தபோதே நினைத்தேன், பாஞ்சாலி விஷயத்துக்கு ஒரு யோக அடிப்படையையும் அளிப்பீர்கள் என்று. அதைத்தான் கண்டேன். அந்த யோக விவரணை அற்புதமாக இருக்கிறது. சொல்லப்போனால் அந்த சாமுண்டிக்கு பலி கொடுக்கும் இடம் முதல் ஐந்து அம்மன்கோயில்களில் கும்பிடுவது, சுயம்வரம் வரை வந்து இந்த 19 ஆவது சாப்டர் வரை ஒரு தனி நாவலாகத் தொகுத்துவிடலாம். தமிழிலே உள்ள முக்கியமான ஒரு யோகநூலாக அது இருக்கும் என்று நினைக்கிறேன். காமமும் யோகமும் கலந்த நூலாக இருக்குமென்று நினைக்கிறேன்

சரவணன்

அன்புள்ள சரவணன்

பாஞ்சாலியின் கதையில் எல்லாமே ஐந்து ஐந்து என இருக்கிறது. இது தற்செயல் அல்ல. பஞ்சசிகாதேவி என்ற பழைமையான தெய்வம் தாந்தீர்க மரபில் உள்ளது. [பஞ்சசிகை என்பது  குழந்தைகளை பையன்களாக ஆக்கும் சடங்கு. ஐந்து குடுமி வைப்பார்கள்] அதைப்போன்ற ஏதோ தொன்மையான சடங்குகள் இதற்குப்பின்னால் உள்ளன என்று கேரளதாந்திரீக மரபிலே சொல்வார்கள்.

ஜெ 

செஞ்சுடர் விழி



ஜெ,

ஒரு ‘ஆபாசமான’ உச்சகட்ட அழகுள்ள கவிதை என்று 19 ஆம் அத்தியாயத்தைச் சொல்லமுடியும். வாசித்துத் தீராதது. அதற்கு இந்திய மரபில் உள்ள அர்த்தங்களெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் நவீன இலக்கியத்திலே இதை எழுத ஒரு அழகியல்முறை இல்லை. நேரடியாக எழுதி கூசவைக்கலாம். ஆனால் இந்தவர்ணனைகள் எங்கோ செல்கின்றன. மனிதனை மிருகமாக்கி தூய்மைப்படுத்துகின்றன என்று தோன்றுகிறது


கரும்புகை எழுந்த செஞ்சுடர் விழி

இருகருஞ்செவிகளாடும் செம்மலர்சூடிய மத்தகம்

இருமரங்கள் ஏந்தி ஒருதேன்கூடு.

இரு தூண்கள் தழுவிப் பறக்கும கொடி.

செஞ்சிற்றலகு கூர்ந்த சிறுகுருவி அமர்ந்த கூடு.

புவிதிறந்தெழுந்த அனல்.

பூத்த மடல் திறந்தெழுந்த புனல்.

செம்மை சூடிய கருமுகில்.

வாய்க்குள் வாய்க்குள் வாயெனத் திறந்து குழவியை உண்ட செவ்விருள்

ஆனால் இந்த வரிதான் அதில் உச்சம். சொல்லிச் சொல்லி சொல்லமுடியாமல் நிறுத்திவிட்ட வரிபோலத் தோன்றியது இது

இங்குள்ளேன் என்னும் முகிழ். இங்குளதென்ன என்னும் இதழ்.

சாரங்கன்

வெண்முகில் நகரம்-17-தள்ளி நின்றுப்பார்த்தால்



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

இயற்கை வழங்கி இருக்கும் உணவும், செயற்கையாய் மனிதன் உருவாக்கும் உணவும் எத்தனை எத்தனை வகை. வகைக்கு எத்தனை எத்தனையோ சுவை ஆனால் பசி ஒன்றுதான். அதை உண்டாக்கவும் முடியவில்லை நிறுத்தவும் முடியவில்லை.

காமம் என்னும் பசிக்குதான் உலகில் எத்தனை எத்தனை உணவு. கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் உணவாகும் இந்த பசியில்தான் எத்தனை எத்தனை சுவை வேண்டி இருக்கிறது. காதுக்கு சொல்வேண்டும். வாயிக்கு சுவைவேண்டும், உடம்புக்கு உணர்வுவேண்டும், நாசிக்கு சுகந்தம்வேண்டும், கண்ணுக்கு காட்சி வேண்டும். இத்தனை பசிக்கும் உணவிட்டப்பின்பு அதிகமாகும் இந்த பசிதான் கொடூரப்பசி.
இந்த பசி என்னும் படிமத்தை சரியாகக்கண்டவன் சகாதேவன் மட்டும்தான். தருமன் சொல்லை ஆகுதியாக்கி அந்த தீயை வளர்க்கலாம் அல்லது அணைக்கலாம் என்று நினைக்கிறான். பீமன் உடம்பையே உணவாக்கி அதை வளர்க்கலாம் அல்லது அணைக்கலாம் என்று நினைக்கிறான். அர்ஜுனன் வீரத்தை ஆகுதியாக்கி அதை வளர்க்கலாம் அல்லது அணைக்கலாம் என்று  நினைக்கிறான். நகுலன் கொடுப்பதால் எடுப்பதால்,  பணிவதால் எழுவதால்  அதை வளர்க்கலாம் அல்லது அணைக்கலாம் என்று நினைக்கிறான். அவர்கள் அனைவருமே அவர்களுக்கு உரிய இடத்தை தாண்ட மறுக்கிறார்கள்.  அப்படித்தாண்டினால் என்ன ஆகும்? அவர்களின் பயன்பாடுகள் உடைப்பட்டுப்போகும். இணையில்லா அழகு ரோஜாவைக் கண் கண்டாலும் அதன் மணத்தை கண்கள் அறிவதில்லை.  ஐம்பொறிகளில் ஒவ்வொன்றும் அதற்கு உரிய வேலையைத்தான் செய்கிறது. ஒன்றின் வேலையை மற்றொன்று செய்யமுடிவதில்லை. திரௌபதியை மனைவியாக அடைந்த பாண்டவர்களும் ஐம்பொறிப்போல இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணத்தில் உயர்ந்து உள்ளார்கள். சகாதேவன் மட்டும் மாறுபாடு நிரம்பி உள்ளான்.

முன்னவர்கள் நால்வரும் கணவன் என்ற இடத்தில் இருந்தே திரௌபதியை நோக்க, சகாதேவன் மட்டும் தள்ளி நின்று நோக்குகின்றான். இந்த அற்புதம் அவன் கற்ற சோதிட நூல் தந்ததா? தனக்கு கதை சொல்லவந்த விறலியிடம் தானகா(சகாதேவனாக) இருந்து பாடும்படி அல்லது திரௌபதியாக இருந்து பாடும்படி சொல்கின்றான். அதற்கு விறலி மறுக்கும் தருணங்கள் இரண்டும் விறலி இல்லாமல்போகும் கணம் என்பதை அறிந்து விறலியை விறலியாக இருக்க வைத்து அவள் பிறந்த விசாக நட்சத்திரத்தில் இருந்து கதையை சொல்லச்சொல்லும் இடத்தில் சகாதேவன் விறலியை வானில் தூக்கி வைத்துவிடுகின்றான்.

தூரத்தில் உயரத்தில் இருக்கும் அணைத்தும் மகத்துவம் நிரம்பியவைகள். தூரத்தில் உயரத்தில் இருப்பதாலேயே கீழ்மைகளை மறைத்துக்கொண்டு மகத்துவங்களை வெளியிடும் அற்புதங்கள் அவைகள். சகாதேவன் விறலியை உயரத்தில் வைத்ததுபோலவே திரௌபதியையும் தூரத்தில் உயரத்தில் வைத்துப்பார்க்கின்றான்.
இந்திரன் உயரத்தில் இருப்பவன் அவன் கதைப்படி காமத்தால் கீழ் இறங்கி கீழ் இறங்கி வந்து கீழ்மகனாகின்றான். இந்திரப்பதவி என்பது எத்தனை பெரியது.நூறு அஸ்வமேதயாகம் செய்து அடையக்கூடியது. நூறு அஸ்வமேதயாகம் என்பது அளவுக்கடந்த உழைப்பின் வெளிப்பாடு. அந்த உயர்ந்த பதவியை அடைந்த இந்திரன்போல் இன்னொரு கீழ்மகன் இல்லை என்பது தான் காவியங்கள் காட்டும் உச்சம்.  அக்கினி அருகில் இருப்பவன் செயல்மூலம் தூரத்தில் வைக்கப்படுகின்றான் உயரத்திற்கே செல்கின்றான். ஒவ்வொரு முறையும் வணக்கத்திற்கு உரியவன். இந்திரனை விலக்குவதுபோல் விலக்கமுடியாதவன் அக்கினி. இந்த இடத்தில் அர்ஜுனனை வென்று நிற்கும் சகாதேவன் பாராட்டுக்கு உரியவன். இந்த இடத்தில்  வென்று நிற்கும் சகாதேவன் வென்று நிற்கும் இடத்திலே மகன் என்று காட்டும் வடிவாகி நிற்பவன்.

மனைவியை அன்னை என்று கண்டுகொண்ட கணவன் ஆசிர்வதிக்கப்பட்டவன். பெண் அனைத்தையும் தியாகம் செய்யும் பெரும் வல்லமைக்கொண்டவள் அதனால்தான் பெண்ணுக்கு தவம் தேவை இல்லை என்று உலகம் சொல்கிறதோ?  பெண்ணால் தியாகம் செய்ய முடியாத ஒன்று அவர்களுக்குள் இருக்கும் கன்னி என்னும் தேவியைத்தான் என்று நினைக்கின்றேன்.

பாஞ்சாலியைப்பற்றிச்சொல்லும்போது “ஐவருக்கும் பத்தினி அழியாத கன்னிகை” என்று சொல்வார்கள். அதைக்கண்டுக்கொண்ட சகாதேவன்தான் திரௌபதியின் கணவனும் குழந்தையும்.

சகாதேவன் பாக்கியவான்தான் அதனால்தான் தனக்கான கதையை தானே தேர்ந்து எடுக்கிறான்.
இந்த இடத்தில் முடிக்க நினைக்கும்போது ஒன்ற தோன்றுகின்றது  பாண்டவர்கள் ஒவ்வொருவரும் கேட்கும் கதையை கொண்டு ஒரு ஆராட்சி செய்யலாம். மகாபாரதம் ஏன் எழுதப்படவேண்டும் என்று மீண்டும் காட்டிப்போகின்றீர்கள் ஜெ.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.

ஒற்றைப்பெருஞ்சொல்லின் மீதான கடும்பித்து(வெண்முகில் நகரம் அத்தியாயம் பத்தொன்பது)





அன்பு ஜெயமோகன்,
         
வெண்முகில்நகரத்தின் பத்தொன்பதாம் அத்தியாயம் பெரும்பித்தின் உச்சம். அறிவின் துணைகொண்டு ஒருவனால் அவ்வத்தியாயத்தில் நுழையவே முடியாது. சொல்லப்பட்ட திசைகளின் வழியாக சொல்லப்படாத திசைகளைக் கண்டடையத் தவிக்கும் ஒருவனின் அகப்பித்து அது. அதன் காட்சிகளுக்குள் புகுபவனும் வெளியேறுபவனும் பித்தனாகவே இருக்கமுடியும். பித்தனன்றி ஒருவனாலும் அவ்வத்தியாயத்தில் நுழைந்துவிடவே முடியாது.
         
சொற்கள் இறைந்து கிடக்கின்றன. எனக்கான சொற்களைத் தேடிக்கொண்டே நகர்கிறேன். ஒவ்வொரு சொல்லும் தன் தனித்துவ ஒளியால் என்னைத் தடுமாறச் செய்தபடியே இருந்தன. சீராய் வரிசையாய் நகர்ந்து கொண்டிருக்கும் சொற்களில் புதுப்புது அர்த்தங்கள் ஒளிர்ந்து மறைந்தபடியே இருக்கின்றன. சொற்கள் வெவ்வேறாக இருந்தாலும் அதன் மூலம் ஏதோ ஒரு ஒற்றைப்பெருஞ்சொல்லாகவே இருக்க முடியும் என்றே நானும் நம்புகிறேன். எனக்கான ஒற்றைப்பெருஞ்சொல்லைக் கண்டடைந்து கொண்டால் போதும். அது நான் தேடும் சொற்களைத் தனக்குள்ளிருந்து வெளித்தள்ளிவிடும். உங்களுக்கான ஒற்றைப்பெருஞ்சொல்லில் இருந்து சொற்கள் தானாகக் கொட்டத்துவங்கிய அற்புதமே பத்தொன்பதாம் அத்தியாயம்.
         
விடுபட்டுவிட முடியாத பெரும்பித்திலிருந்து வெளியேற கவிதையும், ஓவியமும், இசையும், நடனமுமே துணையாய் அமைகின்றன. பெரும்பித்தர்களே சிறந்த கலைஞர்களாக இருக்கின்றனர். பெரும்பித்தே ஒருவனை அவனின் அடையாளங்களிருந்து விலக்கி அலைக்கழிக்கிறது. அவ்வலைக்கழிப்பில் திகைக்கும் ஒருவன் கலைகளின் வழியாகவே அதிலிருந்து வெளியே வருகிறான். உங்களுக்கான ஒற்றைப்பெருஞ்சொல் தரும் அதிகப்படியான அலைக்கழிப்பாலேயே அதற்கும் உங்களுக்குமான உறவை உங்களால் கண்டுகொள்ள முடிந்திருக்கிறது. அவ்வுறவை உணர்ந்த கணமே அப்பெருஞ்சொல்லாகவே மாறும் நீங்கள் எவ்விதத் தீர்மானமும் இன்றி சொற்களைக் கொட்டத் துவங்குகிறீர்கள். ஒளியோடு வரும் அவற்றின் நடுவே நிற்கும் நாங்கள் விதிர்த்துப்போகிறோம்.
         
இயல்பாய் விழும் மழைத்துளிகளை ஒத்திருக்கும் அவை எங்களுக்குள் நிரம்பிக் கொண்டே இருக்கின்றன. எத்துளியைக் கொள்வது, எதை விடுவது என எங்கள் அகம் திணறுகிறது. இங்கு. இங்கு. இங்கு. இக்கணம். சொற்களின் நடுவே பித்தனாய் நாங்கள் அலைபாய்கிறோம். கொஞ்சமும் இடைவேளையின்றி சொற்கள் எங்களைச் சூழ்ந்து கொண்டே இருக்கின்றன. மொழியென்றால் சொற்களா? இல்லை. சொற்களென்றால் அர்த்தங்களா? இல்லை. அர்த்தங்கள் என்றால் பொதுவானவையா? இல்லை. மொழியும், சொற்களும், அர்த்தங்களும் அவரவர்க்குரியவை. உங்களின் பெரும்பித்தில் இருந்து எழுந்தபடியே இருக்கும் சொற்களில் எவ்வித அதிகாரமும் இல்லை. ஆம், அச்சொற்களில் பொதுவெனக் கொள்வதற்கான எவ்விதப் புனிதமும் பூசப்பட்டிருக்கவில்லை. அதனாலேயே அவற்றின் ஒளியில் நாங்கள் திகைக்கிறோம். உங்கள் சொற்களில் உங்கள் அர்த்தங்களை நாங்கள் ஒருபோதும் அறிவதில்லை. மாறாக, உங்கள் சொற்களில் எங்கள் அர்த்தங்களையே தேடிச்சிலிர்க்கிறோம்.
         
சொற்கள். சொற்கள். எங்கு நோக்கினும் சொற்கள். புதுமண் வாசம். அதிகாலைப்பொழுதின் தூய்மை. முளைக்கும் கதிரவனின் குழந்தைமை. நிறைந்து மலர்ந்திருக்கும் காற்றின் குளிர்ச்சி. நெருக்கமாய் நிற்கும் மலர்களின் நறுமணம். சொற்கள். சொற்கள். எங்கு நோக்கினும் சொற்கள். கால்களைச் சுழற்றியாடும் பேரின்ப நடனம். உந்தியிலிருந்து வெளிப்படும் ஏகாந்த இசை. இலக்கணமறியாச் சொற்களின் கூட்டின் உன்னதக் கவிதை. சிதறடிக்ககப்பட்ட வண்ணங்களில் இருந்து மகத்தான் ஓவியம். சொற்கள். சொற்கள். எங்கு நோக்கினும் சொற்கள். காமச்சூடு. அன்பின் குளிர்ச்சி. ஆணவத்தின் இருட்டு. பகையின் கெக்களிப்பு. வஞ்சத்தின் புன்னகை. உறவின் ஏமாற்றம். நட்பின் பிரிவு. காதலின் குழப்பம். பக்தியின் அச்சம். ஞானத்தின் கர்வம். சொற்கள். சொற்கள். எங்கு நோக்கினும் சொற்கள்.  
         
சொற்களில் காமமுற்று சொற்களைத் தின்று சொற்களுக்கு ஏங்கி சொற்களில் மயங்கி சொற்களுக்கு பயந்து சொற்களை உருவாக்கி சொற்களைத் தொலைத்து.. சொற்களாகவே இருக்கிறோம் நாம். என்றாலும், ஒவ்வொரு சொல்லும் ஒரே அர்த்தத்தைக் கொண்டாதாயில்லை. அதைப்புரிந்து கொண்டால் போதும். சொற்களால் எவ்வித ஆபத்தும் நமக்கு நேர்ந்திடாது.


முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.